Friday, December 21, 2012

காலக்கூறுகள் ... குறுக்கா? நெடுக்கா?

"காலம்" என்பது நம் வசதிப்படிப் பிரித்துக்கொள்ளும் ஏதோ ஓர் இயற்கைக் கூறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
  
தமிழ் இலக்கணத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று வகைப்படுத்துகிறார்கள். பிற மொழிகளில் past, perfect, imperfect, preterite, pluperfect, future ... என்று அப்பப்பா, தலை சுற்றும் அளவுக்குப் பெயர்கள். அதெல்லாம் கிடக்கட்டும். இந்தப் பதிவு இலக்கணம் பற்றியதில்லை, பயந்துவிடவேண்டாம்! ;-)  

காலத்தைக் குறுக்காகப் (horizontal) பார்க்காமல், நெட்டுக்கா/நெடியதாக (vertical) ...   மேலே, நடுவே, கீழே என்ற வகையில் நான் பார்த்த சில காட்சிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினேன், அவ்வளவே.


மேலே ... உயிர்களை வாழவைக்கும் ஒளிச்சுடர் ...  நிலைக்காலம்/நிலைத்த காலம்/நிரந்தர காலம்



நடுவே ... எங்கூர்ப் பசங்க ... நிகழ்காலம் 



கீழே ... என் வீட்டு வாசலில் ... இறந்த காலம்


எல்லாம் இயற்கையே! 

பச்சை ஆலிவ் (raw green olive)

பச்சை (raw and green) ஆலிவ் -- என்ன செய்யலாம்?

பச்சை ஆலிவ் தெரியுமா? இதை ஆலிவ் காய் என்றுகூடச் சொல்லலாம்.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள: http://en.wikipedia.org/wiki/Olive

ஏன் இதைப் பயன்படுத்தவேண்டும்? அட, ஆலிவ் எண்ணெயின் நன்மை தெரியுமே, அது ஆலிவ் காயிலிருந்துதானே? அந்தக் காயையும் பயன்படுத்திப் பார்க்கலாமே. எல்லாம் ஒரு மாற்றத்துக்குத்தான்.

 
பச்சை ஆலிவ் (raw green olives), கழுவி, உப்பு நீரில் ஊறுகின்றன. ஒரு நாள் ஊறவிடவும்.



ஒரு நாள் ஊறிய காய்களை எடுத்துத் தண்ணீரில் கழுவி, ஒரு திடமான கரண்டியின் பின் பகுதியாலோ சின்னஞ் சிறிய கல் உலக்கையாலோ (pestle) தட்டி, கொட்டைகளைப் பிரித்து எடுத்து, காயை வேகவைக்கவும். கொட்டைகள் பேரீச்சம்பழக் கொட்டைகள் போல இருக்கும். காய் சீக்கிரம் வெந்துவிடும்.

 
நறுக் நறுக் என்று கடிபதமாக இந்தக் காய்கள் வெந்ததும், அல்லது தேவையான அளவுக்குக் குழைந்ததும், தனியே எடுத்து வைக்கவும்.

கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் (காரம் தாங்குதலுக்கு ஏற்ப) ... எல்லாவற்றையும் சிறிதளவு ஆலிவ் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். (உப்புச் சேர்க்கத் தேவையில்லை. வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். ஆலிவ் காயின் கசப்பு இந்த உப்புச் சுவையில் மறைந்துவிடாமல் இருந்தால் நல்லது!!! )


பிறகு, வெந்த ஆலிவ் காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

 


ஆலிவ் காய்களின் கசப்பைப் பற்றிய தயக்கம் இருந்தால் கொஞ்சம் மாங்காய் அல்லது மாம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளலாம்.



எல்லாவற்றையும் சிறிது வதக்கிக் கலந்தால் ... சுவையான ஆலிவ் கறி தயார்.


  
விரும்பினால், கொத்துமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

இது ஒருவகையான புதுச்சுவை தரும். சாதம் (குறிப்பாகத் தயிர் சாதம்), ரொட்டி, சப்பாத்தி போன்றவைகளுடன் சேர்த்துச் சாப்பிட அருமையான உணவு.




Monday, December 3, 2012

வானமடி வானம் ... கலியில், புதுமை நிறை வானம் (2)


வானத்தின் புதுமை நம் மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்டது.  
  
சில நொடிகளில் நான் கண்டு வணங்கிய வானம் ...







இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு கையும் கையின்மேல் ஒரு குப்பியின்மேல் ஓவியனின் வரை சிறகும்! பார்க்க முடிகிறதா? என்னால் முடிகிறது.



என் பார்வை தொடரும்.

Saturday, December 1, 2012

வானமடி வானம் ... கலியில், புதுமை நிறை வானம்



வானத்தைப் பாருங்கள். ஒரு நொடியில் காணும் காட்சி அடுத்த நொடியில் காணாது. பார்க்கும் மனிதக் கண்களுக்குச் சுவையும் சுமையும் தரும் வானம். இந்த வானத்தின் பல வகைப்பட்ட நிலைகளைக் கண்டு வியக்காத உள்ளம் இருக்குமோ?    

  
என் வீட்டுக்கு மேலும் முன்னும் பின்னும் நான் நடக்கும் பாதையிலும் எனக்கு என்றே தனியாகத் தன்னைக் காட்டும் வானம் மிக அழகு. ஒரு சில நொடிகளை மட்டும் சிறைப்பிடிக்க முடிந்தது.  


1. இது என்ன 'கண்டம்?' அமெரிக்காவா? ஆப்பிரிக்காவா? :-) 




2.  அதோ, அந்த நீல இடுக்கில் நான் ஒளிந்து விளையாட வேண்டும்!




3. என்ன ஒரு சிலிர்ப்பு!















4.   என்ன நினைக்கிறாய், வானமே?




 

5.   செயற்கையின் ஊடுருவல் ...



என் பார்வை தொடரும் ... 


Thursday, September 27, 2012


கூட்டு -- தக்காளிக்காய்க் கூட்டு
----------------------------------------------------

பழுக்காத, நல்ல காயாக உள்ள தக்காளிதான் இதற்கு ஏற்றது. இங்கே தெற்கு மாநிலங்களில் தக்காளிக்காய்ச் சமையல் புகழ் வாய்ந்தது. பெரும்பாலும் பஜ்ஜிபோலச் சமைப்பார்கள். வட கலியில் தக்காளிக்காய் கிடைப்பது அரிது. அதனால் ... கிடைத்த பழுக்காத "வாரிசுத் தக்காளி"யைப் ("heirloom tomatoes") பயன்படுத்தினேன்! "வாரிசுத் தக்காளி" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Heirloom_tomato 

மிகவும் சுவையான கூட்டு கிடைத்தது!

செய்முறை
----------------

1. தக்காளிக் காய்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. காய்களைப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.



3. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் (பச்சை/உலர்ந்தது எதுவானாலும் சரி), 2~3 மிளகாய் வத்தல் (சுவைக்கு ஏற்றபடி), 1/4 தேக்கரண்டி சீரகம் ... இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். முதலில் தேங்காய்த் துருவலை வறுத்தால், வத்தலையும் சீரகத்தையும் வறுக்க எண்ணெய் விடத் தேவையில்லை. தேங்காயின் எண்ணெய்ப் பசை போதும்.  


4. வறுத்த பொருள்களைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளலாம்; அல்லது, தண்ணீர் விடாமலே சின்ன திரிவையில் (காப்பிக்கொட்டை திரிக்கும் அரைவையில்) திரித்துக் கொள்ளலாம்.


இப்போது "மசாலா" தயார்!

5. நறுக்கிய காய்த் துண்டங்களைச் சிறிது உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து, சிறிது தண்ணீரில் ரொம்பவும் குழையவிடாமல் வேகவைக்கவும்.


6. காய்கள் பாதி (al dente, கடி பதத்தில்) வெந்தவுடன் அரைத்து/திரித்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து மிகவும் சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

7. கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும். சுவையான தக்காளிக்காய்க் கூட்டு தயார்!




8. அலங்காரமாகச் செர்ரித் தக்காளிப் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.



பி.கு: காயை ரொம்ப நேரம் வேகவைத்தால் குழைந்துபோகும். அப்படியானால், சூப் போலச் செய்தும் சாப்பிடலாம். சாதாரணத் தக்காளிக் காயில் இருக்கும் கடுப்புச்சுவை இந்த "வாரிசு"த் தக்காளியில் இல்லை. சிறிது இனிப்பும் புளிப்புமாக மிக நன்றாக இருந்தது. :-)

Saturday, September 15, 2012

பாதையோரப் பரிசு ... (4) 


அன்று ஒரு நாள் காலையில் வெளியே நடந்து சென்றபோது ... மெக்னோலியா (magnolia) மரங்களிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்: 'ஊர்லெ ஒரு தம்பி இருக்கு; அதுக்கு ஒன் பூவெப் பாக்கணுமாம். என் கண்ணுலெ ஒரு பூவைக் காட்டேன்' என்று. ஆ! என் வேண்டுதலுக்குச் செவியையும் பூவையும் சாய்த்தது ஒரு மரம்! கண்ட காட்சி ... இங்கே முதல் படத்தில்.


1. ஒரு மெக்னோலியாப் பூ (magnolia) முனைவர் காளைராசனுக்காகவே என் கைக்கு எட்டும் தொலைவில் பூத்திருந்தது!!!




2.   நாங்க இந்த ஊர் அரளிப்பூவாக்கும் ...




3. ஒங்க ஊர்லெ எங்களுக்கு நல்ல பேர் இல்லெ (பீரோஜா/பீநாறி-னுவீங்க). ஆனா, இங்கே நாங்க நல்லாவே இருக்கோம்!




4. பாரு பாரு, என் தங்க நெறத்தெப் பாரு!



5.   நாங்க புதுசா ... புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க ...




அட ... இவ்ளோ சீக்கிரமா ... குடும்பம் பெருகிப்போச்சா?!!!



6. பூச்சாண்டி மாதிரி ஒரு முகம் தென்படுகிறதா? 



ஆனா, நாங்க எல்லாரும் பூச்சாண்டியில்லெ!




7. என் வீட்டு வாசற்படிக்கு அருகில், சின்ன செடியில். நல்ல மணம்! ஆனால் ... வண்டிகளின் புகை புழுதிகளுக்கு இடையில் அந்த மணத்தை நுகரத் தனி நயம் வேண்டும்!




8. கால மாற்றத்தைத் தெரிவிக்கும் வானிலை அறிக்கையாளர்கள்!




Thursday, August 30, 2012

பாதையோரப் பரிசு ... (3)  


பாதையோரப் பரிசு (3)
----------------------------
இன்று காலை நடந்து போனபோது பார்த்து மகிழ்ந்த மலர்கள் ...

1. இது முனைவர் காளைராசன் ஸ்பெசல். மெக்னோலியா மலரும் மொட்டும்.



2. மிக மென்மையானவை. பாதையோரச் சிக்கலிலும் தளராது வளர்பவை. பெயர் தெரியாது.


2.a. கொத்துப்பட்ட மலர் ஒன்று ... , பாவம்!



3. இங்கே நான்கு தலைமுறையைப் பார்க்கிறீர்களா? 



4. எங்க நிறம் பிடிச்சிருக்கா?


5. நாட்டியப் பள்ளியில் இப்பதான் சேர்ந்திருக்கோம் ... .



ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வண்டிகளும், மக்களும் போய்வரும் பாதையோரத்தில், புழுதிக்கும் (ஆம், மெல்லிய புழுதி), வண்டிகள் வெளிவிடும் புகைக்கும் ஈடு கொடுத்து வளரும் செல்வங்கள் இவை! வணக்கம் சொல்லத்தான் தோன்றுகிறது.


Thursday, August 23, 2012

பாதையோரப் பரிசு ... (2)

பாதையோரப் பரிசு ... (2)
--------------------------------

இன்று காலையில் நடந்துபோனபோது நான் கண்ட அருமை.



மஞ்சள் + ஊதாக் கலவை.



புல்லிற்கும் உண்டு புகழ்!






No wonder, California is "Golden State!"





அழகிய ஊதா நிறப் பூக்கள், மரங்களில். இந்த மரத்தில் பூக்கள் பூக்க  நல்ல வெட்ட வெளியும் வெயிலும் தேவை. பல நிறங்களில் (வெள்ளை, இளஞ்சிவப்பு, நல்ல சிவப்பு, ... இப்படி) பூக்கும். 


எங்கே எப்படிப் பூத்தாலும் அந்தப் பூவின் அழகைப் பாராட்டுவோம். இயற்கைக்கு நன்றி செலுத்துவோம்.