Monday, January 31, 2011

பப்ளிமாஸ் (pomelo) ...

ஊறுகாய் ... .

இதன் பெயரைச் சொல்லும் விதம் ஊருக்கு ஊர் வேறுபடலாம். இங்கே நான் கேட்டது "பொம்மெலொ."

மேல் விளக்கத்துக்கு: http://en.wikipedia.org/wiki/Pomelo

சரி. நார்த்தங்காயும் கிடாரங்காயும் கிடைக்காத ஊரில் வேறு என்ன செய்ய! ஒப்புக்குச் சப்பாணிதான்!

1. நல்ல ஒரு பப்ளிமாசைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.



2. குறுக்கு வாக்கில் நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.



3. சுளைகளைத் தனியே எடுத்துக்கொள்ளவும். விரும்பியபோது தனியே சாப்பிடலாம்.




4. தனியாக எடுத்த தோல் பகுதியை ஊறுகாய்ப் பதத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.



சிறிது கசப்பாக இருக்கும் இதன் சுவை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் கசப்பின் சத்து நல்லது என்பதை மறக்கவேண்டாம்!

Thursday, January 20, 2011

புதிய வானம் ...

1. காலை வானம் ... கிழக்கில் ...






 2. காலை வானின் கீழ் ... ஒரு சிறு பரப்பு...



இயற்கைக்கு நன்றி!

Saturday, January 15, 2011

காலைச் செம்மை...

செயற்கையின் கட்டையும் மீறி இயற்கையைச் சுவைக்க முடிந்தால் ... அதுவே போதும், வேறொரு பொங்கல் பரிசும் வேண்டாம்!

1. பொங்கல் வானில் கதிரொளி. பக்கத்து வீட்டுச் சுவர்களின் இடைவழியே என்னைக் காண வரும் விருந்தாளி!




2. என் சிறு கொல்லைப்புறத்தைச் செம்மை செய்யும் உழைப்பாளி!



3. நாணச் செம்மைப் பூச்சு





ஒருநாளும் எள்ளளவும் திகட்டாத சுவை! இயற்கைக்கு நன்றி!

Friday, January 14, 2011

கம்போ? சாமையோ? ... இட்டிலியும் தோசையும்

இதன் தமிழ்ப் பெயர் சரியாகத் தெரியவில்லை, இது மில்லெட் (millet) என்று இங்கே கிடைக்கிறது.

http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=53

http://en.wikipedia.org/wiki/Millet

பெயர் எதுவானாலும் சரி, இது நல்ல சத்துள்ள பயிராகத் தெரிகிறது. இதற்குமுன் ஒரு முறை இதைச் "சாமை" என்ற பெயரில் தேங்காய்க் கலவையுடன் சேர்த்துச் செய்வது பற்றி எழுதியிருந்தேன்.

இந்த முறை இதையும் கருப்பு உளுந்தையும் வைத்துச் செய்த இட்டிலியும் தோசையும் மிகவும் நன்றாக அமைந்திருந்தன!

Millet-ஐக் "கம்பு" என்று சிலரும் "சாமை" என்று சிலரும் சொல்கிறார்கள். குழப்பமில்லாமல் இருக்கவேண்டி ... "மில்லெட்" என்ற பெயரையே இங்கே பயன்படுத்துகிறேன்.

***************************************

1. ஒரு கிண்ணம் முழுக் கருப்பு உளுந்து, இரண்டு கிண்ணம் "மில்லெட்" இரண்டையும் தனித் தனியே கழுவித் தனித் தனியே ஊறவைக்கவும்.

2. ஒரு தேக்கரண்டி அரிசிச் சோறு தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.

3. உளுந்தும் மில்லெட்டும் நன்கு ஊறியபின் ... முதலில் ... கருப்பு உளுந்தைத் தோல் நீக்காமல் இட்டிலிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.

4. மேலே சொன்ன உளுந்து மாவு அரைபட்டு, குமிழிகள் வரத் தொடங்கியதும் ... ஊறிய "மில்லெட்"டையும் ஒரு தேக்கரண்டி அரிசிச் சோறும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

5. இட்டிலி மாவு பதத்திற்கு அரைபட்டவுடன் தனியே எடுத்துப் புளிக்கவைக்கவும்.



6. மாவு புளிப்பது வீட்டிலும் வெளியேயும் இருக்கும் வெப்ப நிலையைப் பொருத்தது. குளிர் நாடுகளில் மாவு பொங்கினாலே மிகப் பெரிய வெற்றி!


7. பொங்கிய மாவை இட்டிலிகளாக வார்த்து எடுத்துக்கொள்ளவும்.

7a. வெளுக்காத மரநிறத் தாள் கிண்ணங்களில் (unbleached paper cups) மாவை வார்த்து எடுத்த இட்டிலி:



7b. துணியில் வார்த்து எடுத்த இட்டிலி:



8. தோசை வார்க்க விரும்பினால், இட்டிலிக்கு அரைத்த மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கலந்துகொள்ளவும்.

9. நல்ல தோசைச் சட்டியில் மாவை வார்க்கவும்.



10. தோசைகளை மெல்லிதாகவோ, மெத்தென்றோ, முறுகலாகவோ வார்த்துக்கொள்ளலாம்.




குறிப்பு:
----------

1. இந்த இட்டிலி தோசைகளில் அரிசியின் அளவு மிகவும் குறைவு. வெப்பத்தினால் மாவு பொங்கிப் புளிக்குமானால், ஒரு தேக்கரண்டிச் சோறுகூடச் சேர்த்து அரைக்க வேண்டாம்.

2. தோசைக்கு எண்ணெய் ரொம்பத் தேவையில்லை. மேலே உள்ள படத்தில் முன் பகுதியில் இருக்கும் ஒரே ஒரு தோசை மட்டும் சிறிது எண்ணெய் விட்டு வார்த்தது. மற்றவை மெத்தென்றும் மெல்லியதாகவும் இருக்கும் பதம்.

Thursday, January 13, 2011

போளியா?

போளி -- pOLi

ஆமாம், இது ஒருவகையில் போளியே! அவசரப் போளி, "போலிப் போளி" என்றுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எனக்குக் கவலையில்லை!

எப்பவும் கேள்விப்படும் போளிக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு? 

வேறுபாடு உண்டு!

1. இந்தப் போளியைச் செய்ய எண்ணெயோ நெய்யோ தேவையில்லை!

2. அடுப்பில் வைத்துப் போளியைச் சுடவேண்டிய தேவை இல்லை!

தேவையானது என்ன?

கடலைப்பருப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெல்லம், தேங்காய்ப்பூ, அரிசி அப்பளம் போல் கிடைக்கும் அரிசி மாவுத் தாள் (rice paper).

அரிசி மாவுத் தாள் (rice paper):


ஒரு தாள் தனியாக எடுத்தது:


போளியின் மேல் மாவுக்குப் பதிலாக இந்த அரிசித் தாள்!

************************************************************
செய்முறை
---------------
1. கடலைப் பருப்பைக் கழுவி உலர்த்தி வறுத்து ஊறவைத்துத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

2. ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.  

3. அரைத்த கடலைப் பருப்பில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கைக் கலந்துகொள்ளவும்.

4. ஒரு பங்குப் பருப்பு-கிழங்குக் கலவைக்கு 1 ~ 2 பங்கு வெல்லம் (அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி) பொடியாக எடுத்துக்கொள்ளவும்.

5. வெல்லத்தில் மண் தூசி துரும்பு இல்லாவிட்டால் நேரடியாகவே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கலாம். தூசி துரும்புடன் கூடிய வெல்லமாக இருந்தால், தேவையான அளவு தண்ணீரில் கரைத்து மெல்லிய பாகு காய்ச்சி ... மண், தூசி, துரும்பு இல்லாமல் தெளிய எடுத்துக்கொள்ளவும்.

6. மேற்சொன்ன வெல்லத்தையும் 1/2 கோப்பைத் தேங்காய்த் துருவலையும் பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கவும்.  


7. ஒரு நல்ல பாத்திரத்தில் மாவு-கிழங்கு-வெல்லம்-தேங்காய்க் கலவையைப் போட்டு, மிதமான சூட்டில் போளியின் உள்ளே வைக்கும் பூரணத்தின் பதம் வரும்வரை கிளறவும்.
 
8. சிறிது ஏலக்காயைப் பொடித்து மேற்சொன்ன கலவையில் சேர்க்கவும். விரும்பினால் மிகச் சிறிய அளவு பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.



9. இரண்டு அரிசித் தாள்களை எடுத்து மிதமான சூடு உள்ள வெந்நீரில் 3 ~ 5 நொடிகள் (seconds) நனைத்து ஒரு தட்டின் மேல் பரத்தவும். இது நனைந்த அரிசி அப்பளத்தின் பதத்தில் இருக்கும்.

10. நனைந்த அரிசித் தாள் வட்டத்தின் நடுவில் ஒரு சிறு எலுமிச்சை அளவு பூரணத்தைவைத்து நான்கு புறமும் மூடவும். இதைக் கொழுக்கட்டை போலவும் செய்யலாம். போளி போலவும் செய்யலாம்.
 
11a.  கொழுக்கட்டை போலச் செய்தவை: 



11b. போளி போலச் செய்தவை, வட்டமான போளி, சுருள் போளியுடன்:

குறிப்பு:
---------
எண்ணெய், நெய் தேவையில்லை. ஆகவே தேவையில்லாத (பாம்பு, பன்றி போன்ற) விலங்குக் கொழுப்புக்கு இங்கே இடமில்லை.
 
மேல் மாவு மெல்லிது; அதனால் அரிசியின் மாவுச்சத்தும் குறைவு.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்ததால் வெல்லத்தின் அளவைக் குறைக்க முடிந்தது. கிழங்கின் நார்ச்சத்தும் கிடைத்தது!

இங்கே நல்ல வெல்லத் தூள் கிடைத்தது. அதை அப்படியே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்க முடிந்தது; பாகு காய்ச்சவில்லை.

தேங்காய்த் தூளுக்குக் கூட ... உலர்ந்த துருவல்தான்.

அரிசித் தாளைக் குழாயிலிருந்து வரும் வெந்நீரில் நேரடியாகப் பிடித்துச் சிறிது நனைத்ததே போதுமானதாக இருந்தது!

இப்படித்தான் ... ஒப்புக்குச் சப்பாணியான "போலிப் போளி"யை அவசரமாகச் செய்தேன்! மனத்துக்குச் சுமையில்லாமல் ... குற்ற உணர்வு இல்லாமல் ... சாப்பிட்டுச் சுவைக்க முடிந்தது! :-)


ஆரஞ்சுப் பருப்பும் ... பச்சை ஆப்பிலும்...

ஆரஞ்சு நிறப் பருப்பு -- மசூர்/மைசூர் பருப்பு (masoor dal) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்.  கிடைத்தால் ... செயற்கை உரம் போடாத [organic] பருப்பு வாங்கிக்கொள்ளவும்.

பச்சை ஆப்பில் -- Granny Smith ஆப்பில் என்று இங்கே கிடைக்கிறது.
(மேல் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Granny_Smith )


பச்சை ஆப்பிலை நல்ல காய்ப் பக்குவத்தில் வாங்கிக்கொள்ளவும். செயற்கை உரம் போடாத [organic] காயாக இருந்தால் தோலோடு பயன்படுத்தலாம். பச்சை மாங்காய் இல்லாதபோது இந்தப் பச்சை ஆப்பிலைவைத்துச் சில உணவுப் பொருள்கள் செய்யலாம்.

ஆரஞ்சுப் பருப்பு, பச்சை ஆப்பில் இரண்டிலும் பல வகைச் சத்து உண்டு.


1. பருப்பை ஒரு சிறிய கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.





2. ஒரு பச்சை ஆப்பிள் எடுத்துக்கொள்ளவும்.




3. பருப்பைக் கழுவி ஒரு பங்குக்கு ஒன்றரைப் பங்கு அளவுத் தண்ணீரில் வேகவைக்கவும். பாதியளவு பருப்பு நிறம் மாறினவுடன் அடுப்புச் சூட்டை நிறுத்திவிடவும். 5 மணித்துளி கழித்து வெந்த பருப்பைத் தனியே எடுத்துவைத்துக் கொள்ளவும்.



4. ஆப்பிளைக் கழுவி வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும்.



5. ஆப்பில் வில்லைகளில் பாதி அளவைத் தனியே எடுத்துக் குளிர் பதனப் பெட்டியில் வைக்கவும். (இதைப் பச்சையாக எலுமிச்சைச்சாறும் மிளகாய்த்தூளும் கலந்து ஊறுகாய் போடலாம். )

6. ஒரு நல்ல பாத்திரத்தில் கடுகு, சீரகம், மிளகாய் வத்தல் (2~3), மஞ்சள் பொடி ... இவைகளைத் தாளிக்கவும்.

7. மேற்சொன்ன தாளிப்பு முடிந்ததும் அடுப்புச் சூட்டை நிறுத்தி, மீதியுள்ள ஆப்பில் வில்லைகளைத் தாளிப்பில் சேர்த்துக் கிளறி எடுத்துக்கொள்ளவும்.



8. இந்தத் தாளிப்புக் கலவையில் பாதியைப் பருப்புக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். பச்சைக்கொத்துமல்லித் தழை சேர்க்கவும். மிகச் சிறிதளவு உப்புச் சேர்க்கவும்.




9. ஆப்பில் தாளிப்புக் கலவையில் மீதியை (சோய்) தயிர்ச் சோற்றில் கலந்துகொள்ளலாம்.


****************************************


குறிப்பு:
----------
ஆப்பிலை வில்லைகளாக நறுக்காமல் சதுரத் துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளலாம். எப்படியானாலும் ... ஆப்பிலை ரொம்ப நேரம் சுட வைக்க வேண்டாம்; வைத்தால் ... அதன் "நறுக்" என்ற மெல்லும் சுவை கெட்டுப்போகும். பச்சை நிறமும் மாறிப்போகும்.

பருப்பைக் குழையவும் வேகவைத்துக்கொள்ளலாம். பருப்பு நீர்க்க இருப்பது விருப்பமானால் அதற்குத் தகுந்த அளவு கூடுதல் தண்ணீர் சேர்த்து வேகவைக்கலாம். இந்தப் பருப்பு, பயத்தம்பருப்பை ("பாசிப்பருப்பை") விட வேகமாக வெந்துவிடும். அதிக நேரம் வேகவைத்தால் பருப்பின் நிறம் மாறிவிடும். அதனால் இதை நான் ரொம்ப நேரம் வேகவைப்பது இல்லை. எனக்கு இயற்கை நிறமும் சத்தும் பிடிக்கும்!

Wednesday, January 12, 2011

வித்தியாசமான பொடி ...

எண்ணெய் சேர்க்காமல் செய்த பொடி இது. எள்ளும் காயும் கலந்து செய்த பொடி.  தேங்காய்க்குப் பதிலாகக் காரட் (carrot) துருவலும் பார்சனிப் (parsnip) துருவலும் சேர்த்துச் செய்தது. (பார்ஸ்னிப் என்பது கொஞ்சம் சரியான ஒலிப்பைத் தரும்.)

பார்சனிப்பில் நார்ச்சத்தும் பிற சத்துக்களும் உண்டு. மற்ற விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://en.wikipedia.org/wiki/Parsnip



1. நல்ல காரட் (carrot), பார்சனிப் (parsnip) இவைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளவும்.




2. ஒரு காரட், ஒரு பார்சனிப் இவைகளின் தோலைச் சீவித் துருவி எடுத்துக்கொள்ளவும்.



3. காய்த் துருவலை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.



4. எள்ளு மிளகாய்ப்பொடி தயார் செய்துகொள்ளவும்.

(எள், மிளகாய் வத்தல் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துச் சிறிது உப்பும் பெருங்காயமும் சேர்த்துப் பொடித்து எடுத்துக்கொண்டால் எளிதாகச் செய்த எள்ளு மிளகாய்ப்பொடி கிடைத்துவிடும்.)



5. நான்கு பங்கு எள்ளு மிளகாய்ப்பொடிக்கு அரைப்பங்கு (இல்லை, அதற்குச் சிறிது கூடுதலாக, அவரவர் சுவைக்குத் தக்கபடி) உலர்ந்த காய்த் துருவலைக் கலக்கவும். விரும்பினால் சிறிதளவு உலர்ந்த கறிவேப்பிலைத் தழைகளும் போடலாம்.

6. மேற்சொன்ன கலவையைச் சிறிது கொரகொரப்பாகத் திரித்து எடுத்துக்கொள்ளவும்.

7a. கறிவேப்பிலைத் தழை சேர்க்காதது.



7b. கறிவேப்பிலைத் தழை சேர்த்தது.




மிகவும் சத்தும் சுவையும் நிறைந்த பொடி! வறுத்த உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்க்காததால் இதில் கர கர என்று கடித்து மெல்லும் சுவை இருக்காது. பருப்பைக் கடித்து மெல்லும் சுவை வேண்டுமென்றால் ... அந்தப் பருப்புக்களும் பொடித்த வேர்க்கடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

காரட், பார்சனிப் இரண்டுமே இனிப்புச் சுவை தரும். அதனால், முதல் தடவை செய்யும்போது சிறிய அளவில் கலந்து செய்து பார்த்துப் பிறகு விருப்பத்துக்குத் தகுந்தபடி அளவைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கலந்து செய்துகொள்ளலாம்.

Tuesday, January 11, 2011

அடுப்பு வகைகளும் ... பாத்திமாவில் பொங்கல் கொண்டாட்டமும்

இணையத்தில் கிடைத்த படங்கள்... சில:
-------------------------------------------------------

1. குமுட்டி அடுப்பு. கரி அடுப்பு.




2. விறகு அடுப்பு



3. கோட்டை அடுப்பு. விறகு அடுப்பு.



4. கற்களில் அடுப்பு. விறகும் சுள்ளியும் பயன்படுத்தி.




++++++++++++++++++++++++++++++++++++++++

பாத்திமாக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்.
--------------------------------------------------------------------

கிறித்துவக் கல்லூரிதான்! ஆனாலும் ... ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் சமைப்பது ஒரு பெரிய திருவிழாவாக நடக்கும். ஒவ்வொரு துறை மாணவியரும் அந்த நாளுக்கு என்று ஒரே மாதிரிப் புடைவையை உடுத்துவார்கள். இதற்காகத் தனியே புடைவை தயாரிக்கச் சொல்லிக் கடைகளுக்கு order கொடுத்ததும் உண்டு!

சுமார் 15 பானைகளில் பொங்கல் தயாராகும். கல்லூரியில் எல்லாரும் சாப்பிடுவோம். அதோடு, பக்கத்துக் கிராமத்துச் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பொங்கல் எடுத்துச் செல்லப்படும்.




உட்கார்ந்திருப்பவர்கள்: ஜானகியும் மீனாட்சி பாரதியும் (= மீனாட்சி முருகரத்தினம்). நிற்பவர்கள், பின் வரிசையில் இடமிருந்து வலமாக: விஜயபாரதி (பாரதியாரின் பேத்தி), Ms. V. Rajam (மலையாளி; எனக்கு ஆசிரியையாக இருந்தவர்). மற்றவர்கள் தமிழ்த்துறை மாணவியர். கீழே உட்கார்ந்திருக்கும் மீனா "மாசமாய்" இருந்தாள் போல; நினைவில்லை; "பாட்டி மாதிரி உட்கார்ந்திருக்கே, எழுந்திரு" என்று சொல்லிக் கிண்டல் செய்வது நான். கொண்டையோடு இருக்கும் நாங்கள் எல்லாரும் ஆசிரியைகள். பிற பெண்கள் மாணவியர். பழைய காலம்!!

Monday, January 10, 2011

இட்டிலி -- இரண்டு வகையில்...

இட்டிலிக்கு மாவு புளிக்காத இடத்தில் ஒப்புக்குச் சப்பாணியாக ... ஏதோ ... செய்தது...

பார்லி (barley), கீனுவா (quinoa), சோளக் குருணை (corn meal) -- இவை கலந்தது
---------------------------------------------------------------- -----------------------------------------------

இந்த வகை இட்டிலிகளை வெந்த பார்லி, வெந்த கொண்டைக்கடலை (chickpeas; garbanzo beans), சோளக்குருணை ... இவைகளை வைத்தும் செய்யலாம்.



1. வெந்த பார்லி (cooked barley) ஒரு பங்கு, வெந்த கீனுவா (cooked quinoa) ஒரு பங்கு ... இரண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

2. அரைத்த கலவையில் ஒரு பங்கு சோளக் குருணையைச் சேர்த்து, 8~10 மணி அளவு புளிக்க வைக்கவும்.

3. புளித்த மாவை இட்டிலிகளாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காஞ்சிபுரம் குடலை இட்டிலி போல ...
-----------------------------------------------------

1. 3/4 பங்கு பச்சரிசி, 3/4 பங்கு உமி நீக்காத மரநிற அரிசி (brown rice), ஒரு பங்கு நல்ல உளுந்து (உடைத்ததுதான் பயன்படுத்தினேன்; முழு உளுந்து இல்லை) -- இவைகளக் களைந்து நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும்.

2. ஊறிய அரிசிகளைக் கெட்டியாக, தண்ணீர் விடாமல், ரவைப் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

3. ஊறிய உளுந்தைக் கெட்டியாக, தண்ணீர் விடாமல், குழையாமல், பரபர என்ற பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

4. அரைத்த இரண்டு வகை மாவுகளையும் கலந்து, 2~3 தேக்கரண்டி புளித்த மோரும் சிறிது உப்பும் சேர்க்கவும்.




5. மாவை 8~10 மணி நேரம் புளிக்க வைக்கவும். (இங்கே இரண்டு நாள் புளிக்க வைத்தேன். சோய் மோர் மாவை நன்றாகவே புளிக்கவைத்தது!)

6. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, பச்சைக் கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு இவைகளைத் தாளித்து, மேற்சொன்ன புளித்த மாவில் கலக்கவும்.

7. சிறிது மிளகும் சீரகமும் பொடித்து எடுத்து மேற்சொன்ன மாவில் சேர்க்கவும்.



8. பூக்குடலை இருந்தால் (!!!) அதில் இந்த மாவை ஊற்றி இட்டிலிகளாகச் செய்து எடுத்துக்கொள்ளவும்!!

9. பூக்குடலை இல்லாததால் ... எப்பவும் போலவே இட்டிலியாக ஊற்றி எடுத்தது:



சின்னக் கோப்பை மாதிரியான கிண்ணத்தில் மாவை ஊற்றியும் இட்டிலியாகச் செய்யலாம் என்று கேள்வி.

Wednesday, January 5, 2011

வித்தியாசமான சாறு ...

மதுரையில் கற்றுக்கொண்டது... . இதன் பெயர் கழனிப் புளிச் சாறு. அங்கே என் நண்பர்கள் செய்தது அசல் கழனியை -- அரிசி களைந்த தண்ணீரை -- வைத்து. இங்கே நான் செய்தது பார்லி (barley) வேகவத்து வடித்த நீரை வைத்து.

1. அரிசியைக் களைந்த தண்ணீரை எடுத்துவைத்துக்கொள்ளவும். இங்கே வெந்த பார்லியை வடிகட்டி எடுத்தது.



2. சிறிய எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து, கல்லும் மண்ணும் இல்லாமல், ரசத்துக்குக் கரைப்பதுபோல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. மேற்சொன்ன இரண்டு கரைசலும் தனித் தனியே இருக்கட்டும்.

4. 10~15 சிறிய வெங்காயத்தை அரிந்து எடுத்துக்கொள்ளவும். (இங்கே செய்ததில் கொஞ்சம் பெரிய துண்டுகளாக அரிந்த கலவை.)

5. 4~6 வத்தல் மிளகாய் (தேவைக்கேற்ப) + கடுகு + கடலைப் பருப்பு + மஞ்சள் பொடி ("மஞ்சள் தூள்") + பச்சைக் கறிவேப்பிலைத் தழை எடுத்துக்கொள்ளவும்.

6. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் தாளிக்கவும். மஞ்சள் பொடி + பாதி அளவு பச்சைக் கறிவேப்பிலையைத் தாளிப்பில் சேர்த்துச் சிறிது வதக்கவும்.




7. இன்னொரு நல்ல பாத்திரத்தில் ஒரு பங்கு கழனிக்கு 3~4 பங்கு புளிக் கரைசலைக் கலந்து எடுத்துக்கொள்ளவும்.

8. புளிக்கரைசலில் தாளித்த வெங்காயக் கலவையைச்சேர்க்கவும்.

9. தேவையான அளவு சிறிது உப்புச் சேர்க்கவும்.

10. மேற்கண்ட கலவையை மிதமான சூட்டில் நன்கு கொதிவரும் வரை (அல்லது அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி, கலவை சிறிது வற்றிவரும் வரை) கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும்.

11. மீதி இருக்கும் பச்சைக் கறிவேப்பிலைத் தழையைச் சேர்க்கவும்.



மிகவும் சுவையான கழனிப் புளிச்சாறு தயார்! இது ரசம் போல நீர்த்து இருக்கும். புளிச் சுவையும் இருக்கும். அதனால் குழைந்த அரிசிச் சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் ... இரண்டும் கலந்து சுவை கூடித் தெரியும்!

Barley, noodles, oats, spaghetti போன்ற "அயல்" உணவுப் பொருட்களைச் சமைக்கும்போது வெந்த நீரை வீணாக்காமல் இந்த மாதிரிப் பயன்படுத்தலாம். பொருளும் வீணாகாது, சுவையும் கிடைக்கும்!

குறிப்பு: அரிசிக் கழனியானால் ... நல்ல, சுத்தமான அரிசியைக் கழுவினதாக இருக்கவேண்டும். இங்கே பார்லி வேகவைத்த நீரைப் புளிக்கவைத்துப் பார்த்தேன்; ம்ஹூம் ... இந்த ஊர்க் குளிருக்குப் புளிக்கவேயில்லை! :-( வெப்ப நாடுகளில் புளித்த கழனியைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். சிலருக்குக் "கொட்டுக் குழம்பு" நினைவுக்கு வரலாம்.