Thursday, September 27, 2012


கூட்டு -- தக்காளிக்காய்க் கூட்டு
----------------------------------------------------

பழுக்காத, நல்ல காயாக உள்ள தக்காளிதான் இதற்கு ஏற்றது. இங்கே தெற்கு மாநிலங்களில் தக்காளிக்காய்ச் சமையல் புகழ் வாய்ந்தது. பெரும்பாலும் பஜ்ஜிபோலச் சமைப்பார்கள். வட கலியில் தக்காளிக்காய் கிடைப்பது அரிது. அதனால் ... கிடைத்த பழுக்காத "வாரிசுத் தக்காளி"யைப் ("heirloom tomatoes") பயன்படுத்தினேன்! "வாரிசுத் தக்காளி" என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Heirloom_tomato 

மிகவும் சுவையான கூட்டு கிடைத்தது!

செய்முறை
----------------

1. தக்காளிக் காய்களைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. காய்களைப் பெரிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.



3. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல் (பச்சை/உலர்ந்தது எதுவானாலும் சரி), 2~3 மிளகாய் வத்தல் (சுவைக்கு ஏற்றபடி), 1/4 தேக்கரண்டி சீரகம் ... இவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். முதலில் தேங்காய்த் துருவலை வறுத்தால், வத்தலையும் சீரகத்தையும் வறுக்க எண்ணெய் விடத் தேவையில்லை. தேங்காயின் எண்ணெய்ப் பசை போதும்.  


4. வறுத்த பொருள்களைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளலாம்; அல்லது, தண்ணீர் விடாமலே சின்ன திரிவையில் (காப்பிக்கொட்டை திரிக்கும் அரைவையில்) திரித்துக் கொள்ளலாம்.


இப்போது "மசாலா" தயார்!

5. நறுக்கிய காய்த் துண்டங்களைச் சிறிது உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து, சிறிது தண்ணீரில் ரொம்பவும் குழையவிடாமல் வேகவைக்கவும்.


6. காய்கள் பாதி (al dente, கடி பதத்தில்) வெந்தவுடன் அரைத்து/திரித்து வைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து மிகவும் சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

7. கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை தாளித்துக் கலக்கவும். சுவையான தக்காளிக்காய்க் கூட்டு தயார்!




8. அலங்காரமாகச் செர்ரித் தக்காளிப் பழங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.



பி.கு: காயை ரொம்ப நேரம் வேகவைத்தால் குழைந்துபோகும். அப்படியானால், சூப் போலச் செய்தும் சாப்பிடலாம். சாதாரணத் தக்காளிக் காயில் இருக்கும் கடுப்புச்சுவை இந்த "வாரிசு"த் தக்காளியில் இல்லை. சிறிது இனிப்பும் புளிப்புமாக மிக நன்றாக இருந்தது. :-)

1 comment:

  1. இதுக்குக் கொஞ்சம் பாசிப்பருப்பும் குழைய வேக வைத்துச் சேர்க்கலாம் அம்மா. அதுவும் தனிச் சுவையாக இருக்கும்.

    ReplyDelete