8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5
(தொடர்ச்சி)
தனிக்கட்டுரை வழங்க எனக்கென ஒதுக்கியிருந்த நேரத்தில் யான் ஆங்கிலத்தில் வழங்கிய கட்டுரையின் தலைப்பு Hyperlinked Presentation of Tamil Poems.
அதாவது, ஒரு தமிழ்ச் செய்யுளின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளைக் கணினியின் தொடுப்பு முறையால் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று விளக்குவதே இதன் நோக்கம்.
இதற்குக் கைக்கணினி தேவை, வெள்ளித்திரையில் வெளிப்படுத்த உதவும் கருவி தேவை. எனக்கு என்னென்ன கருவிகள் (hardware) தேவை என்று மாநாட்டு அமைப்பாளருக்கு எழுதி அவை கிடைக்குமா என்று கேட்டேன், கிடைக்கும் என்ற பதிலே வந்தது.
இங்கேயிருந்து நண்பர் ஜார்ஜ்-இடமிருந்து ஒரு கைக்கணினியைக் கடன்வாங்கிக் கொண்டு போய், தஞ்சையில் கிடைத்த கருவியுடன் இணைத்து வெள்ளித்திரையில் என் படத்தைக் காட்டினால் … உருப்பட்டு வரவில்லை! [திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பு ஒத்துவரவில்லை என்றதுபோல் ஆகிவிட்டது! இந்த நகையைச் சுவைக்க முடியாதவர்கள் என்னைத் திட்டாமல் மேலே படிக்காமல் அமைதியாக ஒதுங்கிவிடவும்!] அவ்வளவு பாடுபட்டு அவ்வளவு தொலைவு சுமந்து கொண்டு சென்ற கணினிக்குப் பயனில்லை. ரொம்ப வருத்தம்.
சரி, என்ன மென்பொருள் (software) பயன்படுத்தினேன், தெரியவேண்டுமா? ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ‘தொடுப்பு அட்டை’ HyperCard (http://en.wikipedia.org/wiki/HyperCard) என்ற மிக அருமையான ஒன்று. அதைப் பயன்படுத்தி, நம்ம சங்க இலக்கியப் பாடல் ஒன்றை எடுத்து அந்தப் பாடலின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு இவற்றைக் கணினிமூலம் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று நிரலமைத்து ('program பண்ணி') ஓர் அருமையான கட்டுரையையும் விளக்கத்தையும் தயாரித்து வைத்திருந்தேன்.
கணினி நிரலின் சிறப்பே குறிப்பிட்ட சின்னங்களைச் சொடுக்கித் தேவையான பக்கத்துக்குப் போவதே. இந்த வித்தையெல்லாம் அங்கே தஞ்சையின் வெள்ளித்திரையில் வெளிறிப்போச்சுங்க. :-(
கட்டுரை விளக்கத்தின் முதல் பக்கப் படம் இங்கே:
மேற்காணும் படத்தில் கீழ்வரிசையில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சிறு படத்தையும்/பொத்தானையும் அழுத்தினால் அந்தந்த இடத்துக்குப் போய்த் தேடிவந்த விளக்கத்தைப் பெறலாம்.
கட்டுரை வழங்கிய மதுரைக்காரி:
(தொடரும்)
No comments:
Post a Comment