Monday, May 13, 2013

"அம்மா நாள்" யாருக்கு?


முன் குறிப்பு
------------------
பின்வரும் பதிவு உண்மையும் கற்பனையும் கலந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடையில் ஈரக்கசிவு ரமாவை விடியலுக்கு முன்பே உசுப்பிவிட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்; புடைவையைச் சுருட்டிக் காலிடுக்கில் வைத்துப் பிடித்துக்கொண்டு குளிப்பறைக்கு ஓடினாள்; இப்பொ வீட்டுக்குள் வரக்கூடாது; பின்புறத் தாழ்வாரத்திலேயே ராக்கி எப்போது வருவாளோ என்று காத்திருந்தாள். 

முன்வாசலில் சாணி தெளித்துப் பெருக்க வேண்டி, விளக்குமாறு எடுக்கத் தாழ்வாரத்துக்கு வந்த ராக்கிக்கு ரமாவைப் பார்த்தவுடன் திகில்; பரிவோடு கேட்டாள்: “இந்த வாட்டியும் உக்காந்திட்டியா, கண்ணு?” 

ரமாவுக்கும் திகில். சொன்னாள்: “என் தலையெழுத்து ராக்கி. உள்ளெ போயி அம்மாகிட்டெ சொல்லு. காப்பி போட நான் வரலெ-னு சடைவா இருப்பாங்க. மொதல்லெ எனக்குத் துணி கொண்டா. குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொண்டா.” 

இன்றோடு அடுத்த ரெண்டு நாளும் ரமாவுக்கு ராக்கிதான் எல்லாமே. ராக்கி கொடுப்பதுதான் சோறு, தண்ணீர் எல்லாம். வீட்டு மனிதர் ஒருத்தரும், அவளை ஏறி மிதிக்கும் கணவனும்தான், அவள் இருக்கிறாளா செத்தாளா? என்று அலட்டிக்கொள்வதில்லை. அது ரமாவுக்குப் பழகிப்போனதுதான். 'படுக்கை கறைப்பட்டிருந்தால் எம்மாம் பெரிய கூச்சல் உண்டாயிருக்கும், நல்ல வேளை அது நடக்கவில்லை' என்ற நிம்மதியே போதும் அவளுக்கு. 

ரமாவுக்கு மாதவிலக்கு என்றால் அவளுடைய மாமியாருக்கு ஏமாற்றமும் எரிச்சலும்; அதெல்லாம் மாமியாரின் செல்லப்பிள்ளை வழியாக அவனுடைய எரிச்சலுடன் கலந்து அவள்மேல் வெடிக்கும்.

ரமாவின் கணவன் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் ஒரு தடையும் இல்லாமல் உவந்து அனுபவித்தாலும், உறவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகச் சொல்லித் திரியும் ஒரு திமிர் பிடித்த தன்னிரக்க வேந்தன்; தற்காதலன். 'அட, சனியனே, ஏன் கலியாணம் கட்டிக்கினே, மூதி?' என்று அவனைக் கேட்பார் இல்லை. 'என்ன சார், போட்ட முதலை எடுக்க வேணாம்?' என்று வாயாடும் நண்பர்களின் சூழலில் தன் விந்து வங்கியின் முதலுக்கு வட்டியில்லை என்பது அவனுக்குப் பெரிய எரிச்சல்!

முதல் இரண்டு மருமகளும் திருமணம் ஆன 10-ஆம் மாதத்தில் "டாண்" "டாண்" என்று பேரக் குழந்தை பெற்றுக் கொடுத்தார்கள். அடுத்தடுத்து, வீடு முழுவதும் பேரப்பிஞ்சுகள். இந்த மூணாவது மருமகள் ஒரு கேடு. வேலை இல்லை, சம்பாத்தியம் இல்லை, செல்லமகனுக்கு வாரிசு கொடுக்கவில்லை. சோத்துக்குத் தண்டம். மாமியாரின் அலுப்பிலும் நியாயம் இருக்கில்லெ!

கண்ணகிக்குப் போல ரமாவுக்கு ... 'யாண்டு பல கழிந்தன.' ராக்கி மட்டும் விடாமல் தன் குடிசையில் தான் வளர்க்கும் பசு, எருமைகளின் பாலை எடுத்துக் கொண்டுபோய் ஊர் எல்லையில் இருக்கும் பாம்புப் புற்றில் ஊற்றி இந்த ரமாவுக்காக வேண்டிக்கொண்டு வருவாள். இது அவளுக்கும் ரமாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

திடீரென்று நாடு முழுக்க, ஊரிலும் வீட்டிலும், அயல்நாட்டுப் பீடை. ஏதோ "அன்னையர் நாள்" என்று சொன்னார்கள். அந்த நாளில் ரமாவின் நிலை தில்லையில் தீக்குளித்த நந்தனின் நிலையை நெருங்கும்.

இந்த ஆண்டும் அதே நாள். ரமாவின் தன்னிரக்க வேந்தன் ஊர் சுற்றல். மாமியாருக்கும் ஓரகத்திகளுக்கும் அவரவரின் கணவர் பிள்ளைகளுக்கும் ஒரே அலட்டல். கண்ட கண்ட நிறங்களில் ஏதோ கேக்காம், பேக்காம், சேம்ப்பேனாம்.

ராக்கியின் கொள்ளுப்பேரன் புழைக்கடையில் வந்து ரமாவைக் கூப்பிட்டு ராக்கி கீழே விழுந்ததைச் சொல்லிப் பதறினான். ரமா அவன் பின்னால் ஓடி நடந்தாள்.

நாலு தெருவுக்கு அப்புறம் ஊர் எல்லை. 3-ஆம் தெருவில் பின்னாலிருந்து ஒரு குரல்: "அம்மா, அம்மா"

ரமா திரும்பிப்பார்த்தாள். ஒரு பெண் இவளைப் பார்த்து ஓடி வந்தாள். மூச்சிறைக்க ரமா நின்றாள். ஓடி வந்த பெண்ணின் குரல் பழகிய குரல்போல இருந்தது. ஆனால் அவள் யாரென்று தெரியவில்லை. குழப்பம்.

"அம்மா, என் பெயர் காவேரி. நீங்க கோட்டையூர்-லெ எனக்கு  ஆறாப்பு டீச்சர். என்னெ 'நீ கவியா காவியா'-னு கேலி செய்வீங்க, நெனெவு இருக்காம்மா?"

இருவருக்கும் ஒரே பூரிப்பு.

"ஆமாங்கண்ணு, நீ இங்கெ எப்பிடி வந்தே? என்னெ எப்பிடிக் கண்டுபிடிச்செ?"

"அம்மா, ஒங்க புடைவையும் நடையின் அலாதியும் இவுங்க அவுங்கதான்-னு சொல்லிச்சு'ம்மா. ரொம்ப நாளா ஒங்களெ இந்தப் பக்கம் பாத்திட்டிருக்கேன்'மா. பக்கத்துலெ வந்து கேக்கப் பயம். இன்னிக்கி எதோ துணிச்சலாக் கேட்டுட்டேன்'மா. கலியாணம் கட்டி இந்தூருக்கு வந்தேன்'மா. மருமகளுக்குப் பிள்ளை இல்லெ-னு நம்மூர்ப் பாம்புப் புத்துலெ பால் ஊத்தறேன்'மா"

"வா, வா, நானும் அங்கெதான் போறேன்."

இரண்டுபேரும் ராக்கியின் கொள்ளுப்பேரனும் பாம்புப் புத்து நோக்கி ஓடினார்கள்.

"அம்மா, தாயே" என்று ஒரு விளி. எப்போதும் வரும் ராப்பிச்சைக்காரன் இப்போது இங்கே பசியால் மயங்கித் தள்ளாடுகிறான். "காவேரி, அந்தப் பாலை அவனுக்குக் கொடு" என்று சொல்லிக்கொண்டே ரமா பாம்புப்புத்துக்கு  ஓடினாள். காவேரியும் ராப்பிச்சைக்காரனுக்குப் பாலைக் கொடுத்துவிட்டு ரமாவின் பின்னே ஓடினாள்.

ராக்கியின் கையிலிருந்து உருண்ட பால் குவளை பாம்புப் புத்தின் அடியில் தடுக்கிக் கிடக்கிறது. புத்தைச் சுற்றிலும் எருமைப்பால்.

"அம்மாடீ, நாகம்மாவுக்குப் பால் ஊத்த மறந்திடாதேம்மா" என்று சொல்லிக்கொண்டே ரமாவின் மடியில் தலையைச் சாய்த்தாள் ராக்கி.

ராக்கியின் குவளையை எடுத்துகொண்ட காவேரி ரமாவைப் பார்த்தாள். "சரி" என்று சொல்வதுபோல ரமாவும் தலையை அசைத்தாள். 

2 comments:

  1. மிகவும் நெகிழச் செய்தது! எத்தனையோ இராக்கிகளும் இரமாக்களும் இருக்கின்றார்கள் என்பது உள்ளத்தைப் பிசைகின்றது. நற்குமுகக் கல்வி இன்னும் சென்றடையவில்லை; இராக்கிக்கு இருக்கும் இயல்பான நல்லன்பு உள்ளம் பலருக்கும் வாய்க்கவில்லை. இரமாவுக்கு இராக்கியாவது கிடைத்தாள். அப்படி இல்லாமலும் அல்லலுறும் பெண்கள் உள்ளனர்!

    ReplyDelete