Tuesday, May 31, 2011

புதுச்சேரியிலிருந்து -- ஒரே நாளில் ...




ஈஸ்டருக்கு முந்தி ...


1. திருநள்ளாறு ... தர்ப்பாரண்யேசுவரர் கோவில்




2. வேளாங்கண்ணி மாதா கோயில் ...



3. தில்லைத் திருக்கூத்தன் கோவில் ...



எல்லாம் இயன்றது ... அன்பு நண்பர் மணிவண்ணன் + அவர் இனிய மனைவி ஆஷா + அவர்களின் வண்டியோட்டி கஜ ... இவர்களால்தான்! எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி; குறிப்பாக ... வேளாங்கண்ணிக்குப் போக நான் இழுத்தபடி வந்ததுக்கு! :-)

சனீசுரன் என்னை விட்டு விலகுவானோ, பிடிச்ச பிடியாய் இருந்து என்னை ஆட்டிவைப்பானோ தெரியலெ ... ஆனால் வேளாங்கண்ணி மாதாவிடம் எனக்கு ஒரு வேண்டுதல் உண்டு (எனக்காக இல்லை). அதை அந்த மாதா நிறைவேற்றிவைக்கவேண்டும்!


Saturday, May 14, 2011

செட்டிநாடு -- வயிரவன்பட்டி

1. கோயிலின் முன்புறம் ...



2. வெள்ளுவா (முழுநிலா, பவுர்ணமி) இரவுகூட இல்லை; ஆனாலும் நிலவு பால் ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால், கீழே தென்னை மரம் தென்படும்...



அழகான சிற்பங்கள் நிறைந்த கோயில். கட்டாயம் பார்க்கவேண்டிய இடம். காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

Friday, May 13, 2011

செட்டிநாடு -- அரியக்குடி

அழகு மிளிரும் அமைதியான ஊர் அரியக்குடி! கோவிலைக் காணக் கொடுப்பினை வேண்டும்! அந்தக் கொடுப்பினை எனக்கு இருந்ததென்றே தெரியாது!



கோவில் சார்ந்த மரம் ... பவளமல்லி ...


புது வாழ்வு ...
... மரத்தடியில் நாகர் ...


பார்க்கவேண்டிய இடம்; அழகான அமைதியான ஊர் ... அரியக்குடி! காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

Tuesday, May 10, 2011

செட்டிநாடு -- அமராவதிபுதூர்

அமராவதிபுதூரில் ஓர் அமைதியான ஆசிரமம் ... .

1. ஆசிரமத்தைத் தொடக்க நாள் முதல் பேணிவரும் பெருந்தகை திரு. பழனியப்பன்.




2. இவர் வீட்டிற்குப் பக்கத்தில் நிற்கும் மிகப் பெரிய இரண்டு நாகலிங்க மரங்களில் குலுங்கும் மொட்டுகளும் பூக்களும் ...









3. நாகலிங்க மரத்தில் காய்? பழம்? உள்ளே விதைகள் இருக்குமா?



4. நாகலிங்க மரத்தில் அண்மையில் பிறந்து வாழும் குட்டி ...



5. " நீங்கள் இன்று வந்து இன்றே போகும் விருந்தினர். நாங்கள் இந்த இடத்தில் நிலைத்த உரிமையாளர்" என்று உறுதியாகச் சொல்லும் கூட்டம் ...




6. ஐயோ, இந்த மகாராணியின் குரலுக்கு எதிர்க் குரல் கொடுக்க முடியவே இல்லை! இவளிடம் கொத்துப் படாமல் தப்பித்தது பெரும்பாடு!!




7. இந்த இடம் எங்களுக்கும்தான் என்று உரிமை கொண்டாடுபவர்களுக்குக் குறைவில்லை!



8. கண்ணுக்கு விருந்தோடு வயிற்றுக்கும் ... . அப்பளம், வத்தல், உருளைக் கிழங்குப் பொரியல், வெண்டைக்காய் மண்டி, சாம்பாருடன் ...



9. கமலி, அன்புமீனா, மீனாவின் தந்தையைப் பார்த்துக்கொள்ளும் பெண்மணி ...



10. பொறுமையாக எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுத்த வண்டியோட்டி ...


மனதுக்கு நிறைவும் அமைதியும் தரும் ஆசிரமம் கண்டு சுவைக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

செட்டிநாடு -- காரைக்குடி

ஆயிரம் ஜன்னல் வீடு ...

1. முகப்பு ...



2. படம் பார்ப்பவருக்கு இடது பக்கம் ...



3. படம் பார்ப்பவருக்கு வலது பக்கம் ...

 
4. வீட்டு முகப்பின் மேல் பக்கம் ... . (இந்த மொட்டை மாடி நெல்லைச் சீமை மொட்டை மாடியை நினைவுபடுத்தியது. கொள்ளுப்பாட்டி வீட்டு மொட்டை மாடியில் நின்றால் குற்றாலச் சாரல் வீசும்!)


5. வீட்டின் வலதுபுறக் கோடி ...


6. வீட்டின் இடதுபுறக் கோடி ...



தனித்த அழகுடன் காலம் கடந்து நிற்கும் வீடு இந்த "ஆயிரம் ஜன்னல் வீடு." தலை வணங்கி வாழ்த்துவது தவிர வேறு என்ன சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறது?

காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!
 

Monday, May 9, 2011

செட்டிநாடு -- கோவிலூர்

காரைகுடிக்குப் பக்கத்தில் இருக்கிறது கோவிலூர்.


1. நுழைவாயில் ... . கண்ணைப் பறிக்கும் வானத்தின் நீலம்!



2. கோயிலைச் சேர்ந்த குளம் ... . அமைதியின் வடிவம் ...



3. குளத்தின் மைய மண்டபம் ... . மண்டபத்துக்கு வலது புறம் (படம் பார்க்கும் பார்வையாளருக்கு இடது புறம்) தெரிவது கொற்றவாளீசுவரர் கோயில். நாங்கள் போன நேரம் இடைவேளை நேரம்போல; கதவு திறந்திருக்கவில்லை.



4. கொற்றவாளீஸ்வரர் திருக்கோவில் ...





5. கோவிலைச் சார்ந்த பள்ளிக்கூடம் ...



6. களைத்தோர் களைப்பாறத் தங்கும் சிறு மண்டபங்கள் ...




வேறென்ன வேண்டும்?! ஆடம்பரமில்லாத அழகிய, அமைதியான இடம் இந்தக் கோவிலூர். பார்க்கவேண்டிய இடம்.

Sunday, May 8, 2011

செட்டிநாடு -- ஆத்தங்குடி


ஆத்தங்குடியில் வியக்கத்தக்க ஒரு வீடு ...

வீட்டின் முகப்பே ... வீட்டை இவ்வாறு, இப்படியெல்லாம் அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றிய முன்னோரின் அறிவையும் கலையழகைச் சுவைத்த நுண்ணுணர்வையும் கட்டியம் கூறிப் பறைசாற்றுகிறது!


தலை தாழ்த்தி, காலை முன்வைத்து உள்ளே நுழைந்தால்  வாயிற்படியின் இருபுறமும் நல்ல நீள அகலத்துடன் நடைகள் (= தாழ்வாரங்கள்). ஒரு நூறு பேர் படுத்துறங்கலாம் போல!

தொடர்ந்து ... தரைக்கோலத்தின் வரவேற்பு!



தலை நிமிர்ந்தால், விட்டங்களின் பூரிப்பு!



விட்டத்தைத் தாங்கி நிற்கும் வலிய தூண்களின் பெருமித நிரை...



தூண்களின் போதிகை அரிய கலை நுணுக்கத்தின் வெளிப்பாடு...



நிலைக் கதவில் மரச் சிற்பங்கள். 'இது வீடா? கோயிலா?' என்று ஒரு நொடியாவது நினைக்காமல் இருக்கமுடியாது.




கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தால் ... 'வளவு!'



'ஆகா! இதுதான் "ஆதிகாலத்து ஒரிஜினல்" வளவா?! ஒருவாறாக இதை நேரில் பார்க்கக் கிடைத்ததே!' என்ற குதூகலத்துடன் உள்ளே போனால் ஒரு பெரிய 'நிலா முற்றம்' ... . கீழேயிருந்தே மேல்தளத்தையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டோம்.



வளவு ... பெரிய திறந்த வெளி; மேலே கம்பி போட்டுப் பாதுகாப்பு; வெயில் நுழையத் தடையில்லை. வளவின் துப்புரவான தரையில் அழகான கோலங்கள். இங்கேதான் இந்த வீட்டாருக்குத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்குமாம்.



திறந்த வெளியைச் சுற்றிலும் அகன்று விரிந்த நடை (= தாழ்வாரம்). வீட்டு மக்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒன்று என்று தனித் தனியாக அமைந்த இருப்பிடங்கள். தூண்களைத் தொட்டுப் பார்க்காமல் நகர முடியாது!


ஓர் இளம்பெண் தங்கள் இருப்பிடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தார். 'உள்ளே போய் அந்த இடத்தைப் பார்க்கலாமா?' என்று கேட்டோம். 'ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்; கதவைத் திறந்து உள்ளே காட்ட நேரமில்லை; சன்னல் வழியே எட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

'சரி, நன்றி' என்று சப்பென்ற குரலில் சொன்னோம். ஆனால் ஏமாற்றத்தால் தலை குனியாமல் நிமிர்ந்து பார்க்கவைத்தது அந்த நடையின் மேற்கூரை!



இரண்டாம் கட்டுக்குச் சிறிதே இறங்கிப் போகணும். ஓஓ ... கைப்பிடி ஏதும் இல்லாத படிக்கட்டு!


இந்த இரண்டாம் கட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்று தனித்தனியாக ... அம்மி, ஆட்டுரல், பாத்திரம் கழுவும் இடம், துணி துவைக்கும் இடம் என்று பல கருவிகளும் இடங்களும் மிக நேர்த்தியாக அமைந்து இருக்கின்றன. ஒரு வீட்டார் அம்மியை, ஆட்டுரலை, துவைக்கும் கல்லை, இடத்தை ... இன்னொரு வீட்டார் பயன்படுத்த மாட்டார்களாம்; அவ்வளவு துல்லியமான ஒழுங்குமுறை!

ஒரு குடும்பத்துக்கு என்று வகுக்கப்பட்ட ஓர் இடத்தில் சமையல் பாத்திரங்கள் கழுவித் துப்புரவாகக் கவிழ்த்துவைக்கப்பட்டு இருந்த காட்சி கண்ணுக்கும் நெஞ்சுக்கும் விருந்து!

இந்தக் கட்டில் இருக்கும் தூண்களும் தரையும் முதற்கட்டு வாயில் வளவுகளில் உள்ள தூண்களையும் தரைகளையும் விட வேறுபட்ட தன்மையும் அமைப்பும் தோற்றமும் கொண்டவை. 

இந்தக் கட்டிலிருந்து தோட்டப் பகுதிக்குப் போகலாம். என்னால் போகமுடியவில்லை. பிறரை அனுப்பிவைத்தேன். அதன் பிறகு 'இன்னும் பார்க்கணும்; ஆனாலும் ... பார்த்தது போதும்' என்ற நிறைவுடன் வீட்டின் முன்வாயிலுக்கு வந்தோம்.

முன்வாயிலில் வீட்டின் முதல் உரிமையாளரின் பேரர், இன்றைய உரிமையாளர் ஒருவர்... . அவர் பின்னால் உள்ள நடையைப் பாருங்கள்!


கண்ணுக்கும் மனதுக்கும் நல்ல விருந்து கிடைத்தது! வீட்டின் தலைமுறைகளுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டோம்.

(அடுத்து இயன்றால் ... அமராவதிபுதூர்)