Tuesday, September 6, 2016

தமிழின் தொடர்ச்சிக்காக ...

தமிழின் தொடர்ச்சிக்காக ...  (1)

--------------------------------------------------------------


புலம்பெயர்ந்து குடிகொண்ட நாட்டில் தாய்மண்ணின் மொழியின் தொடர்ச்சிக்காக நான் மேற்கொண்டுவரும் முயற்சிகளுள் ஒன்று தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிப்பது. 

தனிப்பட்ட முறையில் செயல்பட்டுவந்தேன். சென்ற ஆண்டில் (அக்டோபர், 2015) முதன்முதலாகப் பொதுமன்ற அளவில் செயல்பட்டேன். திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் நடத்தினேன். நண்பர்கள் பலரும் மிக்க ஆர்வத்துடன் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தார்கள். 

இந்த ஆண்டு (செப்டெம்பர்-3, 2016) புதியவகை முயற்சியை மேற்கொண்டேன் -- இசை, இலக்கியம், இலக்கணம் இவற்றோடு கணினியையும் இணைத்துச் செயல்படும் ஆர்வலர்களை அறிமுகப்படுத்த விரும்பினேன். முயற்சி வென்றது!


எல்லாருக்கும் ...

நிறைந்தது வயிறு 
நிறைந்தது செவி 
மகிழ்ந்தது மனம் 
மலர்ந்தது முகம் 
குளிர்ந்தது உள்ளம் 
பருத்தது உடல் 

... ... ... 

"முன்காணாச்சோறு" (pot luck) என்று பெயர் படைத்தோம். யார் என்ன கொண்டுவருகிறார் என்று மற்றவருக்குத் தெரியாது. சமைக்கப்பட்ட உணவுகளில் 99% ஆடவர் பொங்கிக்கொண்டுவந்தவையே! (இது அன்னை சிவகாமியின் திட்டம்!) ஆகவே "முன்காணாச்சோறு" என்ற பெயர் நன்றாகப் பொருந்தியது. 

முதலில் வயிற்றைக் கவனித்துக்கொண்டோம். 

சோறு, புளியோதரை, சப்பாத்தி, உருளைக்கிழங்குப்பொரியல், வெண்டைக்கறி, பூசணிச்சாம்பார், காளான் மசாலா, பச்சைப்பயறு குழம்பு, மொச்சை மசாலா, எலுமிச்சை ரசம், காய்க்கலவை, பழக்கலவை, உப்புக்கொழுக்கட்டை, சிறுதானியக் குழிப்பணியாரம், மண்டி, அவல் இனிப்புப்பொங்கல், தயிர், அப்பளம், காப்பி, தேநீர், நொறுக்குத்தீனி ... என்று சங்கக்காலப் பண்ணன் சிறுகுடி-போல ஆரவாரத்துடன் ஆர அமர உண்டோம். 

பிறகு ஆரவாரமில்லாமல் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து.

தஞ்சைத்தமிழர் தில்லைக்குமரன் - நிர்மலா (ஊர் தெரியவில்லை) இணையரின் செல்வி யாழினியின் நல்லதொரு தமிழ்ப்பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. 





அடுத்து வேல்முருகன் என்ற இளைஞரின் தமிழ்ச்செங்கோவைத் தேடுபொறியின் அறிமுகம். 

தொடர்ந்து திருமிகு சற்குணா பாக்கியராஜ் அவர்கள் அன்றில் பறவையின் உண்மையான (இலக்கியத்தில் காணும் கற்பனையற்ற) நிலையை மிக அழகான படங்களுடன் விளக்கினார். அன்றில் பறவையின் இருவகைக் குரலையும் கேட்டோம்! 

பிறகு இளைஞர் ராஜா மணியவர்கள் தமிழ் யாப்பிலக்கணத்தை எளிமையாகக் கற்றுக்கொடுக்கும் மென்பொறியை இயக்கிக்காட்டினார்.

பத்துமணித்துளிகள் இடைவேளை.

சிவகாமி-சொக்கலிங்கம் இணையர் சில ஆண்டுகளுக்குமுன் தங்களுக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பில் (ஒரு மாதமே ஆன வெற்றிவேல் என்று பெயரிடப்பட்ட மகனை இழந்த) தங்களை இழக்காமல் தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்க்கல்வி பயிலும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் கான் அகடமிப் (KHAN Academy) பாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிவரும் தங்கள் வெற்றிவேல் அறக்கட்டளை பற்றிச் செவ்வையாக எடுத்துச் சொன்னார் முனைவர் சொக்கலிங்கம். இந்த இணையர் நமக்கு நல்ல வழிகாட்டி.

தொடர்ந்து ... காரைக்காலம்மையாரை நினைவூட்டும் வகையில் உடலாலும் உள்ளத்தாலும் சிவனில் தோய்ந்து உருகிவரும் செல்வி பொற்செல்வியவர்களின் இனிய திருவாசக இசை! பார்க்கவும் ஒரு யோகினி-போல இருக்கிறார். பழகுதற்குக் கனிவானவர். இசையில் உருகுகிறார். பிறரையும் உருக்குகிறார்.

ஆக, இவ்வளவு இனிய விருந்துக்குப்பின் ... என் பங்குக்கு இறையனார் களவியல் செய்தியொன்றைச் சொல்லித் தொல்காப்பிய நூற்பா ஒன்றை விளக்கினேன். 

ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் முகத்தில் அடித்தாற்போல் பிறர் யாரும் எழுந்துபோகவில்லை என்பது மகிழ்ச்சியான நாகரிகமான செய்தி! 

நிறைவுநிகழ்வாக ... காப்பி/தேநீர்/நொறுக்குத்தீனி.

சில படங்கள் இங்கே:

1. தீவிர ஆலோசனைக்குழு! திருமிகு செல்வியர் சற்குணா-சிவகாமி. இவர்களுடைய உதவியில்லாமல் என்னால் இந்த நிகழ்ச்சியைக் கற்பனை செய்திருக்கமுடியாது.



2. வேல்முருகனவர்களின் வெள்ளோட்டம்.



3. என் அருமை மாணவன் (இப்போது Ph.D, M.D!) விக்ரமின் தாய் திருமிகு மாலினி ஜானகிராமன். கணவர் செய்துகொண்டுவந்த புளியோதரையை எனக்கு ஒரு தட்டில் வைக்கிறார்.



4. பிறரைச் சுட்டிக் கையைக் காட்டிவிடும் கவிஞர் இவர், திரு தில்லி துரை!



5. தில்லிக்கவிஞருக்கு 'உபதேசம்' போதிக்கும் திரு குமார் குமரப்பன் + நண்பர்கள்.



பிற படங்களை எடுத்த செல்வி சாந்தி புகழ் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம்:

https://photos.google.com/share/AF1QipMxnNbXOeFcmHAi0sVWG38X7nByPvNSShXkr5dOwUBus4DWr2lG2QF0vKBQ8IEB6Q?key=R005UmNkSWlMeFBtS29BNmxkUWVuZmFiQ0FtbDdB 

முனைவர் சொக்கலிங்கம், அவர்மகள் செல்வி சுருதி ஆகியோர் எடுத்த காணொலிகளைக் கூடிய விரைவில் இணையத்தில் ஏற்றுவார்கள் என்று நம்புகிறேன்.


++++++++++

என் உடல்தெம்பு ஒத்துழைக்காவிட்டாலும் உள்ளத்து ஊக்கம் என்னை முற்செலுத்தியது. 

பலவகையில் மனநிறைவு. பலரும் முதல்முறையாக ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். வயிற்றுக்கும் செவிக்கும் கண்ணுக்கும் நல்ல விருந்து. இளையதலைமுறையையும் புதிய படைப்பாளர்களையும் ஊக்குவிக்க எனக்கு நல்லதொரு வாய்ப்பு. 

எல்லாவற்றுக்கும் மேலாக ... எல்லாரும் என் கடுமையான 'சட்டதிட்டங்களுக்கு' உடன்பட்டு ;-) ... தரையில் உட்கார்ந்து, ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தங்களுக்குள் சளசளக்காமல், குறுக்கே பேசாமல், இடையில் எழுந்துபோகாமல், கைப்பேசி-போன்ற கருவிகளுடன் உறவாடாமல், ஒளிப்பதிவுக் கருவிக்குமுன் நடந்துபோகாமல், சிலை-போல் அமர்ந்து எல்லாப்படைப்பாளரையும் ஊக்குவித்தது ... எனக்கு மாபெரும் வெற்றி!!!

இளைஞர் வேல்முருகன் அண்மையில்தான் நெடுந்தொலைவில் புதுமனை புகுந்திருக்கிறார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக வண்டியோட்டி வந்து எல்லா நிகழ்ச்சிகளையும் திரையிட உதவி செய்தார். அதோடு நில்லாமல் ... 'அம்மா, நீங்க இணையக்குழுமங்களில் எழுதுவதைப்பார்த்துப் பயந்துபோயிருந்தேன். நேரில் பார்க்கும்போது அவ்வளவு கடுமையானவராத் தெரியவில்லை' என்று எதையோ சொல்லி என்னை உச்சிகுளிரவைத்துவிட்டார்!!! அதுக்காகவே அவருக்குக் கறிவேப்பிலைக் கன்று ஒன்று புதுவீட்டுத் தோட்டத்தில் வைக்கக் கொடுத்தனுப்பினேன். வாழ்க வேல்!  

நண்பர்களே, நீங்களும் உங்கள் இருப்பிடங்களில் இப்படியாகப்பட்ட கூட்டங்களை நடத்துவது தமிழுக்கு நல்லது, இளையதலைமுறைக்கு நல்லது.





Friday, June 17, 2016

ஒரு மூதாட்டியின் மசக்கை ...

ஒரு மூதாட்டியின் மசக்கை ...
--------------------------------------

யார் அந்த மூதாட்டி? வேற யாரு, நானே நானே!

என்ன இந்த வயசுலே மசக்கையா! அமெரிக்காவுலே என்னனாலும் எப்பனாலும் நடக்கும்-போல! 


ஆண்டவா, ஈதென்ன மதுரைக்கு வந்த சோதனை?!

கவலைப்படவேண்டாம் ... கொஞ்சம் 'கவித்'துவமா எழுதப்பாத்தேன், அம்புட்டுதேன்!

++++++++++

நெடுங்காலமாகவே ஒரு வாழைக்கன்று வேண்டுமென்று வேண்டியிருந்தேன். வெளிப்படையாகக் கேட்டபோதும் கிடைக்கவில்லை! ;-)

சரி, வாழையிலையாவது கிடைத்தால் நல்லா'ருக்கும் என்று நினைத்தேன். அண்மையில், தோழி சற்குணா பாக்கியராஜ் அவர்களின் கைப்பக்குவத்தால் விளைந்த வாழைமரத்து இலைகள் கிடைத்தன.


++++++++++



சிறுபிள்ளைப்பருவ நினைவுகள் என்னை ஒருபோதும் மறந்ததில்லை. என் சிறுபிள்ளைப்பருவத்தில், எங்கள் குடும்பம் இருந்த மதுரையிலிருந்து சொந்த ஊரான வீரவநல்லூருக்கு அடிக்கடிப் புகைவண்டிப்பயணம். அந்தக் காலப் புகைவண்டி பற்றி இன்று பலருக்கும் தெரியாது. 



அந்தக்காலக் கூட்டுக்குடும்பவாழ்க்கையில், அம்மா-அப்பாக்களுக்குத் தனிமை கிடைப்பது ரொம்பவும் அரிது. [எப்படித்தான் இந்திய மக்கள்தொகை இப்படிக் கூடிப்போச்சோ!] ஆனால், எங்க தாத்தாவுக்கு அறிவுக்கூர்மை மிகுதி. நைநை நச்சுநச்சு என்று தொணதொணத்துத் துளைத்தெடுக்கும் என் அண்ணனையும் என்னையும் விடியற்காலையில் 5-மணிக்கெல்லாம் கோயிலுக்குக் கிளப்பிக்கொண்டுபோய்விடுவார்; மாலையில், சர்க்கஸ் அங்கே இங்கே என்று வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிடுவார்! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அங்கங்கே கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு கிடைத்திருக்கும், ஆனால் romance-க்கு இடம் இருந்ததோ என்னவோ தெரியாது; அப்போ எனக்கு 10-வயதுக்குட்பட்ட பல ஆண்டுகள்.



தாத்தாவின் இன்னொரு "குயுக்தி." மதுரையிலிருந்து வீரவநல்லூருக்கு நாங்கள் போகும்போதெல்லாம் ... அண்ணனுக்கும் எனக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் இரண்டு தாள்களில் மதுரை-வீரவநல்லூர் ரயில்வண்டிப் பாதையில் இடைப்படும் ஒவ்வொரு நிலையத்தின் பெயரையும் எழுதிக்கொடுப்பார் (மதுரை->பசுமலை->திருப்பரங்குன்றம் ...). எங்களுடைய "ரயில்பாடம்" என்ன என்றால், ரயில்வண்டியின் சன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்து, தாத்தா குறித்த ஒவ்வொரு நிலையமும் வரும்போது அதை அவர் கொடுத்த தாளில் குறிக்கவேண்டும். ஊருக்குப் போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி. மதுரைக்குத் திரும்பி வந்த பிறகு சரியான விடைகளைப் பொருத்து காலணா, அரையணா என்று பரிசு கிடைக்கும். யேயப்பா ... 'நாலாட்டின்புத்தூர்' என்ற அந்த ஊரின் பெயர்ப்பலகையைப் படித்துப் புரிந்துகொள்ள எவ்வளவு ஆண்டுகள் ஆயின! அதெல்லாம் இன்பமான நிகழ்ச்சிகள்!



ரயில்வண்டிப்பயணத்தின்போது அம்மா-அப்பாவுக்கும் கொஞ்சம் நிம்மதி, எங்களுக்கும் பொழுதுபோக்கு! தாத்தாவுக்கு எவ்வளவு அறிவு! என் தாத்தா அருமைத்தாத்தா! 



++++++++++



மேற்சொன்ன ரயில்பயணத்தின்போது, சாத்தூரில் வெள்ளரிப்பிஞ்சு, மணியாச்சியில் முறுக்கு ... இப்படிச் சொந்த ஊர்க்காரங்களுக்கு வாங்கிக்கொண்டு போவது வழக்கம். சில சமயம் அம்மா சோத்துமூட்டை கட்டிக்கொண்டுவருவார்கள். சிலசமயம் ரயில்நிலைய உணவகங்களில் கிடைக்கும் பொதிசோறே உணவாகும். தாத்தா ரயில்துறையில் வேலைபார்த்ததால் அந்த நுணுக்கமெல்லாம் அவருக்குத் தெரியும்! மதுரையிலிருந்து கிளம்பும்போதே, பயணச்சீட்டு  வாங்கும்போதே, மணியாச்சிக்குத் தெரிவித்துவிடுவார் -- இத்தனைக்கட்டுப் பொதிசோறு வேணுமென்று. மணியாச்சி நிலையம் வந்தவுடன் ... நாங்கள் இருக்கும் பெட்டிக்குப் பொதிசோறு வந்துவிடும். 



இது எங்களுக்கு மட்டுமில்லை, எல்லாப்பயணிகளுக்கும் உண்டான வசதிதான். அந்த நிறுவனத்தின் பெயர் மறந்துபோச்சு -- SRR Room (Southern Railway Restaurant Room?) என்று நினைக்கிறேன், திட்டமாகத் தெரியவில்லை, மறந்துபோச்சு. பயணிகள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் அந்தந்த ஊர்களில் அவர்கள் குறிப்பிட்டு வேண்டிய உணவுப்பொட்டலங்கள் ரயில்பெட்டிக்கு வந்துசேரும்! என்ன அருமையான ஏற்பாடு!



அந்தப் பொதிசோற்றின் மணமும் சுவையும் அலாதி! சுடச்சுடப் பலவகை உணவுகள் கிடைத்தாலும் ... அந்தத் தயிர்ச்சோறு + எலுமிச்சை ஊறுகாய்ப்பொதியின் மணமும் சுவையும், 'இந்திரர் அமிழ்தம் இயையினும் வேண்டேன்' என்ற மனவுறுதியைக் கொடுத்துவிடும்! 



மேலே கட்டிய சணல்கயிற்றை அவிழ்க்கும் முயற்சி, பதிப்பகத்தின் அச்சு மை கசிந்த அந்தப் பிசுபிசுச்செய்தித்தாளின் மணம், பிரித்தவுடன் விரியும் வாழையிலையின் மணம், உள்ளே பொதிந்திருக்கும் தயிர்ச்சோற்றின் மணம், எலுமிச்சை ஊறுகாயின் மணம் ... இன்று நடிக்கப்படமுடியாதவை!



++++++++++



அண்மையில் சற்குணா பாக்கியராஜ் அவர்கள் கொடுத்த வாழையிலையில் என் சிறுபிள்ளைக் கனவை மீண்டும் காணமுயன்றேன்.



1. வாழையிலையில் பரப்பிய தயிர்ச்சோறு + திடீரென உருவாக்கிய எலுமிச்சை ஊறுகாய்:





2. வாழையிலைப்பொதி:





3. பொட்டலம்:





மகனிடம் கொடுத்தேன். தயிர்ச்சோறு என்று புரிந்துகொண்டான். 'கோயில் பிரசாதமா?" என்று கேட்டான். ரயில்பயணம் அறியாத அந்த high-tech பிள்ளைக்கு என் சிறுபிள்ளைப்பருவம் பற்றிச் சொல்லவேண்டிவந்தது!

++++++++++



இப்போது சற்குணா கொடுத்திருக்கும் வாழைக்கன்று ஒரு புத்திலை தந்திருக்கிறது.





தமிழ்மரபு வாழிய வாழியவே!

Saturday, March 28, 2015

கீரை -- பீட்ரூட் கீரை

பீட்ரூட் கீரையை மிக எளிய முறையில் பயன்படுத்துவது ...
--------------------------------------------------------------------------


இலை, தழை, கீரை வகைகளில் மிக நல்ல உயிர்ச்சத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கீரை வகைகளை ரொம்ப நேரம் சூடுபடுத்தி வதக்குவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

கூடிய மட்டில் கீரை வகைகளைப் பச்சையாக அல்லது இளஞ்சூட்டில் சிறிதே வேகவைத்து உண்பதே நல்லது என்பதே ... மூத்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது.

+++++++++++++++++++

நேற்று ஒரு சில அன்பு நண்பர்கள் எதிர்பாராத வகையில் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த பல காய், பழம் இன்ன பிற பொருள்களில் ஒன்று பீட்ரூட் கிழங்கு தழையுடன்.

[நன்றி: கலிஃபோர்னியா விரிகுடாத் தமிழ்ச்சங்கத் தலைவர் (Bay Area Tamil Manram) திரு ஆறுமுகம் பேச்சிமுத்து + அமெரிக்க ஹவாயித்தீவில் வாழ்ந்துகொண்டு சங்க இலக்கியச் செறிவை உலகமுழுதும் பரப்பும் தொண்டு செய்யும் திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கும்.]

இந்த இனிய தமிழரைப்பற்றி மேலும் அறிய:

http://www.bayareatamilmanram.org/about-us/committee.html

http://learnsangamtamil.com

+++++++++++++++++++

பீட்ரூட் தழையை அது வாடுமுன் உண்ணவேண்டும். அந்தக் கட்டாயத்தில் ... நான் செய்ததைக் கீழே சொல்கிறேன்.

1. பீட்ரூட் தழையை நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

2. நீண்ட காம்புகளை அரிந்து தனியாக எடுத்து வைக்கவும். வேறுவகைச் சமையலுக்கு உதவும்.

3. காம்பிலிருந்து இலைகளைப் பிரித்து எடுத்து, விரும்பியபடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்; ரொம்பத் தூளாக வேண்டாம்.

4. நறுக்கிய இலைகளை அடி தடிமனான ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தேங்காய்த்துருவல் (1 மேசைக்கரண்டியளவு; 1 table spoon) கலந்து, மிகச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கீரை குழையாமல் வேகவிடவும்.

5. கீரை குழையாமல் வெந்தவுடன் இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கீழே படம் பார்க்க:




குறிப்பு:

1. பச்சையாகவோ சமைத்தோ கீரைகளைப் பயன்படுத்தும்போது உப்பு வேண்டியதில்லை. விரும்பினால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

2. கீரையை வேகவைக்கும்போது குழையவிடாமல் சமைப்பது நல்லது.

3. மேலே சொன்ன முறையில் சமைத்த கீரையைச் சப்பாத்தி/ரொட்டி, சாதம்/சோறு ... இன்ன பிறவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்; தனியாகவும் சுவைக்கலாம்.



Saturday, February 28, 2015

காரட் -- வெள்ளைக்காரட்டும் ஆரஞ்சுநிறக்காரட்டும் 


சாதாரணமாகக் கிடைக்கும் இளஞ்சிவப்பு ஆரஞ்சுநிறக் காரட் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பதிவில் 'வெள்ளைக் காரட்' என்று நான் குறிக்கும் ஒரு காயை அறிமுகப்படுத்துகிறேன்.

இது ஆங்கிலத்தில் 'பார்ஸ்னிப் (parsnip)' என்று குறிக்கப்படும்.

இதன் படம்:





ஓ, அதென்ன பொத்தகம்? அதுவா. அது நான் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கிழித்துக்கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பொத்தகங்கள்; வையாபுரிப்பிள்ளையவர்களின் அருமையான பதிப்பு. என் துயர்தீர்க்கும் மருந்து. என் மேசையில் எப்பவும் இருக்கும். 




சரி, இந்த வெள்ளைக் காரட்டையும் நமக்குப் பழக்கமான மற்ற காரட்டையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். பல வகைகள் உண்டு. ஆனால் இங்கே ஒரு வகைச் செய்முறை.


கீழே காண்பது-போல் பார்செனிப்பைச் சீவிக்கொள்ளவும். தனிக்கோல் போல உள்ளது சீவ முடியாமல் நான் விட்டது. தனியே கடித்துச் சுவைக்கலாம்.





நமக்குத் தெரிந்த சாதாரணக் காரட்டையும் சீவிக்கொள்ளவும்.





மேற்சொன்ன இரண்டு சீவல்களையும் கலந்து, தேவையான அளவுக்கு எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்து ... கொத்தமல்லித்தழையை மேற்போக்காகத் தூவவும்.





[என்னிடம் இருந்தது இத்தாலியக் கொத்துமல்லித்தழை -- பார்செலி!]

இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்துக்குக் கண்ணுக்கு உவந்த சத்துள்ள சுவையான எளிதில் உருவாக்கக் கூடிய உணவு.

[அபாய அறிவிப்பு: ஏற்கனவே இனிமை மிகுந்தவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்.  சாதாரணக் காரட்டை விட, பார்செனிப்பில் இனிப்பு மிகுதி.]



Thursday, July 3, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5


8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5

(தொடர்ச்சி)

தனிக்கட்டுரை வழங்க எனக்கென ஒதுக்கியிருந்த நேரத்தில் யான் ஆங்கிலத்தில் வழங்கிய கட்டுரையின் தலைப்பு Hyperlinked Presentation of Tamil Poems

அதாவது, ஒரு தமிழ்ச் செய்யுளின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளைக் கணினியின் தொடுப்பு முறையால் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று விளக்குவதே இதன் நோக்கம்.

இதற்குக் கைக்கணினி தேவை, வெள்ளித்திரையில் வெளிப்படுத்த உதவும் கருவி தேவை. எனக்கு என்னென்ன கருவிகள் (hardware) தேவை என்று மாநாட்டு அமைப்பாளருக்கு எழுதி அவை கிடைக்குமா என்று கேட்டேன், கிடைக்கும் என்ற பதிலே வந்தது.

இங்கேயிருந்து நண்பர் ஜார்ஜ்-இடமிருந்து ஒரு கைக்கணினியைக் கடன்வாங்கிக் கொண்டு போய், தஞ்சையில் கிடைத்த கருவியுடன் இணைத்து வெள்ளித்திரையில் என் படத்தைக் காட்டினால் உருப்பட்டு வரவில்லை! [திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பு ஒத்துவரவில்லை என்றதுபோல் ஆகிவிட்டது! இந்த நகையைச் சுவைக்க முடியாதவர்கள் என்னைத் திட்டாமல் மேலே படிக்காமல் அமைதியாக ஒதுங்கிவிடவும்!] அவ்வளவு பாடுபட்டு அவ்வளவு தொலைவு சுமந்து கொண்டு சென்ற கணினிக்குப் பயனில்லை. ரொம்ப வருத்தம். 

சரி, என்ன மென்பொருள் (software) பயன்படுத்தினேன், தெரியவேண்டுமா? ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ‘தொடுப்பு அட்டை’ HyperCard (http://en.wikipedia.org/wiki/HyperCard) என்ற மிக அருமையான ஒன்று. அதைப் பயன்படுத்தி, நம்ம சங்க இலக்கியப் பாடல் ஒன்றை எடுத்து அந்தப் பாடலின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு இவற்றைக் கணினிமூலம் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று நிரலமைத்து ('program பண்ணி') ஓர் அருமையான கட்டுரையையும் விளக்கத்தையும் தயாரித்து வைத்திருந்தேன். 

கணினி நிரலின் சிறப்பே குறிப்பிட்ட சின்னங்களைச் சொடுக்கித் தேவையான பக்கத்துக்குப் போவதே. இந்த வித்தையெல்லாம் அங்கே தஞ்சையின் வெள்ளித்திரையில் வெளிறிப்போச்சுங்க. :-(  

கட்டுரை விளக்கத்தின் முதல் பக்கப் படம் இங்கே:



மேற்காணும் படத்தில் கீழ்வரிசையில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சிறு படத்தையும்/பொத்தானையும் அழுத்தினால் அந்தந்த இடத்துக்குப் போய்த் தேடிவந்த விளக்கத்தைப் பெறலாம். 


கட்டுரை வழங்கிய மதுரைக்காரி:




(தொடரும்)

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4


(தொடர்ச்சி)

1. பேராளர்கள் (delegates) தங்கிய இடத்திலிருந்து மாநாட்டுக் கட்டுரை வழங்கும் இடத்துக்குப் போக உதவிய வண்டிகள்.





2. யான் தங்கக் கொடுக்கப்பட்ட அருமையான 'சிக்'கென்ற கச்சிதமான வீடு. (அப்போதே அதை விலைக்கு வாங்கியிருக்கணும்! புத்தியும் பணமும் இல்லாமப் போச்சு!)




3. யான் தங்கியிருந்த வீட்டைப் பாதுகாத்து, அவ்வப்போது வந்து எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று  அன்பாகப் பேணியவர்.




(தொடரும்)




Wednesday, July 2, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3
----------------------------------------------

(தொடர்ச்சி)

இரண்டாம் நாள் காலை. உறக்கமில்லாத நிலையில் எழுந்திருந்து பொதுவாழ்வுக்காகத் தயாராகி, தங்கியிருந்த வீட்டிலிருந்து சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு பெரிய கூட்டம். பிறபுல அம்மையார் (மலேசியா? சிங்கப்பூர்?) ஒருவர் “We have to boycott this conference” என்று ஆங்கிலத்திலும் மலேசியத் தமிழிலுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. அப்போது புரிந்துகொள்ள நேரமும் இல்லை. பின்னாளில் தெரிந்தது உண்மையோ இல்லையோ என்று தெரியவில்லை. பிற நாட்டுத் தமிழர் சிலருக்கு ‘வீசா’ கிடைக்காத நிலையாம். 

********************

யான் தங்கியிருந்த இடத்திலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு எங்களைக் கொண்டு செல்ல மிக நல்ல வண்டிகள். 

நல்ல பாதுகாப்பான வரவேற்பு. உள்ளே போனதும் அவரவர் விருப்பப்படி அரங்கங்களில் நுழைந்து செவிக்குணவு பெற்றோம். இடையூறுகள் குறைவு.

மாநாட்டைத் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளியில், நல்ல பாதுகாப்போடு, அமைந்தன.

சில படங்கள் இங்கே:



1. மாநாட்டு அரங்குக்குப் போகும் வழி.





2. மாநாட்டு முகப்புப் பந்தல். 





3. மாநாட்டுக் காப்பாளர்.







4. முதல்வரின் திறப்புக்காகக் காத்திருக்கும் மக்கள்.








5. முதல்வரின் திறந்துரை. 



(தொடரும்)