Monday, May 20, 2013

இருக்கும்போதே வாழவை ...

சிலையமைப்பது, மணிமண்டபம் அமைப்பது போன்ற வழக்கங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. நான் வித்தியாசமானவள். இந்த வழக்கங்கள் என்னைக் கவருவதில்லை. 

யாருக்குச் சிலை வைக்கிறார்களோ அவர் உயிரோடு இருந்த காலத்தில், மக்கள் அவரை எந்த அளவு மதித்திருப்பார்கள், அவருக்கு எந்த அளவு உதவியிருப்பார்கள் என்று தெளிவாகத் தெரிவதில்லை. சிலர் அன்றும் இன்றும் இருக்கலாம் -- அதாவது அந்த ஒருத்தர் இருந்த காலத்தில் இருந்தவர்களே இன்றும் இருக்கலாம். 

இதையும் இதுபோன்ற கருத்தையும் உள்ளடக்கி ஒரு பாட்டு எழுதினேன் 1992-இல் ஒரு மாநாட்டு மலருக்காகக் கேட்டார்கள் என்று. அது இங்கே: 

************************ 

இருக்கும்போதே வாழவை
-------------------------------------- 

கண்ணகிபோல் நீயெனக்குக் கல்லெடுக்காதே
காவிரிக்குச் சோழனெனக் கரையும் கட்டாதே
காரிகையின் கீரந்தையாய்ச் சொல்வரையாதே
காயசண்டிகை காதலனாய்க் கண்ணிழக்காதே

திலகவதித் தத்தனைப்போல் தத்தளிக்காதே
தேவந்திபின் தீர்த்தங்களில் தாழவைக்காதே
மாதவியாய் மனங்கலங்கி மாயச்செய்யாதே
மணிமேகலைக் குமரிபோலக் குமையவிடாதே

பொறுமை கண்டாள் சீதையான வைதேகி
சிறுமை கண்டாள் த்ரௌபதியாம் பாஞ்சாலி
வறுமை கண்டாள் விதர்ப்பராணி தமயந்தி
வெறுமை கண்டாள் அகலிகையாம் முனிமனைவி 

தமிழ்மகனே தனிச்சிந்தை உனக்களிக்க
அமிழ்தினிய உலகொன்று பெண்காண
மனங்கொள்ளும் கதையில்லை வளர்நாட்டில்
தனியொருவழி படைப்பாய்நீ வாழ்நாட்டில் 

******************************************** 

மேலே காணும் பாட்டைப் புறந்தள்ளிவிட்டார்கள், 'சோகப்பாட்டு' என்று! ;-) வேறு 'மகிழ்ச்சியான' பாட்டு ஒன்று எழுதித்தரக் கேட்டார்கள். சரியென்று இன்னொரு பாட்டு எழுதினேன். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு வெளியிட்டார்கள்! அது இதோ:


இங்கே வாழும் தமிழருக்கு
--------------------------------------- 
(இங்கே சீர் பிரித்துத் தந்திருக்கிறேன். படிக்கும்போது நல்லோசை கிட்டும். 1992-இல் நான் இதைப் படித்தபோது கூட்டத்தில் சிலர் மனம் நெகிழ்ந்து கண்கசிந்தனர்!) 

***************
கங்கைக் கரையறியேன் காவிரி கண்டதுண்டு
பொங்கிவரு பொருநைஎன் தாய்மடியும் தந்தைதோளும்
தங்குபுகழ் வையைவழித் தமிழ்தொடர்ந்து
இங்கோடும் Schuykill-மேல் இடம்கண்டேன்
மங்காத Potomac தலைநகரில் சீர்தந்தாள்

தமிழெனக்குத் தாய்ப்பாலின் தனித்தூய்மை
கனிபோலச் சுவைகாட்டிக் களிப்பூட்டும் தேன்இனிமை 
பனிபோலும் படர்மாற்றி உரம்போடும் பெருவலிமை
குனிவில்லாத் தலைதந்து நிறைகாக்கும்  நல்துணைமை

தொகைபாட்டு கீழ்க்கணக்கு காப்பியங்கள்
வகைவகையாய் ப்ரபந்தங்கள் இலக்கணங்கள்
மிகையாகாத் திருமுறைகள் தனிப்பாடல் எனத் 
தகையாகத் தமிழ்சொன்னார் நம்முன்னோர் 

சாத்தன்வழிப் பௌத்தமும் தேவர்வழிச் சமணமும்
மாமுனிவழிக் கிறித்துவமும் உமறுவழி இஸ்லாமும்
தேனிகர்தமிழ் வடிவாகச் சிவமாலின் நெறியோடு
மேலுலக வாழ்வினையும் தமிழ்வழியே கண்டனவே 

ஆரியம் வந்தது வாழும்தமிழின் சீரும்குலைந்தது
ஆட்சித் தொல்லை ஆயிரமாயிரம் கேடுவிளைத்தது
ஈங்கிதன் மீட்சி எங்கே காண்போம் என்றுஉளைந்து
ஏங்கிய நல்லோர் தத்தம் வழியில் சென்றாரே

ஆரியத்தின் ஆதிக்கம் கெடுக்கும் என்று 
சீரியவான் தனித்தமிழைக் காக்க என்று
ஓரியக்கம் உருவாக்கிப் பெயரும் மாற்றி 
நேரியதோர் வழிகண்டார் மறைமலை அடிகள்

நாவலர்பாரதி நாமகள்பாரதி விடுதலை வேண்டிய திரு,வி.க. 
ஏவலரின்றி நாவாய் ஓட்டிய தூத்துக்குடியின் வ.உ.சி.
கேவலமிங்கு அந்நியராட்சி ஒழிக்கவேண்டித் தமிழ்நாட்டுப்
பாவலாராயும் காவலராயும் பாவைத்தமிழைக் காத்தாரே 

நன்மையுடன் வல்லமையும் வேண்டும் என்று
மென்மையாக எடுத்துரைத்தார் எளிய மு.வ.
இன்சொல்லால் எழுத்தாண்டார் சேதுப் பிள்ளை
தன்மனதில் டி.கே.சி கம்பன் கண்டார்

தமிழுக்கெனச் சிறைசென்றார் சில புலவர்
தமிழுக்கென உயிர்தந்தார் பல மறவர்
தமிழைத்தம் புணையாகக் கொண்டார் இன்- 
தமிழைப் பிறநாட்டில் உடன்பயின்றார் 

தொட்டடுத்த இலங்கைமகன் தனிநாயகம்
பாட்டுத்தமிழ் விபுலர் யாழ்ப்பாண நாவலர்
எட்டிநின்ற மலேயாவில் ராசாக்கண்ணர்
தட்டாத் தமிழ்ச் சிங்கப்பூர்த் திண்ணப்பர்

ரஷ்யா தந்த Andronov
செக்கோ கண்ட Kamil Zvelebil
லண்டன் தந்த John Marr
ஜெரூசலத்தில் David Shulman
கலிஃபோர்னியாவில் George Hart
சியாட்டலில் Hal Schiffman
சிக்காகோவில் Norman 

என்றிவரெல்லாம் நம்மொழி பரப்ப
இந்திராவும் கௌசல்யாவும்
இராமனும் நானும் நம்தமிழ் காக்க
எம்உயிர்தந்து பணிபுரிகின்றோம்

எங்கள் பணிக்கூடம் தமிழின் நிலைக்கூடம்
அங்கே தமிழ்பயில்வோர் பின்னே தமிழ்புரப்போர்
இங்கே தமிழ்வாழ நீங்கள் உரமிடுங்கள்
உங்கள் வள்ளண்மை உங்கள் குடிப்பெருமை

கலைத்தந்தை கருமுத்தர் விலையில்லா அழகப்பர்
கலைநாட்டிய அண்ணாமலை இசைதந்த தண்டபாணி
கண்மணிபோல் தமிழ்காத்த இவர்பாதை நீங்கள் கண்டீர்
வண்மைபெறச் செய்வீர் வாழவைப்பீர் தமிழை

************************ 

குறிப்பு: Schuykill பிலடெல்ஃபியாவில் ஓடும் ஆறு. Potomac அமெரிக்கத் தலைநகரில் ஓடும் ஆறு. 


நீங்களே ஆழமாக நினைத்துப் பார்க்கவும். மக்களுக்கு எதில் நாட்டம் என்று!

ஒன்று மட்டும் திட்டவட்டமாக இப்போதே சொல்லிவிடுகிறேன், நல்லாக் கேட்டுக்கோங்க! நான் போன பிறகு, அதாங்க நான் செத்தப்புறம், என்னை யாரும் 'பெரிய தமிழறிஞர், அது இது'-னு எல்லாம் புகழக்கூடாது, எனக்குச் சிலை வைக்கக் கூடாது, சரியா?! நன்றி'ங்க! :-)


7 comments:

  1. படிக்கும் வகையில் எழுத்துருவைச் சீருரு வடிவில் தர அன்புடன் வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
    Replies
    1. எழுத்துருவை மாற்றிவிட்டேன். படித்துத் தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்கவும். மிக்க நன்றி!

      Delete
  2. அம்மையீர்,
    கவிதையைப் படிக்க இயலவில்லை. ஏதோ வேறோர் எழுத்துருவில் இருக்கவேண்டும். அது என்ன? அல்லது, இதனை UNICODE-க்கு மாற்றித்தர இயலுமா? - NHM Converter கொண்டு.
    நன்றி,
    ப.பாண்டியராஜா

    ReplyDelete
    Replies
    1. எழுத்துருவை மாற்றிவிட்டேன். படித்துத் தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்கவும். மிக்க நன்றி!

      Delete
  3. முனைவர்கள் திருவள்ளுவன் இலக்குவனாருக்கும் பாண்டியராஜா அவர்களுக்கும் என் நன்றி! கூடிய விரைவில் தமிழ் எழுத்தை மாற்றியமைக்கிறேன்.

    ReplyDelete
  4. "ஆரியத்தின் ஆதிக்கம் கெடுக்கும் என்று சீரியவான் தனித்தமிழைக் காக்க என்று ஓரியக்கம் உருவாக்கிப் பெயரும் மாற்றி நேரியதோர் வழிகண்டார் மறைமலை அடிகள்"

    மறைமலை அடிகள் என அறியப்பட்ட ஸ்வாமி வேதாசலம் பிற்போக்கு எழுத்தாளர். அவர் தமிழ் நாகரீகமே வேளாளர் நாகரீகம் என சொல்லி, ஜாதீயத்தை தமிழ் என்றா போர்வையில் முன்வைத்தார் . 5 - 10 % மக்களிடந்தான் தமிழ் வருவது என்றால், மற்றைய தமிழர்கள் என்ன ஆனார்கள், முஸ்லிம்கள் கிருஸ்துவர் என்ன ஆனார்கள் , அவர்கள் தமிழர்கள் இல்லையா, அவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையா ? வேதாசலம் எதிர்காலத்தைப் பற்றியும், எதிர்கால தேவைகளைப் பற்றியும் கவனம் வைக்காதவர், அதனால் அவருக்கு தோன்றிய "பண்டைய தமிழர் நாகரீகம்" அதாவது அவர் சொன்ன "வேளாளர் நாகரீகம்" எப்படி தமிழை கையாண்டது என கற்பிதம் செய்து கொண்டாரோ, அதயே இலட்சியமாக, ஆதர்சத் தமிழாக வைத்தார். அதன்படி சமஸ்கிருத மூல வார்த்தைகளையும், பிற மொழி மூல வார்த்தைகளை யும் அகற்ற வேண்டும். எந்த வார்த்தைக்கு எது மூலம் என யாருக்கு தெரியும், அட்ர்ஹனால் தனித்தமிழ் தாந்தோன்றித்தனமாக போகி, தமிழின் தரத்தை கீழே கொன்டு வந்தது. மேல் வகை இலக்கியத்தில் தனித்தமிழ் ஒன்றும் சாதிக்க வில்லை, விஞ்ஞானம், சமூகவியல், மற்றும் எந்த புதிய துறையிலும் ஒன்றும் சாதிக்கவில்லை.

    வேதாசலம் படி யார் சிறந்த ஃபைலாலஜிஸ்ட் தெரியுமா? ஞா.தேவநேசன் என்ற பாவாணர். வேலிக்கு ஓணான் சாட்சி. அவர்கள் தாக்கத்தினால் கடந்த 60 வருடங்களாக தமிழ் பேச்சு, படிப்பு, உழைப்பு, சிந்தனை போன்ற ஒவ்வொரு வாழ்க்கை பகுதியிலும் தன் வீரியத்தை இழந்து நிற்கிரது. "ஆரியத்தில்" இருந்து சுதந்திரம் என ஆங்கிலத்திற்க்கு தமிழ் கொத்தடிமையாக போய் விட்டது.


    வகொவி

    ReplyDelete
  5. பாத்தீங்களா, இனிமேல் காலேஜ் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் பரீக்ஷைகளை எழுதணும். அரசு ஆணை, இது எல்லா வைஸ்-சான்சலர்களையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு.

    http://www.thehindu.com/news/cities/chennai/tamil-out-for-college-assignments-tests/article4747213.ece#comments.

    மறைமலை அடிகள் + தேவநேசன் இயக்கம் இப்படித்தான் முடிவடைகிறது.

    தனித்தமிழ் துதியும், தின விவகாரங்களில் தமிழின் பங்கு குறைவதும் ஒரே காசின் இரு பக்கங்கள்.

    வகொவி

    ReplyDelete