Saturday, September 24, 2011

அது அந்தக் காலம் - 2

1. ஆன் ஆர்பரில் (Ann Arbor, Michigan; 1981?) ... தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு  ஆர்வலரின் சிறு கூட்டம்; முதல் முயற்சி. நான் குடியிருந்த சிறு வீட்டில் ... 2~3 நாட்கள். நேரம் போவது தெரியாமல் ... களைப்படையாமல் ... பேசி, விவாதித்து, மொழிபெயர்த்து ... மிக அருமையான நிகழ்வு! 

இடமிருந்து வலமாக: டேவிட் பக், பௌலா ரிச்மன், நான், நார்மன் கட்லர்.

அந்தக் கூட்டத்தின்போதுதான் இறையனார் களவியல் பற்றிச் சொன்னேன்; மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று. டேவிட் பக் பின்னாளில் அதைச் செய்துமுடித்தார். பௌலா ரிச்மன் முனைவர் பட்டத்திற்கு மணிமேகலை ஆய்வு. பின்னாளில் ... பிள்ளைத்தமிழ். பிறகு பலவகை இராமாயணம். நார்மன் கட்லர் ஏ. கே. ராமானுஜன் அவர்களின் அருமை மாணவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இளவயதில் இறந்துவிட்டார். தமிழுக்கு மேலும் ஓர் இழப்பு.

2. பிலடெல்பியா (1982-க்குப் பிறகு). ஆசிய இலக்கிய மாநாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் பற்றிய கருத்தரங்கு.

இடமிருந்து வலம்: நான் (கருத்தரங்குத் தலைமை; பேசியது உலா இலக்கியங்கள் பற்றி), நார்மன் கட்லர் (பேசியது  திருக்கோவையார் பற்றி), பௌலா ரிச்மன் (பேசியது பிள்ளைத்தமிழ் பற்றி), டேவிட் ஷுல்மன் (பேசியது பரணி பற்றி). அருமையான கருத்தரங்கு!


3. வாஷிங்டனில்.


டேவிட் ஷூல்மன் அருகில் இருக்கும் பையில் ... சுந்தரர் தேவாரம் -- அவருடைய மொழிபெயர்ப்பு ... உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில். நூல் வெளியிடப்பட்டது 1990-இல். டேவிட் போல் முனைந்து தேவாரத்தைப் படித்தவரைக் கண்டதில்லை.

Friday, September 23, 2011

காலம் மாறுது ...

இங்கே "இலை உதிர் காலம்" தொடங்குகிறது. மனிதர் வகுத்த கால அட்டவணைக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட நாளில் இயற்கை தன் வடிவை மாற்றிக்கொள்ளத் தொடங்காது. இயற்கையின் மாற்றம் தொடர்ச்சியைக் காட்டும்.

1. என் வீட்டு முன் இருக்கும் மரம் காட்டும் இலை அழகு ... கால மாற்றத்தின் அறிகுறி ...

 

சில நாட்களில் இன்னும் சில மாற்றம் ...




2. எதிரே இருக்கும் மெக்னோலியா (magnolia) மரத்தில் ... எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பூ ...




3. வீட்டில் பிழைத்துத் தழைத்துவரும் சிறு மஞ்சள் (?) / மாங்காய் இஞ்சி (?) ...





4. கருவெப்பிள்ளெ (!) / கறிவேப்பிலை ... . எத்தனைச் செடிகள் இருந்தாலும் போதாது ... . தழை தழை என ஒன்றே வேண்டுவது!





5. இவர்கள் யார் என்று தெரியவில்லை ... கம்பு, தினைகளைத் தூவியதின் விளைவு!






6. இவள் யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. பெரும்பாலும் கேன்டலோப் (cantaloupe) ஆக இருக்கலாம். இவள் தளிர் விட்டிருக்கிறாள் என்று இவளுக்கு நான் சொல்லணுமா? இல்லை, "நான் தளிர்த்திருக்கிறேன், கொம்பு தா" என்று இவள் எனக்குச் சொல்லுகிறாளா? என்ன செய்வேன் இந்தக் குப்பைக் கொழுந்தை?



கால மாற்றமும் நல்லதுதானே!


Thursday, September 22, 2011

தலைக்கு மேலே ...



1. வேலைக் கூடு (cube) ...




2. தலைக்கு நேர் மேலே ...



எந்த நேரம் அந்தக் கடப்பாரை (== இரும்புத்தடி) கீழே விழுமோ என்ற அச்சத்திலேயே வேலைபார்த்த நாட்கள் ...


Wednesday, September 21, 2011

தலைப்பு இல்லாதது ... - 1

தலைப்பு இல்லை, ஏன் என்றால் இந்தக் கருத்துக்கு வரையறை கொடுக்க இயலவில்லை.
  
பறிக்காமல் ... பார்த்து மட்டுமே நான் பழகி வணங்கும் மலர்கள் என் சிறு தோட்டத்தில்.

பேசாமல் பேசும் இவர்களின் உணர்வு வெளிப்பாட்டைச் சில சமயம் தாங்கிக்கொள்ள முடியாது!

என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனாலும் அவர்களுடன் பேசுவேன், அவர்களைக் கொஞ்சுவேன்; கையில் முள் ஏறியதும் உண்டு!

சில நண்பர்களை மட்டும் இங்கே இணைய நண்பர்களுக்காக ... அறிமுகம்.

1. மாயோன் கைச்சங்கு என்னிடம் இருந்து போனதுதான்!


2. நாணம் ...



3. வருத்தம் ...



4. சிலிர்ப்பு ...


  
5. பணிவு ...


6. அரவணைப்பு ...


7. வெறியாட்டம் ...


(தொடரும்...)

Saturday, September 17, 2011

எங்கும் நிறைந்தாயே ...

நிறைந்திருக்கும் அதன் பெயர் அவரவர் கருத்துக்கு ஏற்றபடி ... இறைப் பொருளோ, இயற்கையோ, அழகோ ... அதைக் கண்டு சுவைக்க நான் தவறுவதாக இல்லை!

1.   வண்டி விரைந்து ஓடிய வழியில் ...



2.   திருச்சி ... மலைக்கோட்டை ... உச்சிப்பிள்ளையார் + தாயுமானவர் (?) கோயில்கள் ...



3. விராலிமலை ...



4.   ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரில் ... கவலையில்லாமல் ... வேம்படி விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் ...



5. வானும் மலையும் நிலனும் உறவாட ...








பத்துப் பனிரெண்டு இல்லாவிட்டாலும் ... ஏதோ ஒண்ணு ரெண்டு தென்னை மரம் பக்கத்திலே இருக்கு!





காற்று வெளியிடையே ...



6. உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் ... . இது 'இ' சாருக்காக ...




7. "அசலை" நாங்கள் பின்னுக்குத் தள்ளுவோமே! ...






 

8. எங்கள் எழுத்து ... இயற்கையின் தலையெழுத்து ... 






9. வானவில் ... வாழ்க்கையின் அழகையும் நிலை(யா)மையும் காட்டி ... 


10. சிறு வயதிலிருந்தே காதல் ... இந்த ஆனைமலைமேல்! இப்போ ... கடன் வாங்கி ஒரு நிலம் வாங்கிப் போட்டுவிட்டேன், அது சரியோ தவறோ! ஒரு தமிழ்க் கூடம் கட்ட ஆசை! ஆசை யாரை விட்டது? என்னை அது என்றுமே விடாது! தமிழன்னை என்னைக் காக்கவேண்டும். 





குறிப்பு: கடைசி மூன்று படங்கள் தவிர மத்தது எல்லாம் ... விரைந்து ஓடும் வண்டியின் கண்ணாடிச் சன்னல் வழியே எடுத்தவை. எங்கும் நிறைந்த இயற்கையை அகத்தினுள் பிடித்துவைக்க முயற்சி தேவையில்லை; ஆனால் அதை வெளிப்படுத்த எவ்வளவு முயலவேண்டியிருக்கிறது! ஆனாலும் அந்த முயற்சி நல்ல பலன் கொடுக்கிறது!

என் உயிருள்ளவரை இயற்கையைச் சுவைத்து வணங்கி மகிழ்வேன்.



Friday, September 16, 2011

சிறு தோட்டம் ... பெரு நாட்டியம் ...


ஒரு குருவிக்கதை.

இது நம்மூர்ச் சிட்டுக்குருவி இல்லை. சரியான பெயர் தெரியாது. அதனால் இது என் "பெருங்குருவி." அடிக்கடி வரும் போகும் ஒற்றையும் இரட்டையுமாக. நேற்று மட்டும் இரண்டு ஒன்றை ஒன்று விரட்டிப் பிடிக்கும் விந்தையைப் பார்த்தேன். மற்றபடி, இப்போதைக்கு இந்த ஒற்றை மட்டுமே ஒவ்வொரு நாளும் தென்படுகிறது. 

விழியம் பார்க்க: ( http://www.youtube.com/watch?v=NvnpXw5yFQc)

[எனக்கு meditation செய்ய வேற வகை yoga tape தேவையில்லை. இது போதும்.]

இது எப்போதும் இவ்வளவு "குண்டாக" இருக்காது. என்னவோ நடந்திருக்கிறது! சீக்கிரமே முட்டைகள் வெளியே வரலாம்?! அதற்கும் தயாராக என் வீட்டு இறையில் ஒரு கூடு.  

4 ~ 5 ஆண்டுகளாகவே இருக்கு. பல பக்கத்து வீடுகளில் பூனை வளர்ப்பு. அந்தப் பூனைகளுக்குத் தப்பி இங்கே ஒரு புகலிடம்! எனக்குப் பெருமிதம்.



சில ஆண்டுகளுக்கு முன் ... முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சைப் பறக்கவைக்க ஒரு தாய்ப் பறவை(?) செய்த முயற்சி என்னைச் சிலிர்க்கவைத்தது. தாய்ப் பறவை எங்கேயிருந்தோ இன்னொரு பறவை(தந்தைப் பறவை?)யைக் கூட்டி வந்தது. பிறகு தன் கூரிய அலகால் குஞ்சின் அலகைப் பிடித்து ஆட்டி ஆட்டி ஆட்டி அதைக் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தது. இரண்டு பெரிய பறவைகளுமாகச் சேர்ந்து அந்தக் குஞ்சைக் கூட்டிலிருந்து வெளியே எடுத்துப் போயின. இதையெல்லாம் என் சமையலறைச் சன்னல் வழியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இயற்கையின் படைப்பில்/அழகில் வாயடைத்துப் போனது; கண்களில் கண்ணீர்; நெஞ்சில் கசிவு.

பிறகு ... ஒரு முறை ... வெளியே வந்தபோது ... ஒரு முட்டை கீழே விழுந்து உடைந்து சிதறியிருந்தது பார்த்து ... மனது துணுக்குற்றது. எப்படி நடந்திருக்கும், பாவம், என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டேன். 

முட்டை உடைந்து கறைப்பட்ட தரையைத் துப்புரவாக்க எவ்வளவு முயன்றும் கறை போக மறுக்கிறது -- இன்றும் ... பல ஆண்டுகள் கழித்தும்!  


மிகைப்படுத்தாமல் சொல்கிறேன் ... முட்டை உடைந்து சிதறிய அந்த ஆண்டில்தான் என் பொருளாதார நிலை சரியத் தொடங்கியது; இன்னும் மீண்டு சமநிலைக்கு வரவில்லை.


குருவி ஜோசியமோ??

முதுசொம் அருமை ... பாரதி நூலொன்று ...


என் சிறையில் ...


1. நூலின் உள்ளே காணும் படம் ...




2. நூலின் அறிமுகம் ... . கூர்ந்து பாருங்கள் ... ஆண்டு, விலை எல்லாம். இரண்டாம் பதிப்பு 1500 படிகள். 1499 படிகள் எங்கே போயின?




3. நன்றி: நூலை வாங்கிப் பாதுகாத்த என் தந்தைக்கும் தாய்க்கும், அதை என் கூடவே கட்டி இழுத்துவரும் எனக்கும்தான் (why not!!??). :-) "கிரந்த" எழுத்து எதிர்ப்பாளர் என் அருமைத் தந்தையின் எழுத்தைப் பொறுப்பாராக! :-)



இதேபோன்ற பழைய நூல்கள் பல வகை, பல காலத்தவை ... கைவிட்டுப் போயின -- தெரிந்தும் தெரியாமலும். இன்னும் ஒரு சில எங்கோ ஒரு வீட்டுச் சேந்தியில். மனம் மட்டும் அவற்றின்மேல்.

Saturday, September 10, 2011

பருவம் என்னைத் தள்ளிவிட்டது ...

இதையே ... பண்டைத் தமிழில் "யாமும் உள்ளேம்" என்று சொல்லலாம்.

குருவி, புறா, பூனை, நாய், ... , செடி, கொடி, மரங்களைப்போல நம்முடன் உறவாடுவதில் ஈடு இணை வேறு எதுவும் இல்லை; அதெல்லாமே பேசாமல் பேசும்!


1. நான் பூத்துவிட்டேன் ...






2. இங்கெ பாருங்க ... எனக்கு எந்த வசதியும் இல்லெ -- தண்ணி குடுக்க ஒரு தளிர்கூட இல்லெ. ஆனாலும் ... பருவம் என்னைத் தள்ளிவிட்டது ... . இனி ... நான் ... எங்கேயோ? யார் கையிலோ?







3. நீ பார்க்காவிட்டால் என் இளமை காத்திருக்குமா? நான் காய்த்துவிட்டேன் ... . ( நிலத்திலிருந்து இரண்டு அடிக்கும் குறைவான கிளையில்! )





4. ஏனய்யா ஆப்பிலுக்கும் ஆரஞ்சுக்கும் என்று ஒப்புமை? எனக்கும் ஆப்பிலுக்கும் ஒப்புமை பாருங்க ... .





எல்லாமே என் வீட்டுத் தோட்டத்தில் நடந்த கதை!

இயற்கைக்கு என் நன்றி!