மதுரையில் கற்றுக்கொண்டது... . இதன் பெயர் கழனிப் புளிச் சாறு. அங்கே என் நண்பர்கள் செய்தது அசல் கழனியை -- அரிசி களைந்த தண்ணீரை -- வைத்து. இங்கே நான் செய்தது பார்லி (barley) வேகவத்து வடித்த நீரை வைத்து.
1. அரிசியைக் களைந்த தண்ணீரை எடுத்துவைத்துக்கொள்ளவும். இங்கே வெந்த பார்லியை வடிகட்டி எடுத்தது.
2. சிறிய எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து, கல்லும் மண்ணும் இல்லாமல், ரசத்துக்குக் கரைப்பதுபோல் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. மேற்சொன்ன இரண்டு கரைசலும் தனித் தனியே இருக்கட்டும்.
4. 10~15 சிறிய வெங்காயத்தை அரிந்து எடுத்துக்கொள்ளவும். (இங்கே செய்ததில் கொஞ்சம் பெரிய துண்டுகளாக அரிந்த கலவை.)
5. 4~6 வத்தல் மிளகாய் (தேவைக்கேற்ப) + கடுகு + கடலைப் பருப்பு + மஞ்சள் பொடி ("மஞ்சள் தூள்") + பச்சைக் கறிவேப்பிலைத் தழை எடுத்துக்கொள்ளவும்.
6. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் தாளிக்கவும். மஞ்சள் பொடி + பாதி அளவு பச்சைக் கறிவேப்பிலையைத் தாளிப்பில் சேர்த்துச் சிறிது வதக்கவும்.
7. இன்னொரு நல்ல பாத்திரத்தில் ஒரு பங்கு கழனிக்கு 3~4 பங்கு புளிக் கரைசலைக் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
8. புளிக்கரைசலில் தாளித்த வெங்காயக் கலவையைச்சேர்க்கவும்.
9. தேவையான அளவு சிறிது உப்புச் சேர்க்கவும்.
10. மேற்கண்ட கலவையை மிதமான சூட்டில் நன்கு கொதிவரும் வரை (அல்லது அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி, கலவை சிறிது வற்றிவரும் வரை) கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும்.
11. மீதி இருக்கும் பச்சைக் கறிவேப்பிலைத் தழையைச் சேர்க்கவும்.
மிகவும் சுவையான கழனிப் புளிச்சாறு தயார்! இது ரசம் போல நீர்த்து இருக்கும். புளிச் சுவையும் இருக்கும். அதனால் குழைந்த அரிசிச் சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் ... இரண்டும் கலந்து சுவை கூடித் தெரியும்!
Barley, noodles, oats, spaghetti போன்ற "அயல்" உணவுப் பொருட்களைச் சமைக்கும்போது வெந்த நீரை வீணாக்காமல் இந்த மாதிரிப் பயன்படுத்தலாம். பொருளும் வீணாகாது, சுவையும் கிடைக்கும்!
குறிப்பு: அரிசிக் கழனியானால் ... நல்ல, சுத்தமான அரிசியைக் கழுவினதாக இருக்கவேண்டும். இங்கே பார்லி வேகவைத்த நீரைப் புளிக்கவைத்துப் பார்த்தேன்; ம்ஹூம் ... இந்த ஊர்க் குளிருக்குப் புளிக்கவேயில்லை! :-( வெப்ப நாடுகளில் புளித்த கழனியைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். சிலருக்குக் "கொட்டுக் குழம்பு" நினைவுக்கு வரலாம்.
கிட்டத்தட்ட இது மாதிரி, சில மாற்றங்களுடன், அம்மா செய்யும் புளித்தண்ணி. எதிர்பார்ப்பு குறைவு என்பதால், விரும்பி சாப்பிடுவோம்.
ReplyDeleteஇப்பவும் உங்களுக்கு ஒத்துக்குமானால் செய்து சாப்பிடலாம். எளிதில் செய்யலாம். பருப்பு சாதத்தோடும் சேர்த்துச் சாப்பிடலாம், protein கிடைக்க.
ReplyDeleteஅம்மா, கீரை வகைகள், கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றை அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் வேகவைப்பது உண்டு. செட்டி நாட்டுப்பக்கம் அரிசிக் கழுநீரில் (சுத்தமானது) கீரையைப் போட்டு மண்டி என்றொரு பக்குவம் செய்வார்கள். நம்ம மீனா வந்தால் சொல்லலாம். :D
ReplyDeleteமீனாவெச் சீக்கிரம் வரச்சொல்லுங்க, கீதா! அவங்க சொல்ற மாதிரி நான் செஞ்சு பாக்கணும்!
ReplyDelete