ஒரு குருவிக்கதை.
இது நம்மூர்ச் சிட்டுக்குருவி இல்லை. சரியான பெயர் தெரியாது. அதனால் இது என் "பெருங்குருவி." அடிக்கடி வரும் போகும் ஒற்றையும் இரட்டையுமாக. நேற்று மட்டும் இரண்டு ஒன்றை ஒன்று விரட்டிப் பிடிக்கும் விந்தையைப் பார்த்தேன். மற்றபடி, இப்போதைக்கு இந்த ஒற்றை மட்டுமே ஒவ்வொரு நாளும் தென்படுகிறது.
விழியம் பார்க்க: ( http://www.youtube.com/watch?v=NvnpXw5yFQc)
[எனக்கு meditation செய்ய வேற வகை yoga tape தேவையில்லை. இது போதும்.]
இது எப்போதும் இவ்வளவு "குண்டாக" இருக்காது. என்னவோ நடந்திருக்கிறது! சீக்கிரமே முட்டைகள் வெளியே வரலாம்?! அதற்கும் தயாராக என் வீட்டு இறையில் ஒரு கூடு.
4 ~ 5 ஆண்டுகளாகவே இருக்கு. பல பக்கத்து வீடுகளில் பூனை வளர்ப்பு. அந்தப் பூனைகளுக்குத் தப்பி இங்கே ஒரு புகலிடம்! எனக்குப் பெருமிதம்.
சில ஆண்டுகளுக்கு முன் ... முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சைப் பறக்கவைக்க ஒரு தாய்ப் பறவை(?) செய்த முயற்சி என்னைச் சிலிர்க்கவைத்தது. தாய்ப் பறவை எங்கேயிருந்தோ இன்னொரு பறவை(தந்தைப் பறவை?)யைக் கூட்டி வந்தது. பிறகு தன் கூரிய அலகால் குஞ்சின் அலகைப் பிடித்து ஆட்டி ஆட்டி ஆட்டி அதைக் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தது. இரண்டு பெரிய பறவைகளுமாகச் சேர்ந்து அந்தக் குஞ்சைக் கூட்டிலிருந்து வெளியே எடுத்துப் போயின. இதையெல்லாம் என் சமையலறைச் சன்னல் வழியே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இயற்கையின் படைப்பில்/அழகில் வாயடைத்துப் போனது; கண்களில் கண்ணீர்; நெஞ்சில் கசிவு.
பிறகு ... ஒரு முறை ... வெளியே வந்தபோது ... ஒரு முட்டை கீழே விழுந்து உடைந்து சிதறியிருந்தது பார்த்து ... மனது துணுக்குற்றது. எப்படி நடந்திருக்கும், பாவம், என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டேன்.
முட்டை உடைந்து கறைப்பட்ட தரையைத் துப்புரவாக்க எவ்வளவு முயன்றும் கறை போக மறுக்கிறது -- இன்றும் ... பல ஆண்டுகள் கழித்தும்!
மிகைப்படுத்தாமல் சொல்கிறேன் ... முட்டை உடைந்து சிதறிய அந்த ஆண்டில்தான் என் பொருளாதார நிலை சரியத் தொடங்கியது; இன்னும் மீண்டு சமநிலைக்கு வரவில்லை.
குருவி ஜோசியமோ??
என் மனமும் இவற்றுக்கெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புகளைக் கற்பித்தே வரும், வருகிறது. வந்தது. சரியாகிவிடும் அம்மா. கவலைப்படாதீர்கள். குருவிக்கு அடைக்கலம் கொடுத்தமைக்கு நன்றி. பாவம் அந்தக் குருவிகள்! :(((( இங்கே பூனை குருவிகளைப் பிடிப்பதையும் காண நேர்ந்தது. அதே பூனை தன் குட்டிகளை நாயிடமிருந்து காக்கப்போராடியதையும் கேட்க நேர்ந்தது. இரவு வேளை, மூன்று நான்கு நாய்கள் வெறியுடன் பூனைக்குட்டிகளை வேட்டையாடின. அப்போது வெளியே போய் நாய்களை விரட்டுதல் ஆபத்து எனச் செல்லவில்லை; காலையில் பார்த்தால் வரிசையாக அழகுக்குட்டிகள் ஐந்து குட்டிகள்! எப்படிச் சொல்வேன்! :((((((
ReplyDelete