Saturday, March 28, 2015

கீரை -- பீட்ரூட் கீரை

பீட்ரூட் கீரையை மிக எளிய முறையில் பயன்படுத்துவது ...
--------------------------------------------------------------------------


இலை, தழை, கீரை வகைகளில் மிக நல்ல உயிர்ச்சத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கீரை வகைகளை ரொம்ப நேரம் சூடுபடுத்தி வதக்குவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

கூடிய மட்டில் கீரை வகைகளைப் பச்சையாக அல்லது இளஞ்சூட்டில் சிறிதே வேகவைத்து உண்பதே நல்லது என்பதே ... மூத்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது.

+++++++++++++++++++

நேற்று ஒரு சில அன்பு நண்பர்கள் எதிர்பாராத வகையில் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த பல காய், பழம் இன்ன பிற பொருள்களில் ஒன்று பீட்ரூட் கிழங்கு தழையுடன்.

[நன்றி: கலிஃபோர்னியா விரிகுடாத் தமிழ்ச்சங்கத் தலைவர் (Bay Area Tamil Manram) திரு ஆறுமுகம் பேச்சிமுத்து + அமெரிக்க ஹவாயித்தீவில் வாழ்ந்துகொண்டு சங்க இலக்கியச் செறிவை உலகமுழுதும் பரப்பும் தொண்டு செய்யும் திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கும்.]

இந்த இனிய தமிழரைப்பற்றி மேலும் அறிய:

http://www.bayareatamilmanram.org/about-us/committee.html

http://learnsangamtamil.com

+++++++++++++++++++

பீட்ரூட் தழையை அது வாடுமுன் உண்ணவேண்டும். அந்தக் கட்டாயத்தில் ... நான் செய்ததைக் கீழே சொல்கிறேன்.

1. பீட்ரூட் தழையை நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

2. நீண்ட காம்புகளை அரிந்து தனியாக எடுத்து வைக்கவும். வேறுவகைச் சமையலுக்கு உதவும்.

3. காம்பிலிருந்து இலைகளைப் பிரித்து எடுத்து, விரும்பியபடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்; ரொம்பத் தூளாக வேண்டாம்.

4. நறுக்கிய இலைகளை அடி தடிமனான ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தேங்காய்த்துருவல் (1 மேசைக்கரண்டியளவு; 1 table spoon) கலந்து, மிகச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கீரை குழையாமல் வேகவிடவும்.

5. கீரை குழையாமல் வெந்தவுடன் இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கீழே படம் பார்க்க:




குறிப்பு:

1. பச்சையாகவோ சமைத்தோ கீரைகளைப் பயன்படுத்தும்போது உப்பு வேண்டியதில்லை. விரும்பினால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

2. கீரையை வேகவைக்கும்போது குழையவிடாமல் சமைப்பது நல்லது.

3. மேலே சொன்ன முறையில் சமைத்த கீரையைச் சப்பாத்தி/ரொட்டி, சாதம்/சோறு ... இன்ன பிறவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்; தனியாகவும் சுவைக்கலாம்.



Saturday, February 28, 2015

காரட் -- வெள்ளைக்காரட்டும் ஆரஞ்சுநிறக்காரட்டும் 


சாதாரணமாகக் கிடைக்கும் இளஞ்சிவப்பு ஆரஞ்சுநிறக் காரட் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பதிவில் 'வெள்ளைக் காரட்' என்று நான் குறிக்கும் ஒரு காயை அறிமுகப்படுத்துகிறேன்.

இது ஆங்கிலத்தில் 'பார்ஸ்னிப் (parsnip)' என்று குறிக்கப்படும்.

இதன் படம்:





ஓ, அதென்ன பொத்தகம்? அதுவா. அது நான் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கிழித்துக்கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பொத்தகங்கள்; வையாபுரிப்பிள்ளையவர்களின் அருமையான பதிப்பு. என் துயர்தீர்க்கும் மருந்து. என் மேசையில் எப்பவும் இருக்கும். 




சரி, இந்த வெள்ளைக் காரட்டையும் நமக்குப் பழக்கமான மற்ற காரட்டையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். பல வகைகள் உண்டு. ஆனால் இங்கே ஒரு வகைச் செய்முறை.


கீழே காண்பது-போல் பார்செனிப்பைச் சீவிக்கொள்ளவும். தனிக்கோல் போல உள்ளது சீவ முடியாமல் நான் விட்டது. தனியே கடித்துச் சுவைக்கலாம்.





நமக்குத் தெரிந்த சாதாரணக் காரட்டையும் சீவிக்கொள்ளவும்.





மேற்சொன்ன இரண்டு சீவல்களையும் கலந்து, தேவையான அளவுக்கு எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்து ... கொத்தமல்லித்தழையை மேற்போக்காகத் தூவவும்.





[என்னிடம் இருந்தது இத்தாலியக் கொத்துமல்லித்தழை -- பார்செலி!]

இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்துக்குக் கண்ணுக்கு உவந்த சத்துள்ள சுவையான எளிதில் உருவாக்கக் கூடிய உணவு.

[அபாய அறிவிப்பு: ஏற்கனவே இனிமை மிகுந்தவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்.  சாதாரணக் காரட்டை விட, பார்செனிப்பில் இனிப்பு மிகுதி.]