முந்தாநாள் மழை ..
அது கிடக்கட்டும். இப்ப என்ன சொல்ல வாரேன்? உங்க ஊர்லெ இப்போ மழை இல்லையா? எங்க ஊர்லெ சில நாட்களாகச் சிலுசிலு-என்று மழை, பெருத்த மழையில்லை, ஆனாலும் எங்களுக்கு ரொம்பவும் தேவையான மழை. இன்னும் தேவையான மழை. நாங்க இருக்கிறது பாலைவனக் கலிஃபோர்னியா.
ஒரு மழைக்காலக் குறுந்தொகைப் பாட்டு (#270) அடிக்கடி நினைவுக்கு வரும். அதை இப்போது எங்க ஊர் மழைக்காலத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
“தாழ்-இருள் துமிய மின்னி-த் தண்ணென
[எங்கும் கவிந்த இருட்டைப் பிளந்து, குளிர்ச்சியாக … ]
வீழ்-உறை இனிய சிதறி, ஊழின்
[கீழே விழுகிற துளிகள் எங்கும் சிதறி, முறை முறையாக … ]
கடிப்பு-இகு முரசின் முழங்கி, இடித்து இடித்து-ப்
[அறைகோல் தழுவும்/சறுக்கும் முரசைப் போல முழங்கி, இடித்து இடித்து … ]
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே
[பெய்து வாழ்க, பெரிய வானமே! யானும் … ]
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
[மேற்கொண்ட செயலை முடித்த பெருமிதம் கொண்ட நேரிய உள்ளத்தோடு]
இவளின் மேவினம் ஆகி-க் குவள-க்
[இவளை அடைந்தேன்; குவளையின்]
குறுந்தாள் நாள்மலர் நாறும்
[குறுகிய தண்டில் அன்று மலர்ந்த மலரைச் சூடிய நறுமணம் பொருந்திய]
நறுமென் கூந்தல் மெல்லணையேம்-ஏ”
[மிக மென்மையான கூந்தல் எனக்கு மென்மையான அணை]
ஏதோ ஒரு கடமைக்காக வெளியூர் போயிருந்த தலைவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான். போன இடத்தில் என்னென்ன கடுமைகளோ அதெல்லாவற்றையும் கடந்து வெற்றியுடன் வீடு திரும்பியிருக்கிறான். மேற்கொண்ட கடமையைச் செய்து முடித்த பெருமிதம். அந்த நேரத்தில் மழை பெய்கிறது. மழையை வாழ்த்துகிறான்!
‘நான் என் கடமையை முடித்து வீடு திரும்பிவிட்டேன்; இனிமேல் கார் வானம் இடித்து இடித்து மழை பெய்யட்டும். மேற்கொண்ட கடமையை முடித்த நேர்மையான உள்ளத்தோடு இவளிடம் சேர்ந்திருக்கிறேன். வானமே, இப்போது மிக நன்றாக இடித்து இடித்து மழையைப் பெய்க! … ‘
இன்றைய சொற்களில் சொல்லப்போனால் … ‘என் கடமையை முடித்துவிட்டேன், இப்போது இடிமழை பெய்தாலும் எனக்குக் கவலையில்லை. மழை பொழியும் சுகத்தில் என் துணைவியின் நெருக்கத்தில் எனக்குச் சுகம்.’
என்ன அழகான பாடல்!
கார்காலத்தில் பகைவரை வெல்லுதல் கடிது என்பதை இலக்கியத்திலிருந்து அறிவோம், இல்லையா? இராமன் + சுக்கிரீவன் படைகள் சீதையைச் சிறை மீட்பதற்காகக் கார்காலம் முடியக் காத்திருந்ததாகப் படித்த நினைவு.
இந்த 21-ஆம் நூற்றாண்டுக் கார்காலத்தில், அன்பர்களும் நண்பர்களும் ஒரு கட்டிடத்துக்குள் கூடி, பேசி, வேண்டிய உணவு வகைகளைத் தின்பதுக்கு என்றே ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு! எல்லாமே நெருக்கம் (cozy) என்ற வகையில் அடங்கிவிடும்!
ஆனாலும் … நம்ம சங்கத்தலைவன் சொன்னதில் உள்ள நயம் எல்லாருக்கும் தெளிவாகப் புலப்படுமா? தனக்கும் தன் உறவுக்கும் இடையே உள்ள காதலைப் பொதுவிடத்தில் சொல்ல இந்த வகை நயநாகரிகத்தைக் கற்றுக்கொள்வது நல்லது, இல்லையா?
நிற்க.
எங்கூர்லெ மழை பெய்வது அரிது. சில நாள் முன்னர் பெய்த மழையை வீட்டுக்குள்ளேயிருந்து ‘பிடிக்க’ முயன்றேன்.
நன்றி,
ராஜம்