Friday, December 21, 2012

பச்சை ஆலிவ் (raw green olive)

பச்சை (raw and green) ஆலிவ் -- என்ன செய்யலாம்?

பச்சை ஆலிவ் தெரியுமா? இதை ஆலிவ் காய் என்றுகூடச் சொல்லலாம்.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள: http://en.wikipedia.org/wiki/Olive

ஏன் இதைப் பயன்படுத்தவேண்டும்? அட, ஆலிவ் எண்ணெயின் நன்மை தெரியுமே, அது ஆலிவ் காயிலிருந்துதானே? அந்தக் காயையும் பயன்படுத்திப் பார்க்கலாமே. எல்லாம் ஒரு மாற்றத்துக்குத்தான்.

 
பச்சை ஆலிவ் (raw green olives), கழுவி, உப்பு நீரில் ஊறுகின்றன. ஒரு நாள் ஊறவிடவும்.



ஒரு நாள் ஊறிய காய்களை எடுத்துத் தண்ணீரில் கழுவி, ஒரு திடமான கரண்டியின் பின் பகுதியாலோ சின்னஞ் சிறிய கல் உலக்கையாலோ (pestle) தட்டி, கொட்டைகளைப் பிரித்து எடுத்து, காயை வேகவைக்கவும். கொட்டைகள் பேரீச்சம்பழக் கொட்டைகள் போல இருக்கும். காய் சீக்கிரம் வெந்துவிடும்.

 
நறுக் நறுக் என்று கடிபதமாக இந்தக் காய்கள் வெந்ததும், அல்லது தேவையான அளவுக்குக் குழைந்ததும், தனியே எடுத்து வைக்கவும்.

கொஞ்சம் தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் (காரம் தாங்குதலுக்கு ஏற்ப) ... எல்லாவற்றையும் சிறிதளவு ஆலிவ் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும். (உப்புச் சேர்க்கத் தேவையில்லை. வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். ஆலிவ் காயின் கசப்பு இந்த உப்புச் சுவையில் மறைந்துவிடாமல் இருந்தால் நல்லது!!! )


பிறகு, வெந்த ஆலிவ் காய்களைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

 


ஆலிவ் காய்களின் கசப்பைப் பற்றிய தயக்கம் இருந்தால் கொஞ்சம் மாங்காய் அல்லது மாம்பழத் துண்டுகளைக் கலந்துகொள்ளலாம்.



எல்லாவற்றையும் சிறிது வதக்கிக் கலந்தால் ... சுவையான ஆலிவ் கறி தயார்.


  
விரும்பினால், கொத்துமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

இது ஒருவகையான புதுச்சுவை தரும். சாதம் (குறிப்பாகத் தயிர் சாதம்), ரொட்டி, சப்பாத்தி போன்றவைகளுடன் சேர்த்துச் சாப்பிட அருமையான உணவு.




1 comment: