Thursday, September 8, 2011

அடை காக்க ...



அன்பின் மோகனின் "படிப்பின் வாசனை"ப் பதிவில் சொன்ன குருவிக்கதை என் மனதைத் தொட்டது. தாய்க்குருவி ஒன்று ஏதோ சொன்னதாக அவர் உணர்ந்திருக்கிறார். அது எனக்கு முழு உடன்பாடே.

நானும் ... குருவிகள், புறாக்கள், செடி கொடிகள் ... எல்லாம் என்னிடம் பேசுவதுபோல் ... சிறுவயதிலிருந்து எப்போதும் உணர்ந்துவருகிறேன். 

இப்போதைக்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டு. 

என்னைப் போன்றவர்கள் புறாக்களை வீட்டில் வைத்து வளர்ப்பதில்லை.  வெளியே திரிந்துவரும் புறாக்களைப் புண்படுத்துவதும் இல்லை.  

சில இடங்களில் இந்தப் புறாக்கள் கூடுகட்டியோ கட்டாமலோ ரொம்பத் தொந்தரவு கொடுக்கும் ... பொய்யில்லை! ஆனால் அதற்காக அந்தப் புறாக்களைத் தொந்தரவு செய்ததேயில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்னால் ... 

வட கலிபோர்னியாவில் ஒரு சின்ன ஊரில், அமைதியான ஒரு சின்ன அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு. மிக அழகிய இடம்.  


அங்கே மயில் ஒன்று இருந்தது. அவ்வப்போது தலைகாட்டும்! ஒரு நாள் அது ஊரின் நடுவே ஒய்யாரமாக நடந்து சென்றபோது ... போக்குவரத்து நின்றது உண்மை, பொய்யில்லை.  
 
வருவாய் தரும் வேலைக்காக என்று ஒவ்வொரு நாளும் ~ 130 மைல் தொலைவு காலையும் மாலையுமாக வண்டி ஓட்டிப் போய்வர வேண்டியிருந்தது. காலையில் 65 மைல் ட்ரைவ்; மாலையில் அதே. சில மழை நாட்களில் 2.5 மணி நேரம் கூடுதலாகப் பாலம் கடக்க வேண்டியும் இருந்த நிலை. அதோடு வயதின் தளர்ச்சியும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நேரம் -- மெனோபாஸ் (menopause) என்பார்களே அது. வாழ்க்கையில் பல பல குழப்பம்.

இந்த நிலையில் ... வேலை கிடைத்த இடத்திற்குப் பக்கத்தில் வீடு பார்க்கத் தொடங்கினேன். அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு ஏதோ ஓர் இடம் கிடைக்கும்போல் தெரிந்தது.

இதற்கிடையில் ... கால நிலைகள் (seasons) கடந்திருக்கின்றன என்னைக் கேட்காமலே!  

 
குடியிருந்த வீட்டின் வெளி மாடியின் பக்கம் குளிர்/பனி/மழை காரணமாகப் பல நாட்கள் போகாமல் இருந்திருக்கிறேன், எனக்கே தெரியாமல். 

வீட்டைக் காலி செய்யவேண்டும் என்றால் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினேன். 

அப்போது ... பல குளிர் மாதங்களுக்குப் பின் வெளி மாடிக்குப் போனேன். 

அப்போது பார்த்தது ... உடலையும் மனதையும் சிலிர்க்க வைத்தது ... .



இப்போது இந்த வீட்டைக் காலி செய்து நான் போனால் ... இந்த முட்டைகளைத் தூக்கி எறிந்துவிடுவார்களே.  

சரி, இந்த முட்டைகள் குஞ்சுகள் ஆகும்வரை ... வீடு மாற்றும் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று முடிவு.

அதுமுதல் ... அந்த முட்டைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு பறவை வந்து அந்த முட்டைகளின்மேல் உட்கார்ந்து அடைகாக்கும். நான் அங்கே போனால் அச்சத்துடன் பறந்துபோகும். அதனால் வெளியே போய்ப் பார்த்துக் குறுக்கிடமாட்டேன்.

வியப்பான உண்மை ... இரண்டு பறவைகள் -- அவை அந்த முட்டைகளின் தாயும் தந்தையுமாக இருக்கவேண்டும். ஒன்று வெளியே பறந்து போய்க் கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிவரும். அதுவரை இன்னொன்று அந்த முட்டைகளின்மேல் உட்கார்ந்து அடைகாத்துக்கொண்டிருக்கும். இது நான் பார்த்துப் பார்த்து வியந்து போற்றிய உண்மை!

அந்த முட்டைகளையும் தாய்/தந்தைப் பறவைகளையும் தொல்லை செய்யாமல் காத்திருந்து ... ஒரு நாள் வெளியே எட்டிப் பார்த்தேன் ... முட்டையிலிருந்து பஞ்சுப் பொதிபோல ...  

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு ...

பிறகு அந்தச் சிறு குஞ்சுகளுக்குத் தாய்/தந்தைப் பறவைகள் பறக்கக் கற்றுக்கொடுத்ததையும் பார்த்தேன். முடிந்த அளவு படமும் பிடித்தேன்.

மேலே உள்ள ஒவ்வொரு படத்திலும் பாருங்கள் ... குஞ்சுகளின் வளர்ச்சியோடு ... அவை வளர்ந்த தொட்டியைச் சுற்றிய புழுக்கையின் அளவையும்! தாய்/தந்தைப் பறவைகளின் அட்டகாசம்!

வீட்டைக் காலி செய்தபோது ... அந்த இடத்தைத் துப்புரவு செய்ய எனக்கு ஆன செலவு 300 டாலர் (அந்தக் காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை!). ஆனால் ... மகிழ்ச்சியும் மன நிறைவும் கணக்கில் அடங்கா!





4 comments:

  1. காக்கை, குருவி எங்கள் ஜாதி! என்ற பாரதி வரியை மெய்ப்பித்துவிட்டீர்கள். அவைகள் உம்மை வாழ்த்தும்!

    ReplyDelete
  2. விலங்கினத்தின் நேயப்பண்புகளின் வரலாற்றில் ஒன்று. ஒடிஸாவின் ஸீம்லிப்பாரா கானகத்தில் என் நண்பர் ஸரோஜ் ராஜ் செளதரி ஒரு அனாதை புலிக்குட்டி (கெய்ரி: அவள் பெயர்) வளர்த்தார். செவிலித்தாய் ப்ளேக்கி என்ற நாய் குட்டி போட்டிருந்தாள். அவளிடம் கெய்ரிக்கு பயபக்தி. கெய்ரிக்கு குட்டிகளுடன் விளையாடவேண்டும். அவளுக்கோ, இவளின் நகங்கள், வலிமை பற்றி கவலை. வாசற்படியில் நின்று கொண்டு, நகங்களை சுருக்கிக்காட்டி, கெய்ரி கெஞ்சியதையும், ப்ளேக்கி அனுமதித்தையும் சொல்லி, சொல்லி, மாய்ந்து போவார்,ஸரோஜ்

    ReplyDelete
  3. அந்த நாட்களில் ... நான் என் தனி வாழ்வில் பட்டதையும், இந்த முட்டை/குஞ்சுகளின் உருவாக்கத்திலும் ... என் உணர்வை, சொற்களில் சரியாக வடிக்கவே முடியாது. அது தேவையும் இல்லை. அது போகட்டும்.

    ஒவ்வொரு நாளும் துடியாய்த் துடித்திருப்பேன் -- பூனையோ வேறு எதுவுமோ இந்த முட்டைகளைக் கொண்டுபோகாமல் இருக்கவேண்டுமே என்று வேண்டி.

    நல்ல வேளை ... முட்டைகள் குஞ்சாயின. முட்டையின் ஓடே குஞ்சின் தோலாக/சிறகாக ஆன உண்மை அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. புறாவின் சிறகு ஏன் அவ்வளவு வலிமை உடையது என்பதும் புரிந்தது.

    பாவம், கோழி.

    ReplyDelete
  4. முட்டையின் ஓடே குஞ்சின் சிறகாக ஆகும் என்பதை நானும் இப்போதே அறிந்தேன் அம்மா. வெகு பொறுமையாகவும், அழகாயும் படம் பிடித்திருக்கிறீர்கள். உங்கள் ரசனையும், கனிந்த உள்ளமும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

    இன்னம்புரார் சொல்லும் செய்தி அதிசயிக்க வைக்கிறது.

    ReplyDelete