Monday, April 22, 2013

"காம்பு சொலித்தன்ன ... "

"காம்பு சொலித்தன்ன" என்றால் என்ன? 


'மூங்கிலைப் பிளந்தால் போல' என்பதுவே "காம்பு சொலித்தன்ன" என்பதன் பொருள்.

மூங்கிலை ஏன் பிளக்கவேண்டும்? மூங்கிலைப் பிளப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பந்தல் போடலாம், தட்டி போடலாம், ... இப்படி.


மூங்கிலைப் பிளந்தால், அதன் உட்புறத்தே இரண்டு கடினமான வெளிப்பகுதியையும் ஒட்டி மிக மெல்லிய படர்வு (filament) இருப்பதைப் பார்க்கலாம். அந்த மிக மென்மையான படர்வு இருக்கே அதுதான் காம்பின் சொலி. "காம்பு சொலித்தன்ன அறுவை" என்றால் அந்தப் படர்வை எடுத்தால்/உரித்தால்  போன்ற துணி (== ஆடை).


காம்பு == மூங்கில்; சொலி == உரி.

இந்தச் சொலி என்ற சொல்லை ஆங்கிலத்தில் "peel" என்று புரிந்துகொள்ளலாம். பெயராகவும் வினையாகவும் பயன்படும். 

பாம்புடன் தொடர்புபடுத்தும்போதும், மூங்கில் போன்றவற்றோடு தொடர்புபடுத்தும்போதும் இந்தச் சொல் "உரி" "சொலி" என்ற குறிப்பைப் பெறுகின்றன.


பண்டைத் தமிழ் வள்ளல்கள் இரவலர்க்குக் கொடுத்த ஆடை இந்தக் காம்பின் சொலி மாதிரி இருந்தது என்று சிறுபாணாற்றுப்படை, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.


காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ-ப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி ...  (சிறுபாணாற்றுப்படை)


பாம்புரி அன்ன வடிவின, காம்பின்
கழைபடு சொலியின் இழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீஇ  (புறநானூறு 383)



இங்கே பாருங்கள் ... வள்ளலையும் அவன் கொடுக்கும் பரிசிலையும் பாராத மக்களுக்கு விளக்கிச் சொல்லும் நயத்தை! 


அந்தப் பழைய நாட்களில் மூங்கிலும் பாம்பும் காட்டுப் பொருள்கள். வள்ளல் தந்த பொருளோ நாட்டுப் பொருள். மூங்கிலையும் பாம்பையும் நன்றாக அறிந்த ஒருவருக்கு அவற்றின் மூலம் அவர் காணாத பொருள்களை விளக்கும் கவிதை நயம் சிறப்புடைத்தே. 


மூங்கிலின் சொலி அற்புதமானது. கண்டால் ஒளி ஊடுருவும் நுண்மை தெரியும். தொட்டால் மலரின் மென்மை தரும். அதைப் போன்ற ஆடை தமிழகத்தில் இருந்திருக்கிறது என்று நினைக்கும்போதே வியப்பும் மகிழ்வும் பெருமிதமும் ஏற்படுவது இயல்பே

சிறு பிள்ளைப் பருவத்தில் இந்த மூங்கில் சொலியைப் பார்த்தும் தொட்டும் மகிழ்ந்த பேறு எனக்கு இருந்தது. ஆகவே இந்தப் பெருமிதம். 


************************************** 

இப்போது பல நாட்களாக மாம்பருப்புத் துவையல் செய்ய விருப்பம். மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை உடைத்து அதன் துவர்ப்புச் சுவையை நுகர்ந்தது பிள்ளைப் பருவத்தில். 

அண்மையில் 2 மாம்பழம் வாங்கினேன். வெளிநாட்டு மாம்பழத்திற்கேற்ற சுமாரான சுவை. கொட்டையை எடுத்து உலர வைத்தேன். நன்றாக உலர்ந்த கொட்டையை உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை எடுக்க முயன்றபோது ஓர் அதிசயம் காத்திருந்தது!














மூங்கிலின் சொலி போலவே, மாங்கொட்டையின் உள்ளேயும் அதன் சொலி இருப்பதைப் பார்த்தேன். அதே சொலிப்பு, பளபளப்பு, மென்மை, துவட்சி ... .


சரி. உள்ளே இருந்த மாம்பருப்பை என்ன செய்தேன்?






சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் புளி, 2 பச்சை மிளகாய், கொஞ்சம் உப்பு ... சேர்த்து அரைத்து எடுத்தேன். கல்லுரல் இல்லை, அதனால் துவையலாக இல்லை, சட்டினியாக வந்தது!




சுவையோ சுவை! கட்டாயம் செய்து சுவைக்கவும் -- துவர்ப்பு, புளிப்பு, உப்பு, உறைப்பு எல்லாம் தரும் இந்த மாம்பருப்புத் துவையல்.


மாஞ்சொலியின் அழகையும் கண்டு மகிழத் தவறாதீர்கள்!





2 comments:

  1. என்ன அழகாகத் தமிழின் சுவையையும்
    இயற்கைப் பொருளின் நுண்படல மென்மையையும்
    விளக்கி, துவையல் விருந்தும் படைத்திருக்கின்றீர்கள்!
    அறியாத நுண்ணிய செய்தியை அறிந்து மகிழ்ந்தேன்!
    நன்றி!

    ReplyDelete
  2. அருமை. அரைத்த மாவையே அரைப்பதற்க்குப் பதிலாக, மாஞ்சொலியினைக் கண்டு அகற்றிவிட்டு மாங்கொட்டைத் துவையல் அரைத்துப் பார்க்கவேண்டியதுதான். நம்மூர் பழம் இல்லாவிடினும் நியூயார்க் மாம்பழத்தில் செய்து பார்ப்போம். நல்லது.

    ReplyDelete