Thursday, July 3, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5


8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5

(தொடர்ச்சி)

தனிக்கட்டுரை வழங்க எனக்கென ஒதுக்கியிருந்த நேரத்தில் யான் ஆங்கிலத்தில் வழங்கிய கட்டுரையின் தலைப்பு Hyperlinked Presentation of Tamil Poems

அதாவது, ஒரு தமிழ்ச் செய்யுளின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளைக் கணினியின் தொடுப்பு முறையால் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று விளக்குவதே இதன் நோக்கம்.

இதற்குக் கைக்கணினி தேவை, வெள்ளித்திரையில் வெளிப்படுத்த உதவும் கருவி தேவை. எனக்கு என்னென்ன கருவிகள் (hardware) தேவை என்று மாநாட்டு அமைப்பாளருக்கு எழுதி அவை கிடைக்குமா என்று கேட்டேன், கிடைக்கும் என்ற பதிலே வந்தது.

இங்கேயிருந்து நண்பர் ஜார்ஜ்-இடமிருந்து ஒரு கைக்கணினியைக் கடன்வாங்கிக் கொண்டு போய், தஞ்சையில் கிடைத்த கருவியுடன் இணைத்து வெள்ளித்திரையில் என் படத்தைக் காட்டினால் உருப்பட்டு வரவில்லை! [திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பு ஒத்துவரவில்லை என்றதுபோல் ஆகிவிட்டது! இந்த நகையைச் சுவைக்க முடியாதவர்கள் என்னைத் திட்டாமல் மேலே படிக்காமல் அமைதியாக ஒதுங்கிவிடவும்!] அவ்வளவு பாடுபட்டு அவ்வளவு தொலைவு சுமந்து கொண்டு சென்ற கணினிக்குப் பயனில்லை. ரொம்ப வருத்தம். 

சரி, என்ன மென்பொருள் (software) பயன்படுத்தினேன், தெரியவேண்டுமா? ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ‘தொடுப்பு அட்டை’ HyperCard (http://en.wikipedia.org/wiki/HyperCard) என்ற மிக அருமையான ஒன்று. அதைப் பயன்படுத்தி, நம்ம சங்க இலக்கியப் பாடல் ஒன்றை எடுத்து அந்தப் பாடலின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு இவற்றைக் கணினிமூலம் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று நிரலமைத்து ('program பண்ணி') ஓர் அருமையான கட்டுரையையும் விளக்கத்தையும் தயாரித்து வைத்திருந்தேன். 

கணினி நிரலின் சிறப்பே குறிப்பிட்ட சின்னங்களைச் சொடுக்கித் தேவையான பக்கத்துக்குப் போவதே. இந்த வித்தையெல்லாம் அங்கே தஞ்சையின் வெள்ளித்திரையில் வெளிறிப்போச்சுங்க. :-(  

கட்டுரை விளக்கத்தின் முதல் பக்கப் படம் இங்கே:மேற்காணும் படத்தில் கீழ்வரிசையில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சிறு படத்தையும்/பொத்தானையும் அழுத்தினால் அந்தந்த இடத்துக்குப் போய்த் தேடிவந்த விளக்கத்தைப் பெறலாம். 


கட்டுரை வழங்கிய மதுரைக்காரி:
(தொடரும்)

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4


(தொடர்ச்சி)

1. பேராளர்கள் (delegates) தங்கிய இடத்திலிருந்து மாநாட்டுக் கட்டுரை வழங்கும் இடத்துக்குப் போக உதவிய வண்டிகள்.

2. யான் தங்கக் கொடுக்கப்பட்ட அருமையான 'சிக்'கென்ற கச்சிதமான வீடு. (அப்போதே அதை விலைக்கு வாங்கியிருக்கணும்! புத்தியும் பணமும் இல்லாமப் போச்சு!)
3. யான் தங்கியிருந்த வீட்டைப் பாதுகாத்து, அவ்வப்போது வந்து எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று  அன்பாகப் பேணியவர்.
(தொடரும்)
Wednesday, July 2, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3
----------------------------------------------

(தொடர்ச்சி)

இரண்டாம் நாள் காலை. உறக்கமில்லாத நிலையில் எழுந்திருந்து பொதுவாழ்வுக்காகத் தயாராகி, தங்கியிருந்த வீட்டிலிருந்து சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு பெரிய கூட்டம். பிறபுல அம்மையார் (மலேசியா? சிங்கப்பூர்?) ஒருவர் “We have to boycott this conference” என்று ஆங்கிலத்திலும் மலேசியத் தமிழிலுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. அப்போது புரிந்துகொள்ள நேரமும் இல்லை. பின்னாளில் தெரிந்தது உண்மையோ இல்லையோ என்று தெரியவில்லை. பிற நாட்டுத் தமிழர் சிலருக்கு ‘வீசா’ கிடைக்காத நிலையாம். 

********************

யான் தங்கியிருந்த இடத்திலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு எங்களைக் கொண்டு செல்ல மிக நல்ல வண்டிகள். 

நல்ல பாதுகாப்பான வரவேற்பு. உள்ளே போனதும் அவரவர் விருப்பப்படி அரங்கங்களில் நுழைந்து செவிக்குணவு பெற்றோம். இடையூறுகள் குறைவு.

மாநாட்டைத் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளியில், நல்ல பாதுகாப்போடு, அமைந்தன.

சில படங்கள் இங்கே:1. மாநாட்டு அரங்குக்குப் போகும் வழி.

2. மாநாட்டு முகப்புப் பந்தல். 

3. மாநாட்டுக் காப்பாளர்.4. முதல்வரின் திறப்புக்காகக் காத்திருக்கும் மக்கள்.
5. முதல்வரின் திறந்துரை. (தொடரும்)


Monday, June 30, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

கலிபோர்னியாவிலிருந்து நம்மூரில் ஓரிடத்துக்கு வந்து சேரக் குறைந்தது 24 மணி நேரம் ஆகும். சரி, ஒரு வழியாகச் சென்னை வந்தாயிற்று. சென்னையிலிருந்து தஞ்சைக்குப் போகும் விமானத்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் அன்பான குரல் ஒன்று அழைத்தது திரும்பிப் பார்த்தால் சிப்மன் (Harold Schiffman). அவருடன் இருந்த Burton Stein அவர்களை அப்போதுதான் நேரில் பார்த்தேன்; அதற்குமுன் எங்கள் எழுத்து மூலம் ஒருவருக்கொருவரைத் தெரியும். பயணக் களைப்பு சற்றே குறையத் தொடங்கியது. 


எங்களுக்காக என்று அமைந்திருந்த தஞ்சைப் பேருந்தில் பயணம். நடுவழியில் வண்டி ஓட முடியவில்லை. முதல்வரின் பயணத்துக்காகப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதாக ஏதோ காரணம். பிற பயணிகளுக்குச் சலிப்பு. பலருக்கும் தமிழில் உரையாடத் தெரியாது. வண்டியோட்டியிடம் கேட்டு நிலவரத்தைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு அமைதி சொன்னேன்! ;-) ஒரு வழியாக வந்த எல்லாரையும் வரவேற்று மாநாட்டுப் பதிவாளராக மாற்றும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். 


எங்கே எந்த ஊரில் இருக்கிறோம் என்ன நேரம் என்றெல்லாம் தெளிவாகத் தெரியாத விமானக்களைப்பு. ஆனாலும், தள்ளுகிள்ளு இல்லாமல் (!!) வரிசையில் நின்று எமக்குத் தரப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோதுதான் மீனா வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரே உவகைக்கலுழ்ச்சி! யான் கொண்டுபோயிருந்த கணினி, கணினி சார்ந்த பொருட்களைப் பார்த்துவிட்டுப் பாதுகாப்புக்காக ஒரு பூட்டை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார்! நட்பென்றால் நட்பு! அதன்பின் பழைய புதிய நண்பர்கள் எல்லாருடனும் பேசி மகிழ்ந்த இடம் சாப்பாட்டுக் கூடமே

எனக்கு விமானப் பயணம் ஒத்துக்கவே ஒத்துக்காது. ஏற்கனவே தூங்காமை (insomnia, sleep apnea) என்ற நிலை. விழித்த நிலையிலும் மூச்சுவிட மறந்திடுவேன்; கண் மூடி உறங்க முயலும் நேரத்தில் மூச்சு விடவா நினைவிருக்கும்! இந்த நிலையில் எப்போது முடியுமோ அப்போது உறங்குவேன். ஆனால் மாநாடு நடந்த நாட்களில் காலை 3~4 மணிக்கேமார்கழித் திங்கள்” ஒலிபெருக்கிகளில் அலறியது. அதோடு, காலைக்கடன்களில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் வீட்டு வாயிற்கதவை யாராவது ஓங்கி ஓங்கித் தட்டி ஏதாவது அழைப்பிதழ் ஒன்றைக் கொடுப்பார்கள். 

முதல் நாளில், சரி சரியென்று சமாளித்து, காலைச் சாப்பாட்டுக்காகக் கூடத்துக்குச் சென்றபோது கணினி போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு புடைவை தடுக்க யான் நடந்து போவதை ஓர் இளைஞர் பார்த்துவிட்டு உதவி செய்தார். மாநாடு முடியும்வரை அவர் செய்த அந்த வகை உதவியை என்னால் மறக்கவே முடியாது. 

தங்குவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடு மிகவும் அருமையானது. ஒவ்வொரு வீட்டையும் தங்கியிருப்பவரையும் பார்த்துக்கொள்ள ஒருவர். இவர் படமும் வரும்.

ஒரு பெரிய குறை கணினிப் பயன்பாடு பரவாத காலம் அது; அதனால் யான் எடுத்துச் சென்ற கருவிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியவில்லை. கைத்தாளிலிருந்து கவிதை படித்த மாதிரி ஆகிவிட்டது என் கட்டுரை வழங்கல். இதன் விளக்கமும் படமும் வரும்.


ஒரு கொதிப்பு. வட்டமேசை போல ஒரு நிகழ்ச்சி. பங்குபெற்றவர் சில தமிழர் + பல தமிழரல்லார். என்னருகில் தமிழரல்லார் ஒருவர் (பெயர் குறிப்பிடத் தயக்கம்). ஒரு பேச்சாளர் தம் உரையில் இடையிடையே ‘சங்க இலக்கியம்’ என்ற குறிப்பை உதிர்த்தார். என் பக்கத்து நாற்காலிக்கார வெள்ளையர் ’Sangam, again!?’ என்று என் காதுபட முணுமுணுத்தார். என் கொதிநிலையை வெளிப்படுத்தப் பொதுமன்றம் ஏற்றதன்று! ஏன்தான் ஒரு தமிழச்சியாய்ப் பிறந்தேனோ, சிறுமை கண்டு பொங்கும் என் கொதிப்பே வாழ்க்கையாகிவிட்டது. கடவுளே. எனக்கும் அமைதி கொடு. 

**********************

சில படங்கள்


உல்ரிக்கெ (?) + ஆஸ்கோ
ஆஸ்கோவுடன் ...


அன்பாக விருந்து பரிமாறியவர்கள் 
சாப்பாட்டுக் கூடத்தில் என்னை ஒட்டிக்கொண்ட சில கல்லூரிப் பெண்கள். பிற பலரின் படமும் இருக்கு. 

பிற பின்னர். 

Sunday, June 29, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1
----------------------------------------------

வணக்கம். 9-ஆம் உலகத் தமிழ் மாநாடு நடக்கப்போவது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி. 

எந்தவொரு பகட்டும் இல்லாமல் அறிவுசார்ந்த மாநாடாக இதுவும் நடக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

1995-இல் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சிறப்புப் பேராளராக அழைக்கப்பட்டிருந்தேன், சென்று இரண்டு அரங்கங்களில் என் பங்கினை வழங்கிப் பெருமிதம் அடைந்தேன்.  

பழைய நண்பர்களின் தொடர்பு மீட்சி, புதிய நண்பர்கள், எனப் பல நாட்கள் ஓடின. 

ஆனால் எல்லாத் தொடர்புமே நாங்கள் தங்கியவிடத்திலும் சாப்பிடும் இடத்திலும் மட்டுமே. மற்றபடி அவரவர் அவரவருக்கு என்று கொடுக்கப்பட்ட தனி வீடுகளில் (!உண்மை) தங்கி, குறிப்பிட்ட சிற்றஞ்சிறு பல்கலைக்கழக அறைகளில் போய் எங்கள் கட்டுரைகளை வழங்கினோம்.  

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பல; இருந்தாலும் ஒன்றிரண்டை மறக்க முடியாது. ஆஸ்கோ பார்ப்பொலாவும் அலெக்சான்டர் துபியான்ஸ்கியும் என்னைத் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்போதுதான் சில ஆண்டுகளுக்குமுன் (1992) வெளியான என் நூலைப்பற்றி பல நல்ல சொற்கள் சொல்லி என்னைப் பாராட்டியது! இன்னும் சில வெள்ளையரும் வந்து பாராட்டினார்கள், ஆனால் அவர்களின் பெயரும் முகமும் மறந்து போச்சு! ஒரு பெண்மணி என்னிடம் வந்து ‘நீங்கள் எழுத்தாளர் சிவசங்கரியா?’ என்றார்கள்! சிரிப்பும் மகிழ்வுமாக நாட்கள் கடந்தன.


மாநாட்டில் எடுத்த படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்துக்கு ஏற்றபடி அமைத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.


1. நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தின் முன்வாசலில். 

2. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயில். 3. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயிலில் என் தோழி மீனாவும் யானும்.

4. சாப்பாட்டுக் கூடத்தில் ...

பிற பின்னர்.

(தொடரும்)

Sunday, March 2, 2014

முந்தாநாள் மழை ..

முந்தாநாள் மழை ..
------------------------
மதுரையில் வளர்ந்த காலத்திலும் சரி, பின்னாளில் வெளிநாட்டில் பணியாற்றிய காலத்திலும் சரி, மழைக்காலத்தையும் பனிக்காலத்தையும் இன்றுபோல் அன்று சுவைத்தேன் என்று சொல்ல முடியாது. அதுக்குப் பெரிய காரணம் பெண்களாகிய எங்களுக்கு என்று விதிக்கப்பட்டிருந்த ஆடை தந்த சங்கடம். வானிலிருந்து விழும் மழைநீர், தெருவில் ஓடும் தண்ணீர், சகதி, பெருங்காற்று இவற்றையெல்லாம் தயக்கமில்லாமல் எதிர்கொண்டு நடக்க முடியாத அளவில் பாவாடையும் புடைவையும் அணிந்த காலம். பிலடெல்ஃபியாவிலும் (Philadelphia) ஆன் ஆர்பரிலும் (Ann Arbor) மழையிலும் பனிப்பாதையிலும் நடக்கையில் தடுக்கி விழுந்து தோளிலும் காலிலும் அடிபட்ட நாட்கள் பல. இதையெல்லாம் தனிக் கதையாகச் சொல்லவேண்டும். 

அது கிடக்கட்டும். இப்ப என்ன சொல்ல வாரேன்? உங்க ஊர்லெ இப்போ மழை இல்லையா? எங்க ஊர்லெ சில நாட்களாகச் சிலுசிலு-என்று மழை, பெருத்த மழையில்லை, ஆனாலும் எங்களுக்கு ரொம்பவும் தேவையான மழை. இன்னும் தேவையான மழை. நாங்க இருக்கிறது பாலைவனக் கலிஃபோர்னியா. 

ஒரு மழைக்காலக் குறுந்தொகைப் பாட்டு (#270) அடிக்கடி நினைவுக்கு வரும். அதை இப்போது எங்க ஊர் மழைக்காலத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

“தாழ்-இருள் துமிய மின்னி-த் தண்ணென 
[எங்கும் கவிந்த இருட்டைப் பிளந்து, குளிர்ச்சியாக … ] 
வீழ்-உறை இனிய சிதறி, ஊழின்
[கீழே விழுகிற துளிகள் எங்கும் சிதறி, முறை முறையாக ]
கடிப்பு-இகு முரசின் முழங்கி, இடித்து இடித்து-ப்
[அறைகோல் தழுவும்/சறுக்கும் முரசைப் போல முழங்கி, இடித்து இடித்து ]
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே
[பெய்து வாழ்க, பெரிய வானமே! யானும் ]
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
[மேற்கொண்ட செயலை முடித்த பெருமிதம் கொண்ட நேரிய உள்ளத்தோடு]
இவளின் மேவினம் ஆகி-க் குவள-க்
[இவளை அடைந்தேன்; குவளையின்]
குறுந்தாள் நாள்மலர் நாறும்
[குறுகிய தண்டில் அன்று மலர்ந்த மலரைச் சூடிய நறுமணம் பொருந்திய]
நறுமென் கூந்தல் மெல்லணையேம்-ஏ”
[மிக மென்மையான கூந்தல் எனக்கு மென்மையான அணை]

ஏதோ ஒரு கடமைக்காக வெளியூர் போயிருந்த தலைவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான். போன இடத்தில் என்னென்ன கடுமைகளோ அதெல்லாவற்றையும் கடந்து வெற்றியுடன் வீடு திரும்பியிருக்கிறான். மேற்கொண்ட கடமையைச் செய்து முடித்த பெருமிதம். அந்த நேரத்தில் மழை பெய்கிறது. மழையை வாழ்த்துகிறான்! 

‘நான் என் கடமையை முடித்து வீடு திரும்பிவிட்டேன்; இனிமேல் கார் வானம் இடித்து இடித்து மழை பெய்யட்டும். மேற்கொண்ட கடமையை முடித்த நேர்மையான உள்ளத்தோடு இவளிடம் சேர்ந்திருக்கிறேன். வானமே, இப்போது மிக நன்றாக இடித்து இடித்து மழையைப் பெய்க! … ‘ 

இன்றைய சொற்களில் சொல்லப்போனால் … ‘என் கடமையை முடித்துவிட்டேன், இப்போது இடிமழை பெய்தாலும் எனக்குக் கவலையில்லை. மழை பொழியும் சுகத்தில் என் துணைவியின் நெருக்கத்தில் எனக்குச் சுகம்.’

என்ன அழகான பாடல்! 

கார்காலத்தில் பகைவரை வெல்லுதல் கடிது என்பதை இலக்கியத்திலிருந்து அறிவோம், இல்லையா? இராமன் + சுக்கிரீவன் படைகள் சீதையைச் சிறை மீட்பதற்காகக் கார்காலம் முடியக் காத்திருந்ததாகப் படித்த நினைவு. 

இந்த 21-ஆம் நூற்றாண்டுக் கார்காலத்தில், அன்பர்களும் நண்பர்களும் ஒரு கட்டிடத்துக்குள் கூடி, பேசி, வேண்டிய உணவு வகைகளைத் தின்பதுக்கு என்றே ஏகப்பட்ட விளம்பரங்கள் இருக்கு! எல்லாமே நெருக்கம் (cozy) என்ற வகையில் அடங்கிவிடும்!  

ஆனாலும் நம்ம சங்கத்தலைவன் சொன்னதில் உள்ள நயம் எல்லாருக்கும் தெளிவாகப் புலப்படுமா? தனக்கும் தன் உறவுக்கும் இடையே உள்ள காதலைப் பொதுவிடத்தில் சொல்ல இந்த வகை நயநாகரிகத்தைக் கற்றுக்கொள்வது நல்லது, இல்லையா?

நிற்க. 

எங்கூர்லெ மழை பெய்வது அரிது. சில நாள் முன்னர் பெய்த மழையை வீட்டுக்குள்ளேயிருந்து ‘பிடிக்க’ முயன்றேன். 

விரும்பினால் பார்க்கவும்: http://www.youtube.com/watch?v=cRCcYdzVwDc&list=HL1393775547

நன்றி,
ராஜம்

Monday, February 10, 2014

குளிர்கால வானம் ...

இயற்கையின் எல்லாக் காலமும் இனியதே. இந்தக் குளிர்காலத் தொடக்கத்தில் என் வீட்டுப் புறத்தில் யான் கண்டு சுவைத்த சில காட்சிகள் இங்கே.


இயற்கைக்கு நன்றி!