Monday, May 20, 2013

இருக்கும்போதே வாழவை ...

சிலையமைப்பது, மணிமண்டபம் அமைப்பது போன்ற வழக்கங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. நான் வித்தியாசமானவள். இந்த வழக்கங்கள் என்னைக் கவருவதில்லை. 

யாருக்குச் சிலை வைக்கிறார்களோ அவர் உயிரோடு இருந்த காலத்தில், மக்கள் அவரை எந்த அளவு மதித்திருப்பார்கள், அவருக்கு எந்த அளவு உதவியிருப்பார்கள் என்று தெளிவாகத் தெரிவதில்லை. சிலர் அன்றும் இன்றும் இருக்கலாம் -- அதாவது அந்த ஒருத்தர் இருந்த காலத்தில் இருந்தவர்களே இன்றும் இருக்கலாம். 

இதையும் இதுபோன்ற கருத்தையும் உள்ளடக்கி ஒரு பாட்டு எழுதினேன் 1992-இல் ஒரு மாநாட்டு மலருக்காகக் கேட்டார்கள் என்று. அது இங்கே: 

************************ 

இருக்கும்போதே வாழவை
-------------------------------------- 

கண்ணகிபோல் நீயெனக்குக் கல்லெடுக்காதே
காவிரிக்குச் சோழனெனக் கரையும் கட்டாதே
காரிகையின் கீரந்தையாய்ச் சொல்வரையாதே
காயசண்டிகை காதலனாய்க் கண்ணிழக்காதே

திலகவதித் தத்தனைப்போல் தத்தளிக்காதே
தேவந்திபின் தீர்த்தங்களில் தாழவைக்காதே
மாதவியாய் மனங்கலங்கி மாயச்செய்யாதே
மணிமேகலைக் குமரிபோலக் குமையவிடாதே

பொறுமை கண்டாள் சீதையான வைதேகி
சிறுமை கண்டாள் த்ரௌபதியாம் பாஞ்சாலி
வறுமை கண்டாள் விதர்ப்பராணி தமயந்தி
வெறுமை கண்டாள் அகலிகையாம் முனிமனைவி 

தமிழ்மகனே தனிச்சிந்தை உனக்களிக்க
அமிழ்தினிய உலகொன்று பெண்காண
மனங்கொள்ளும் கதையில்லை வளர்நாட்டில்
தனியொருவழி படைப்பாய்நீ வாழ்நாட்டில் 

******************************************** 

மேலே காணும் பாட்டைப் புறந்தள்ளிவிட்டார்கள், 'சோகப்பாட்டு' என்று! ;-) வேறு 'மகிழ்ச்சியான' பாட்டு ஒன்று எழுதித்தரக் கேட்டார்கள். சரியென்று இன்னொரு பாட்டு எழுதினேன். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வெளியிட்டார்கள்! அது இதோ:


இங்கே வாழும் தமிழருக்கு
--------------------------------------- 
(இங்கே சீர் பிரித்துத் தந்திருக்கிறேன். படிக்கும்போது நல்லோசை கிட்டும். 1992-இல் நான் இதைப் படித்தபோது கூட்டத்தில் சிலர் மனம் நெகிழ்ந்து கண்கசிந்தனர்!) 

***************
கங்கைக் கரையறியேன் காவிரி கண்டதுண்டு
பொங்கிவரு பொருநைஎன் தாய்மடியும் தந்தைதோளும்
தங்குபுகழ் வையைவழித் தமிழ்தொடர்ந்து
இங்கோடும் Schuykill-மேல் இடம்கண்டேன்
மங்காத Potomac தலைநகரில் சீர்தந்தாள்

தமிழெனக்குத் தாய்ப்பாலின் தனித்தூய்மை
கனிபோலச் சுவைகாட்டிக் களிப்பூட்டும் தேன்இனிமை 
பனிபோலும் படர்மாற்றி உரம்போடும் பெருவலிமை
குனிவில்லாத் தலைதந்து நிறைகாக்கும்  நல்துணைமை

தொகைபாட்டு கீழ்க்கணக்கு காப்பியங்கள்
வகைவகையாய் ப்ரபந்தங்கள் இலக்கணங்கள்
மிகையாகாத் திருமுறைகள் தனிப்பாடல் எனத் 
தகையாகத் தமிழ்சொன்னார் நம்முன்னோர் 

சாத்தன்வழிப் பௌத்தமும் தேவர்வழிச் சமணமும்
மாமுனிவழிக் கிறித்துவமும் உமறுவழி இஸ்லாமும்
தேனிகர்தமிழ் வடிவாகச் சிவமாலின் நெறியோடு
மேலுலக வாழ்வினையும் தமிழ்வழியே கண்டனவே 

ஆரியம் வந்தது வாழும்தமிழின் சீரும்குலைந்தது
ஆட்சித் தொல்லை ஆயிரமாயிரம் கேடுவிளைத்தது
ஈங்கிதன் மீட்சி எங்கே காண்போம் என்றுஉளைந்து
ஏங்கிய நல்லோர் தத்தம் வழியில் சென்றாரே

ஆரியத்தின் ஆதிக்கம் கெடுக்கும் என்று 
சீரியவான் தனித்தமிழைக் காக்க என்று
ஓரியக்கம் உருவாக்கிப் பெயரும் மாற்றி 
நேரியதோர் வழிகண்டார் மறைமலை அடிகள்

நாவலர்பாரதி நாமகள்பாரதி விடுதலை வேண்டிய திரு,வி.க. 
ஏவலரின்றி நாவாய் ஓட்டிய தூத்துக்குடியின் வ.உ.சி.
கேவலமிங்கு அந்நியராட்சி ஒழிக்கவேண்டித் தமிழ்நாட்டுப்
பாவலாராயும் காவலராயும் பாவைத்தமிழைக் காத்தாரே 

நன்மையுடன் வல்லமையும் வேண்டும் என்று
மென்மையாக எடுத்துரைத்தார் எளிய மு.வ.
இன்சொல்லால் எழுத்தாண்டார் சேதுப் பிள்ளை
தன்மனதில் டி.கே.சி கம்பன் கண்டார்

தமிழுக்கெனச் சிறைசென்றார் சில புலவர்
தமிழுக்கென உயிர்தந்தார் பல மறவர்
தமிழைத்தம் புணையாகக் கொண்டார் இன்- 
தமிழைப் பிறநாட்டில் உடன்பயின்றார் 

தொட்டடுத்த இலங்கைமகன் தனிநாயகம்
பாட்டுத்தமிழ் விபுலர் யாழ்ப்பாண நாவலர்
எட்டிநின்ற மலேயாவில் ராசாக்கண்ணர்
தட்டாத் தமிழ்ச் சிங்கப்பூர்த் திண்ணப்பர்

ரஷ்யா தந்த Andronov
செக்கோ கண்ட Kamil Zvelebil
லண்டன் தந்த John Marr
ஜெரூசலத்தில் David Shulman
கலிஃபோர்னியாவில் George Hart
சியாட்டலில் Hal Schiffman
சிக்காகோவில் Norman 

என்றிவரெல்லாம் நம்மொழி பரப்ப
இந்திராவும் கௌசல்யாவும்
இராமனும் நானும் நம்தமிழ் காக்க
எம்உயிர்தந்து பணிபுரிகின்றோம்

எங்கள் பணிக்கூடம் தமிழின் நிலைக்கூடம்
அங்கே தமிழ்பயில்வோர் பின்னே தமிழ்புரப்போர்
இங்கே தமிழ்வாழ நீங்கள் உரமிடுங்கள்
உங்கள் வள்ளண்மை உங்கள் குடிப்பெருமை

கலைத்தந்தை கருமுத்தர் விலையில்லா அழகப்பர்
கலைநாட்டிய அண்ணாமலை இசைதந்த தண்டபாணி
கண்மணிபோல் தமிழ்காத்த இவர்பாதை நீங்கள் கண்டீர்
வண்மைபெறச் செய்வீர் வாழவைப்பீர் தமிழை

************************ 

குறிப்பு: Schuykill பிலடெல்ஃபியாவில் ஓடும் ஆறு. Potomac அமெரிக்கத் தலைநகரில் ஓடும் ஆறு. 


நீங்களே ஆழமாக நினைத்துப் பார்க்கவும். மக்களுக்கு எதில் நாட்டம் என்று!

ஒன்று மட்டும் திட்டவட்டமாக இப்போதே சொல்லிவிடுகிறேன், நல்லாக் கேட்டுக்கோங்க! நான் போன பிறகு, அதாங்க நான் செத்தப்புறம், என்னை யாரும் 'பெரிய தமிழறிஞர், அது இது'-னு எல்லாம் புகழக்கூடாது, எனக்குச் சிலை வைக்கக் கூடாது, சரியா?! நன்றி'ங்க! :-)


Monday, May 13, 2013

"அம்மா நாள்" யாருக்கு?


முன் குறிப்பு
------------------
பின்வரும் பதிவு உண்மையும் கற்பனையும் கலந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடையில் ஈரக்கசிவு ரமாவை விடியலுக்கு முன்பே உசுப்பிவிட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்; புடைவையைச் சுருட்டிக் காலிடுக்கில் வைத்துப் பிடித்துக்கொண்டு குளிப்பறைக்கு ஓடினாள்; இப்பொ வீட்டுக்குள் வரக்கூடாது; பின்புறத் தாழ்வாரத்திலேயே ராக்கி எப்போது வருவாளோ என்று காத்திருந்தாள். 

முன்வாசலில் சாணி தெளித்துப் பெருக்க வேண்டி, விளக்குமாறு எடுக்கத் தாழ்வாரத்துக்கு வந்த ராக்கிக்கு ரமாவைப் பார்த்தவுடன் திகில்; பரிவோடு கேட்டாள்: “இந்த வாட்டியும் உக்காந்திட்டியா, கண்ணு?” 

ரமாவுக்கும் திகில். சொன்னாள்: “என் தலையெழுத்து ராக்கி. உள்ளெ போயி அம்மாகிட்டெ சொல்லு. காப்பி போட நான் வரலெ-னு சடைவா இருப்பாங்க. மொதல்லெ எனக்குத் துணி கொண்டா. குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டா.” 

இன்றோடு அடுத்த ரெண்டு நாளும் ரமாவுக்கு ராக்கிதான் எல்லாமே. ராக்கி கொடுப்பதுதான் சோறு, தண்ணீர் எல்லாம். வீட்டு மனிதர் ஒருத்தரும், அவளை ஏறி மிதிக்கும் கணவனும்தான், அவள் இருக்கிறாளா செத்தாளா? என்று அலட்டிக்கொள்வதில்லை. அது ரமாவுக்குப் பழகிப்போனதுதான். 'படுக்கை கறைப்பட்டிருந்தால் எம்மாம் பெரிய கூச்சல் உண்டாயிருக்கும், நல்ல வேளை அது நடக்கவில்லை' என்ற நிம்மதியே போதும் அவளுக்கு. 

ரமாவுக்கு மாதவிலக்கு என்றால் அவளுடைய மாமியாருக்கு ஏமாற்றமும் எரிச்சலும்; அதெல்லாம் மாமியாரின் செல்லப்பிள்ளை வழியாக அவனுடைய எரிச்சலுடன் கலந்து அவள்மேல் வெடிக்கும்.

ரமாவின் கணவன் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் ஒரு தடையும் இல்லாமல் உவந்து அனுபவித்தாலும், உறவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகச் சொல்லித் திரியும் ஒரு திமிர் பிடித்த தன்னிரக்க வேந்தன்; தற்காதலன். 'அட, சனியனே, ஏன் கலியாணம் கட்டிக்கினே, மூதி?' என்று அவனைக் கேட்பார் இல்லை. 'என்ன சார், போட்ட முதலை எடுக்க வேணாம்?' என்று வாயாடும் நண்பர்களின் சூழலில் தன் விந்து வங்கியின் முதலுக்கு வட்டியில்லை என்பது அவனுக்குப் பெரிய எரிச்சல்!

முதல் இரண்டு மருமகளும் திருமணம் ஆன 10-ஆம் மாதத்தில் "டாண்" "டாண்" என்று பேரக் குழந்தை பெற்றுக் கொடுத்தார்கள். அடுத்தடுத்து, வீடு முழுவதும் பேரப்பிஞ்சுகள். இந்த மூணாவது மருமகள் ஒரு கேடு. வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை, செல்லமகனுக்கு வாரிசு கொடுக்கவில்லை. சோத்துக்குத் தண்டம். மாமியாரின் அலுப்பிலும் நியாயம் இருக்கில்லெ!

கண்ணகிக்குப் போல ரமாவுக்கு ... 'யாண்டு பல கழிந்தன.' ராக்கி மட்டும் விடாமல் தன் குடிசையில் தான் வளர்க்கும் பசு, எருமைகளின் பாலை எடுத்துக் கொண்டுபோய் ஊர் எல்லையில் இருக்கும் பாம்புப் புற்றில் ஊற்றி இந்த ரமாவுக்காக வேண்டிக்கொண்டு வருவாள். இது அவளுக்கும் ரமாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

திடீரென்று நாடு முழுக்க, ஊரிலும் வீட்டிலும், அயல்நாட்டுப் பீடை. ஏதோ "அன்னையர் நாள்" என்று சொன்னார்கள். அந்த நாளில் ரமாவின் நிலை தில்லையில் தீக்குளித்த நந்தனின் நிலையை நெருங்கும்.

இந்த ஆண்டும் அதே நாள். ரமாவின் தன்னிரக்க வேந்தன் ஊர் சுற்றல். மாமியாருக்கும் ஓரகத்திகளுக்கும் அவரவரின் கணவர் பிள்ளைகளுக்கும் ஒரே அலட்டல். கண்ட கண்ட நிறங்களில் ஏதோ கேக்காம், பேக்காம், சேம்ப்பேனாம்.

ராக்கியின் கொள்ளுப்பேரன் புழைக்கடையில் வந்து ரமாவைக் கூப்பிட்டு ராக்கி கீழே விழுந்ததைச் சொல்லிப் பதறினான். ரமா அவன் பின்னால் ஓடி நடந்தாள்.

நாலு தெருவுக்கு அப்புறம் ஊர் எல்லை. 3-ஆம் தெருவில் பின்னாலிருந்து ஒரு குரல்: "அம்மா, அம்மா"

ரமா திரும்பிப்பார்த்தாள். ஒரு பெண் இவளைப் பார்த்து ஓடி வந்தாள். மூச்சிறைக்க ரமா நின்றாள். ஓடி வந்த பெண்ணின் குரல் பழகிய குரல்போல இருந்தது. ஆனால் அவள் யாரென்று தெரியவில்லை. குழப்பம்.

"அம்மா, என் பெயர் காவேரி. நீங்க கோட்டையூர்-லெ எனக்கு  ஆறாப்பு டீச்சர். என்னெ 'நீ கவியா காவியா'-னு கேலி செய்வீங்க, நெனெவு இருக்காம்மா?"

இருவருக்கும் ஒரே பூரிப்பு.

"ஆமாங்கண்ணு, நீ இங்கெ எப்பிடி வந்தே? என்னெ எப்பிடிக் கண்டுபிடிச்செ?"

"அம்மா, ஒங்க புடைவையும் நடையின் அலாதியும் இவுங்க அவுங்கதான்-னு சொல்லிச்சு'ம்மா. ரொம்ப நாளா ஒங்களெ இந்தப் பக்கம் பாத்திட்டிருக்கேன்'மா. பக்கத்துலெ வந்து கேக்கப் பயம். இன்னிக்கி எதோ துணிச்சலாக் கேட்டுட்டேன்'மா. கலியாணம் கட்டி இந்தூருக்கு வந்தேன்'மா. மருமகளுக்குப் பிள்ளை இல்லெ-னு நம்மூர்ப் பாம்புப் புத்துலெ பால் ஊத்தறேன்'மா"

"வா, வா, நானும் அங்கெதான் போறேன்."

இரண்டுபேரும் ராக்கியின் கொள்ளுப்பேரனும் பாம்புப் புத்து நோக்கி ஓடினார்கள்.

"அம்மா, தாயே" என்று ஒரு விளி. எப்போதும் வரும் ராப்பிச்சைக்காரன் இப்போது இங்கே பசியால் மயங்கித் தள்ளாடுகிறான். "காவேரி, அந்தப் பாலை அவனுக்குக் கொடு" என்று சொல்லிக்கொண்டே ரமா பாம்புப்புத்துக்கு  ஓடினாள். காவேரியும் ராப்பிச்சைக்காரனுக்குப் பாலைக் கொடுத்துவிட்டு ரமாவின் பின்னே ஓடினாள்.

ராக்கியின் கையிலிருந்து உருண்ட பால் குவளை பாம்புப் புத்தின் அடியில் தடுக்கிக் கிடக்கிறது. புத்தைச் சுற்றிலும் எருமைப்பால்.

"அம்மாடீ, நாகம்மாவுக்குப் பால் ஊத்த மறந்திடாதேம்மா" என்று சொல்லிக்கொண்டே ரமாவின் மடியில் தலையைச் சாய்த்தாள் ராக்கி.

ராக்கியின் குவளையை எடுத்துகொண்ட காவேரி ரமாவைப் பார்த்தாள். "சரி" என்று சொல்வதுபோல ரமாவும் தலையை அசைத்தாள். 

Monday, April 22, 2013

"காம்பு சொலித்தன்ன ... "

"காம்பு சொலித்தன்ன" என்றால் என்ன? 


'மூங்கிலைப் பிளந்தால் போல' என்பதுவே "காம்பு சொலித்தன்ன" என்பதன் பொருள்.

மூங்கிலை ஏன் பிளக்கவேண்டும்? மூங்கிலைப் பிளப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பந்தல் போடலாம், தட்டி போடலாம், ... இப்படி.


மூங்கிலைப் பிளந்தால், அதன் உட்புறத்தே இரண்டு கடினமான வெளிப்பகுதியையும் ஒட்டி மிக மெல்லிய படர்வு (filament) இருப்பதைப் பார்க்கலாம். அந்த மிக மென்மையான படர்வு இருக்கே அதுதான் காம்பின் சொலி. "காம்பு சொலித்தன்ன அறுவை" என்றால் அந்தப் படர்வை எடுத்தால்/உரித்தால்  போன்ற துணி (== ஆடை).


காம்பு == மூங்கில்; சொலி == உரி.

இந்தச் சொலி என்ற சொல்லை ஆங்கிலத்தில் "peel" என்று புரிந்துகொள்ளலாம். பெயராகவும் வினையாகவும் பயன்படும். 

பாம்புடன் தொடர்புபடுத்தும்போதும், மூங்கில் போன்றவற்றோடு தொடர்புபடுத்தும்போதும் இந்தச் சொல் "உரி" "சொலி" என்ற குறிப்பைப் பெறுகின்றன.


பண்டைத் தமிழ் வள்ளல்கள் இரவலர்க்குக் கொடுத்த ஆடை இந்தக் காம்பின் சொலி மாதிரி இருந்தது என்று சிறுபாணாற்றுப்படை, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.


காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ-ப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி ...  (சிறுபாணாற்றுப்படை)


பாம்புரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீஇ  (புறநானூறு 383)



இங்கே பாருங்கள் ... வள்ளலையும் அவன் கொடுக்கும் பரிசிலையும் பாராத மக்களுக்கு விளக்கிச் சொல்லும் நயத்தை! 


அந்தப் பழைய நாட்களில் மூங்கிலும் பாம்பும் காட்டுப் பொருள்கள். வள்ளல் தந்த பொருளோ நாட்டுப் பொருள். மூங்கிலையும் பாம்பையும் நன்றாக அறிந்த ஒருவருக்கு அவற்றின் மூலம் அவர் காணாத பொருள்களை விளக்கும் கவிதை நயம் சிறப்புடைத்தே. 


மூங்கிலின் சொலி அற்புதமானது. கண்டால் ஒளி ஊடுருவும் நுண்மை தெரியும். தொட்டால் மலரின் மென்மை தரும். அதைப் போன்ற ஆடை தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று நினைக்கும்போதே வியப்பும் மகிழ்வும் பெருமிதமும் ஏற்படுவது இயல்பே

சிறு பிள்ளைப் பருவத்தில் இந்த மூங்கில் சொலியைப் பார்த்தும் தொட்டும் மகிழ்ந்த பேறு எனக்கு இருந்தது. ஆகவே இந்தப் பெருமிதம். 


************************************** 

இப்போது பல நாட்களாக மாம்பருப்புத் துவையல் செய்ய விருப்பம். மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை உடைத்து அதன் துவர்ப்புச் சுவையை நுகர்ந்தது பிள்ளைப் பருவத்தில். 

அண்மையில் 2 மாம்பழம் வாங்கினேன். வெளிநாட்டு மாம்பழத்திற்கேற்ற சுமாரான சுவை. கொட்டையை எடுத்து உலர வைத்தேன். நன்றாக உலர்ந்த கொட்டையை உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை எடுக்க முயன்றபோது ஓர் அதிசயம் காத்திருந்தது!














மூங்கிலின் சொலி போலவே, மாங்கொட்டையின் உள்ளேயும் அதன் சொலி இருப்பதைப் பார்த்தேன். அதே சொலிப்பு, பளபளப்பு, மென்மை, துவட்சி ... .


சரி. உள்ளே இருந்த மாம்பருப்பை என்ன செய்தேன்?






சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் புளி, 2 பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு ... சேர்த்து அரைத்து எடுத்தேன். கல்லுரல் இல்லை, அதனால் துவையலாக இல்லை, சட்டினியாக வந்தது!




சுவையோ சுவை! கட்டாயம் செய்து சுவைக்கவும் -- துவர்ப்பு, புளிப்பு, உப்பு, உறைப்பு எல்லாம் தரும் இந்த மாம்பருப்புத் துவையல்.


மாஞ்சொலியின் அழகையும் கண்டு மகிழத் தவறாதீர்கள்!





Sunday, April 14, 2013

சுடோ சுடு ... வடை சுடு ...

வடை! தமிழ்நாட்டு உணவில் ஒரு முக்கியப் பங்கு இந்த வடை க்கு. பல வகை வடைகள் உண்டு. 


இங்கே மெதுவடை, உழுந்து வடை, உளுத்தம்பருப்பு வடை என்றெல்லாம் குறிக்கப்படும் ஒரு வகை வடை செய்யும் முறையைப் பார்ப்போமா.  


1. ஒரு சின்ன கிண்ணத்தில் உளுத்தம்பருப்பை (உடைத்த பருப்பு என்றாலும் சரியே) எடுத்து, நன்றாகக் கழுவி நல்ல தண்ணீரில் 1~2 மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறவைக்கும் பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் இருந்தால் போதும். ஒரு மணிக்கூறு இடையில் தண்ணீர் வற்றிப்போவதுபோல் தெரிந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.



2. ஊறிய உளுத்தம்பருப்பை மேற்கொண்டு தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.  கல்லுரல் வசதி இருப்பவர்கள் பாக்கியவான்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்! 

மாவு "கிள்ளு பதத்தில்" இருக்க வேண்டும். ரொம்ப ரொம்ப மெது வடை வேண்டுமென்றால் மாவு சிறிதே தளர்ந்து இருக்க வேண்டும்; ஆனால் வடை வட்டமாகத் தட்ட வாராது; பொரியும்போது எண்ணெயும் குடிக்கும். 

அரைத்த மாவு கொஞ்சம் ஈரப்பசையுடன் இதோ இப்படி இருந்தாலே போதும். மேலே இருக்கும் சிண்டு போன்றது பிள்ளையாருக்கு!  









3. மேலே காட்டிய மாவில் உங்கள் சுவைக்கு ஏற்றபடி உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.  உப்பு சேர்த்தவுடன் வடை மாவு கொஞ்சம் நீர்த்துப் போகும். அப்படிப் போனால் சிறிது நேரம் மாவைக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கலாம். அல்லது காகிதத் தட்டில் வைத்து ஈரத்தை உறிஞ்சச் செய்யலாம். 

கீழே உள்ள படத்தில் மேல் பக்கம்  உள்ள உருண்டை கிள்ளு பதத்தில் எடுக்கப்பட்டது. 





4.  ஒரு சிறு உருண்டை மாவைக் கிள்ளி எடுத்து, வட்டமாகத் தட்டவும். சாதாரணமாக இதை வாழை இலையில் அல்லது கையிலேயே தட்டுவது பழமை. புதுமை உலகில் plastic sheet அது இது என்று வந்துவிட்ட காலத்தில் என்ன செய்ய? 


4a. உள்ளங்கையில் வைத்துத் தட்டி ஒரு வட்டமான உருவை உண்டாக்கவும். அந்த வட்டத்தின் நடுவில் ஒரு துளை உண்டாக்கவும். 








4b. சோளக் கதிரின் மேல் தோல் (corn husk) இருக்கில்லெ, அதை எடுத்து அதில் வடை மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் துளை உண்டாக்கவும். இதுதான் மிகச் சிறந்த முறை. ஒட்டாமல் ஒடியாமல் வட்டமான மாவை எடுத்து எண்ணெயில் போடலாம்! 






5. வட்டமாகத் தட்டிய வடைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எந்த எண்ணெய் என்பது உங்கள் விருப்பம். தேங்காயெண்ணெயும் நல்லெண்ணெயும் நல்ல மொறு மொறு என்ற வடைகள் தரும்.  பிற எண்ணெய்கள் சூட்டுக்குத் தக்கபடி வடையின் நிறத்தையும் கடி பதத்தையும் மாற்றும். வேண்டும் பதத்துக்கு வடைகளைப் பொரித்து எடுக்கவும். 






வெளியில் மொற மொற உள்ளே மெது மெது வடைகள் தயார்! 




Thursday, January 24, 2013

கடலே, எம்மைக் காக்கும் துணையே ...

கடல் என்றால் அதன் சிறப்பு பலருக்கும் தெரியாது. கடற்கரை என்றால் பலருக்கும் அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் பயன்படுகிறது.  


அந்தக் கடல் வற்றினாலோ சீறினாலோ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் உண்டாகும் துன்பம் பல.


நிலவகையால் பிரிந்திருக்கும் இடங்களை இணைப்பது கடல்தானே!

கொஞ்ச நேரம் ஒரு கடற்கரையில் ஒரு தனித்த இடத்தில் உட்கார்ந்து அந்தக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் -- ஆன்மிகம் உங்கள் கையில் அடக்கம். வேறு வகைத் தியானம் தேவையில்லை. நம் உள்மனத்தை அப்படியே வெளிக்காட்டி உறவாடும் அந்தக் கடல்.

கடற்கரை மணலில் நடக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இங்கே பக்கத்தில் மோன்டெரே (Monterey) கடற்கரையில் சில நாட்கள் செலவழிக்கும் பேறு கிட்டியது. அப்போது எடுத்த சில படங்கள் இங்கே.


1. இப்போதுதான் என் நாள் தொடங்குகிறது.  

 


2. இரவில் போன மீனவரோ யாரோ வீடு திரும்புகிறார்கள்.  




3. நடு மதியம். ஒரே குதூகலம்.


4. என் பாதுகாப்பாளர்.




5. அலுவலகம் போய்த் திரும்பும் அலுப்புடன் ...


6. அது சரீ, அவன் எங்கெ போய்த் தொலைஞ்சான்? அப்பா, அம்மா, மனைவியின் காத்திருப்பு ...

  

7. அவ எங்கெ போனா?

  

8. எல்லாரும் ஒங்க ஒங்க ஊட்டுக்குப் போங்க.
 


  
  
  

9. நான் குளிச்சிட்டுத் தூங்கப்போறேன். நாளெக்கிப் பாப்பம்.


Monday, January 14, 2013

பொங்கல் -- ஒரு சிறுதானியப் பொங்கல் ...

அரிசியில்தான் பொங்கல் செய்வது வழக்கம், இல்லையா?  

கொஞ்சம் மாற்றித்தான் ஒரு பொங்கல் செய்து பார்க்கலாமே என்று எப்பவுமே நினைப்பேன். முடிந்தபோதெல்லாம் அப்படியே செய்வேன், ஏதாவது ஒரு சிறுதானியத்தை வைத்து -- வெண்பொங்கலோ சர்க்கரைப் பொங்கலோ.
  
இந்த முறை ரொம்பச் சீக்கிரமாக, கையில் இருந்த ஒரு சிறுதானியத்தை வைத்துப் பொங்கல் செய்ய நினைத்தேன். அதன் விளைவே இந்தப் பதிவு.  

எப்போதுமே புதிய காய், கூல வகைகளைப் பார்த்தால் வாங்கிச் சமைத்துப் பார்த்துவிடுவேன். அண்மையில் ஒரு சிறுதானியம் என் கண்ணுக்குத் தென்பட்டது. இதன் தமிழ்ப்பெயர் எனக்குத் தெரியவில்லை. வெள்ளை வெளேர் என்று இருந்தது. இதை ஆங்கிலப் பெயரில் (Indian Sawa Millet) விற்பனை செய்கிறார்கள். படமும் பொங்கல் செய்முறையும் இங்கே:  
  
  
1. சிறுதானியம்
  

 
  
  
தொட்டால் ... பட்டுப்போன்ற மென்மை.

  
  
2. ஒரு சிறிய கிண்ணத்தில் அரைக்கிண்ணம் இந்த Indian Sawa Millet-ஐயும் ஒரு கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் எடுத்துக்கொண்டேன்.
  
3. வறுக்கக்கூட இல்லை. நன்றாகக் கழுவி இரண்டையும் ஒரு நல்ல பாத்திரத்தில் போட்டுக் குழைய வேகவைத்தேன்.  
  
4. நன்றாக வெந்த பிறகு, கொஞ்சம் சோயாப் பாலும் கொஞ்சம் வீகன் (vegan) சர்க்கரையும் சேர்த்துக் கிளறினேன்.
  
5. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தேக்கரண்டி (teaspoon) அளவுக்குக் கலப்படமில்லாத மிக நல்ல தேங்காயெண்ணெய் (organic virgin coconut oil) ஊற்றிக் கிளறினேன்.
  
6. பொங்கல் பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி, உலர்ந்த முந்திரிப்பழம் (raisins), பைன் கொட்டைகள் (pine nuts) சேர்த்தேன்.
  
7. அருமையான, சுவையான பொங்கல் கிடைத்தது! 



  
குறிப்பு: இதை வெண்பொங்கலாகவும் செய்யலாம். இங்கே, மக்கள் வழக்கமாகச் சேர்க்கும் பசும்பாலோ, நெய்யோ, எலும்பு மற்ற விலங்குப் பொருள் கலந்து தீட்டப்பட்ட (processed) சர்க்கரையோ சேர்க்கவில்லை. அரிசிச் சமையல் தரும் "திம்" "கம்" போல வயிற்றை உப்ப வைக்கும் கனம் இல்லை. செய்து, சுவைத்துப் பார்க்கவும்.

காய், காய், என்ன காய் செய்யலாம்? கழுதை கெட்டா ...

கழுதை கெட்டா ... குட்டிச்சுவர்! தெரியும்.

அதே போல ... என்ன சமைக்க? என்ன இருக்கு? என்று தேட நேரமில்லாமல் போகும்போது ... கைகொடுக்கும் தெய்வச் சமையல் -- ஒரு வகைக் கறி!

1. கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி எடுத்துக்கொண்டு தனியாகக் கடுகு தாளித்துச் சேர்க்கவும்:



2. வெந்த பயறு வகை ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இங்கே உள்ளது பின்ட்டோ பீன்ஸ் (pinto beans).
      (காய்ந்த பயிறு இருந்தால் ஊறவிட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதுவே இங்கே.)



3. பச்சைக் காய் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இங்கே பயன்படுத்திய காயின் பெயர் ப்ரோக்கலி (broccoli).


  
4. மேற்கண்ட பச்சைக்காய்த் துண்டுகளை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். குழையவிடவேண்டாம். பச்சை நிறம் மாறக்கூடாது.


5. தக்காளிக் கலவையில் பருப்பும் பச்சைக் காயும் சேர்த்துச் சிறிது நேரம் ( ~15 மணித்துளிகள்) வேகவைக்கவும்.



6. தேவையானால் சிறிது உப்பும் பெருங்காயமும் வதக்கிய இஞ்சியும் சேர்த்துக்கொள்ளவும்.

7. பச்சைக் கறிவேப்பிலை இதழ்களையும் சேர்க்கலாம்.

குறிப்பு: பருப்பும் (beans) ப்ரோக்கலியும் சிலருக்கு வாயுத் தொந்தரவு கொடுக்கலாம். அதனால் இஞ்சியும் பெருங்காயமும் சேர்ப்பது உதவும். பூண்டும் சேர்க்கலாம்.

சத்துள்ள உணவு. சப்பாத்தி, ரொட்டி, சோறு போன்றவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம். அளவோடு சுவைத்து உண்டு மகிழ்ந்து பயன் பெறுக!