Wednesday, January 12, 2011

வித்தியாசமான பொடி ...

எண்ணெய் சேர்க்காமல் செய்த பொடி இது. எள்ளும் காயும் கலந்து செய்த பொடி.  தேங்காய்க்குப் பதிலாகக் காரட் (carrot) துருவலும் பார்சனிப் (parsnip) துருவலும் சேர்த்துச் செய்தது. (பார்ஸ்னிப் என்பது கொஞ்சம் சரியான ஒலிப்பைத் தரும்.)

பார்சனிப்பில் நார்ச்சத்தும் பிற சத்துக்களும் உண்டு. மற்ற விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://en.wikipedia.org/wiki/Parsnip



1. நல்ல காரட் (carrot), பார்சனிப் (parsnip) இவைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளவும்.




2. ஒரு காரட், ஒரு பார்சனிப் இவைகளின் தோலைச் சீவித் துருவி எடுத்துக்கொள்ளவும்.



3. காய்த் துருவலை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.



4. எள்ளு மிளகாய்ப்பொடி தயார் செய்துகொள்ளவும்.

(எள், மிளகாய் வத்தல் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துச் சிறிது உப்பும் பெருங்காயமும் சேர்த்துப் பொடித்து எடுத்துக்கொண்டால் எளிதாகச் செய்த எள்ளு மிளகாய்ப்பொடி கிடைத்துவிடும்.)



5. நான்கு பங்கு எள்ளு மிளகாய்ப்பொடிக்கு அரைப்பங்கு (இல்லை, அதற்குச் சிறிது கூடுதலாக, அவரவர் சுவைக்குத் தக்கபடி) உலர்ந்த காய்த் துருவலைக் கலக்கவும். விரும்பினால் சிறிதளவு உலர்ந்த கறிவேப்பிலைத் தழைகளும் போடலாம்.

6. மேற்சொன்ன கலவையைச் சிறிது கொரகொரப்பாகத் திரித்து எடுத்துக்கொள்ளவும்.

7a. கறிவேப்பிலைத் தழை சேர்க்காதது.



7b. கறிவேப்பிலைத் தழை சேர்த்தது.




மிகவும் சத்தும் சுவையும் நிறைந்த பொடி! வறுத்த உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்க்காததால் இதில் கர கர என்று கடித்து மெல்லும் சுவை இருக்காது. பருப்பைக் கடித்து மெல்லும் சுவை வேண்டுமென்றால் ... அந்தப் பருப்புக்களும் பொடித்த வேர்க்கடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

காரட், பார்சனிப் இரண்டுமே இனிப்புச் சுவை தரும். அதனால், முதல் தடவை செய்யும்போது சிறிய அளவில் கலந்து செய்து பார்த்துப் பிறகு விருப்பத்துக்குத் தகுந்தபடி அளவைக் கூட்டியோ அல்லது குறைத்தோ கலந்து செய்துகொள்ளலாம்.

2 comments:

  1. டாப்ஸ்! லண்டனில் முதல் வேலை இது தான். சின்ன விஷ்யங்களில் என் தேவைகளை நானே கவனித்துக்கொண்டால், மருமகளுக்கும் ஒரு ரெலீஃப். இல்லையா? எனக்கும் தன்னிம்பிக்கை வளரும்.

    ReplyDelete
  2. எல்லார் உடம்புக்கும் நல்ல சத்துத் தரக்கூடியது! செய்து சாப்பிட்டு ஜமாய்ங்கோ 'இ' சார்!

    ReplyDelete