நவம் ("நவனீதம்") என் நெருங்கிய தோழி; இறந்தது Sept. 10, 2010-இல் மதுரையில்.
தூய திரு சகோதரி யுவான் மேரி (Rev. Sr. Yuvonne Mary) மதுரையில் பாத்திமாக் கல்லூரியில் அந்த நாட்களில் ஆசிரியை; இறந்தது Sept. 24, 2010-இல் Waterville, Maine, U.S.A.-இல். அண்மையில் அவரது உடல் நலக்குறைவு பற்றிக் கேள்விப்பட்டு, Maine-இல் பல இடங்களுக்கும் தொடர்பு கொண்டேன்; சரியான தகவல் கிடைக்கவேயில்லை.
இருவருக்கும் பல ஒற்றுமைகள், என்போன்றோரைத் துயரத்தில் ஆழ்த்தியது தவிர. இருவரும் கன்னியர். முன்னவர் வீட்டோடு உறவினரோடு இருந்து உறவினர் நண்பர்கள் ஏழை பாழைகள் என்று எல்லார்க்கும் உதவினார். பின்னவர் கன்னிமாடத்தில் இணைந்து அனைவர்க்கும் உதவினார்.
என் மனம் அலைபாய்வதைத் தவிர்த்து ஒருமைப்படும்போது பிற செய்திகளையும் பகிர்ந்துகொள்ள முயல்வேன். இப்போது என்னால் இயன்றது கசிந்த கண்களோடு அந்த இரு அன்பான உள்ளங்களுக்கும் என் அஞ்சலி செலுத்துவது மட்டுமே.
"பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே
பார்க்கின்ற மலரூடே நீயே இருத்தி அப் பனிமலர் எடுக்க
ஒண்ணேன்..." (தாயுமானவர்)
இந்தப் பாடலைத் திரு அவ்வை துரைசாமிப் பிள்ளை வகுப்பில் நானும் நவமும் ஒன்றாகக் கேட்டோம்; மனமுருகினோம்.
அன்புடன்,
ராஜம்
அன்பு கெழுமிய சகோதரிகளின் ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறையருள இறைஞ்சுகின்றேன். தங்களின் மனம் ஒருமைப்பட அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறையும் வேதகிரீசர் அருள்வாராக. என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.
ReplyDeleteதோழியும் ஆசிரியையும் ஒரே திங்களில் மறைந்தது கேட்டு வருந்தினேன். நீங்கள் அவர்களைப் பற்றி மேலும் எழுதுங்கள். உங்களுக்கும் ஆறுதலாய் இருக்கும். அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது போல் இருக்கும். அவர்கள் நினைவுகளைத் தமிழ் மீது அன்பு கொண்டவர்களிடம் கொண்டு சேர்த்தது போலும் இருக்கும். அதற்கான உடல் நலமும், மனத் திடமும் உங்களுக்குத் தமிழ் அன்னை அளிக்க வேண்டும்.
ReplyDelete