Thursday, August 16, 2012

பாதையோரப் பரிசு ...
----------------------------------
என் வீட்டருகில் நடந்து போகும்போது பல அமைதியான இடங்கள் குறுக்கிடும். அங்கே அழகான பூக்களும் குறுக்கிடும். உண்மையில் அவற்றைத் தள்ளிவிட்டுத்தான் என் நடையுதவியைக் கொண்டுபோக முடியும்.  

அப்படி நடந்துபோன சில நாட்களில் நான் சுவைத்த காட்சிகள் இங்கே.

1. இது மெக்னோலியா (magnolia) மரத்திலிருந்து கீழே விழுந்த இலை. நிறத்தையும் பளபளப்பையும் பாருங்கள். இறந்தபின்னும் புகழ்! :-)





2. மெக்னோலியா மொட்டு.



3. இந்தப் பூவின் பெயர் லில்லி ஆஃப் த நைல் (lilly of the Nile). மிக அழகு ஊதா நிறம். நத்தைகளுக்குப் பிடித்த செடி!




4. இந்தப் பூவின் பெயர் தெரியவில்லை. ஆனால் பல நிறக் கலவை என்னைக் கவர்ந்தது.


5. இந்தப் பூவின் பெயரும் தெரியவில்லை. காலையில் எடுத்த படம் இரவில் எடுத்ததுபோன்ற தோற்றம்.



6. ஐரிஸ் போல, ஆனால் திட்டமாகத் தெரியவில்லை. ஆர்க்கிட் போல, ஆனால் ஆர்க்கிட் இல்லை.




7. மதுரை உதயசங்கருக்குப் போட்டியாக ... (ஃபோட்டோஷாப் வேலை இல்லவேயில்லையாக்கும்!)


நம்மைச் சுற்றி இயற்கை அழகு நிறைந்திருக்கிறது. கண்டும் கேட்டும் சுவைக்காவிட்டால் நமக்குத்தான் இழப்பு.  இயற்கையைச் சுவைப்போம். நன்றி சொல்வோம்.

Sunday, March 18, 2012

சப்பாத்திக் கள்ளி ... சமைக்கலாமா?


நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். இந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.  


சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும். சோற்றுக்கற்றாழைச் சாறும் மாத்திரைகளும் இங்கே கிடைக்கும்.  


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.  


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.


மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் (barbeque) என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.


புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, தக்காளி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் இதன் அடிப்படைச் சுவை கிடைக்கும். ஆனால் சிலருக்கு இதன் வழுவழுப்பு பிடிக்காமல் போகலாம். 

இந்தச் சப்பாத்திக் கள்ளியில் ெவண்டைக்காய்போல வழுவழுப்பு இருப்பதால் வெண்டைக்காயைப் பயன்படுத்துவதைப் போலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பச்சடி செய்யலாம், பஜ்ஜி போடலாம் (!) ... இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.


ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே.


++++++++++++++++++++++++++++++++++++++++++


1. சப்பாத்திக் கள்ளித் தாளை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும். மேலே இருக்கும் முள்ளைக் களைந்துதான் கடைகளில் விற்பார்கள். அதற்கும் மீறி முள் இருந்தாலும் இருக்கும். கைவிரல்களில் முள் குத்தாமல் பார்த்துக்கொள்ளவும்.



2. வேண்டிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.




3. வெண்டைக்காய் வதக்குவது போலவே வதக்கி எடுத்துக் கொள்ளவும் -- கடுகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி ... இன்ன பிற போட்டு.




குறிப்பு:  மேலே சொன்ன தயாரிப்பைத் தயிர் கலந்து பச்சடி செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் கலந்து சாப்பிடலாம்.


Wednesday, December 14, 2011

வான் வழிச் செலவில் உணவு ...

1. உணவு வந்தது ... . மேலே இருந்தவை "பரோட்டா"த் துண்டுகள்.




2. பிரி பிரி என்று அந்த அலுமினியத் தாளைப் பிரித்துப் பார்த்தேன். காராமணிப்பயறுபோல ஒன்று, பருப்புசாதம்போல ஒன்று, சுவை குலைக்கப்பட்ட பழுப்புக்கீரை, அதோடு உருளைக்கிழங்கோ எதோ ஒன்று.



3. ஏதோ ஒரு ஊறுகாயும் கிடைத்தது! உப்பு வேண்டாம் என்றால் இதைத் தொடக்கூடாது!



4. நல்ல சத்துள்ள உணவு ஒன்றும் கிடைத்தது.



5. பழம்/பாலடைக்கட்டி (cheese) வேண்டுமா? அதுவும் வந்தது.



6. தாதியரின் புன்சிரிப்பும் கிடைத்தது!



7. மொத்தத்தில் ... அருமையான ... செலவு அதிகமான ... பயணம்! இனிது, இனிது வாழ்க்கை தரும் வாய்ப்பு இனிது!

Friday, November 4, 2011

ஆர்ட்டிச்சோக் (artichoke) ...

என்ற ஒரு காயை 20 ஆண்டுகளுக்குமுன் நான் பார்த்ததில்லை.

கலியில் இது கடைகளிலும் கிடைக்கும், வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்க முடியும்.

இதைப் பற்றிய விவரம் இங்கே பார்க்கலாம்: http://en.wikipedia.org/wiki/Artichoke

சத்து நிறைந்த இந்தக் காய் விலை கூடுதலாக இருந்தாலும் ஒருமுறையாவது வாங்கிச் சமைத்துச் சுவைத்துவிடவேண்டும்!

உயர்தர உணவகங்களில் இதை ஒரு "அரும்பொருளாக"ச் சமைத்துப் பரிமாறுவதும் விற்பதும் உண்டு -- வறுவலாக, பொறியலாக, ஊறுகாயாக
 
++++++++++++++++++++++++++++++++

வீட்டில், எளிமையான முறையில், ஆர்ட்டிச்சோக் வேகவைத்துச் சுவைக்கும் முறை:

1. நல்லா குண்டு குண்டு-னு இருக்கிற காய் வாங்குங்க.


2. நுனிப்பகுதியை நறுக்கி எடுத்திடுங்க ...



3. ஒரு பெரிய சட்டிலெ நெறயத் தண்ணிவிட்டு, நறுக்கின காய்ப்பகுதிகளெப் போட்டு, ஒரு துணியையும் காய்க்குமேலெ மூடினமாதிரிப் போட்டு, வேகவச்சு எடுங்க. துணி போட்டு மூடுறது எதுக்கு-னா ... காய் வேகும்போது மிதந்து ஒரு பகுதி வேகாமப் போகாம சரியா வேகத்தான்.



4. அப்புறம்? வெளிப்புறத்திலெருந்து ... ஒவ்வொரு இதழ் இதழா ... பிரிச்சு எடுத்து ... நம்ம ஊர் முருங்கக்காயெச் சப்பி உறிஞ்சிச் சாப்பிடுவோமில்லெ ... அந்த மாதிரி ... பல்லாலே உருவி உள்ளெ இருக்கிறெ சத்தெ எடுத்துச் சுவைக்கணும்! :-) காம்பு/தண்டுப் பகுதி ரொம்ப நல்லாவே இருக்கும்! 

மீதிச் சக்கை இப்பிடி ... மிஞ்சும்! இது தோட்டத்து உரக்குப்பைக்குப் போகும்.


5. அது மட்டுமில்லெ ... . மதுரெக் கோயிலுக்குப் போறவங்க மொதல்லெ ஆடிவீதி சுத்திட்டு, அப்புறம் உள்ளெ போயி ... கருவறைக்குள்ள நிக்கிற மீனாட்சியெப் பாத்துக் கும்பிட மாதிரியே செய்யோணும்.

வெளிலெ சுத்தி இருக்கிற இதழ் எல்லாத்தெயும் கழட்டிட்டு (== அதாவது சவைத்துத் சுவைத்ததுக்கு அப்புறம்) உள்ளெ போகும்போது கொஞ்சம் நிதானமாப் போகணும். ஏன்னா ... உள்ளுக்கும் உள்ளெ இருக்கிற சத்தெச் சுத்தி பஞ்சுபோல, ஆனா, முள் இருக்கும். அந்த முள்ளெ எடுத்திட்டா ... உள்ளெ இருக்ற சத்தைச் சுவைக்கலாம்! :-)

உட்புறச் சத்தைச் சுற்றி முள் இருக்கும் பகுதிகள், இரண்டு காய்களிலிருந்து ...



முள் பகுதியை ... அப்படியே லாவகமா ... எடுத்திட்டா ... உள் சத்து தனியே கழண்டு வந்திடும்!

ஒப்புமைக்குப் பாருங்க ...


மேல் படத்தில் ... இடது பக்கம் இருப்பது உள் சத்து. வலது புறம் இருப்பது முள்.


6. சத்தான சத்தல்லவோ ...



குறிப்பு: இதில் உப்பு, உறைப்பு எதுவும் சேர்க்காமல் சுவைப்பதே எனக்குப் பிடிக்கும். அப்படியானால்தான் இதன் முழு antioxidant பயனையும் பெறலாம். உயர்தர உணவகங்களிலும் கடைகளிலும் கிடைக்கும் ஆர்ட்டிச்சோக் ... வேண்டுமானால் ... ஒரு மாலைப்பொழுது, ஒரு expensive date-உடன் தரலாம்; ஆனால் ... அதன் அடிப்படைச் சுவையும் பயனும் காணாமல் போய்விடும்! :-)  



Monday, October 24, 2011

தேன்குழல் ...

செய்தேனே ... !!

1. முதலில் ... பிள்ளையாருக்கு ... பிள்ளையார் மாவு ...



2. அச்சு வழியே பிழிபட்டு ... எண்ணெயில் மிதக்கும் குழல் ...



3. கர கர ... குழல்கள் ...




இங்கே முன்புறம் வெள்ளை வெளேர் என இருப்பதுதான் "அரை வேக்காட்டு"க் குழல்; மெது மெது என்று ... ஒரு "கிழவி"போல் தளர்ந்துபோய் ... மென்மையாக .... ஆனால் மிகவும் சுவையாக இருக்கும்!



வேறு வழியில்லாமல் ... சும்மா ... அரிசி மாவையும் உளுந்து மாவையும் கலந்து செய்தேன்! நல்லாவே வந்தது! வல்லவ[னு/ளு]க்குப் புல்லும் ஆயுதம்???

ஒரு பெரீஇஇய இது .. என்ன-னா ... இதிலெ வெண்ணெய் கலக்கவே இல்லே. வீகன் (vegan) முறை!


Saturday, October 22, 2011

இது ஒரு வகைப் பறங்கி ...

இதன் பெயர் butternut squash. தமிழில் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள்! :-)

இது இப்படி இருக்கும் -- சுரைக்காய் வடிவம், ஆனால் தடித்த தோலும் பறங்கிக்காய் போல மஞ்சள் நிறமான உட்புறமும் கொண்டது.



இதை இரண்டு பகுதியாக வெட்டி, "அவனுக்குள்" (oven) வைத்து, 350 degree சூட்டில் ஒரு மணி நேரத்திற்கும் சிறிது மேலாகச் சுட்டேன்.





பிறகு, ஒரு காகிதப் பையில் போட்டு ஆறவைத்தேன்.



வெளியே எடுத்து, தோலை உரித்து, உட்புறச் சத்தை எடுத்தேன்.



சுவை அருமை! இதை அப்படியே விழுங்கலாம்! அல்லது மற்ற வகைகளிலும் பயன்படுத்தலாம்!  
பிற பின்னர்! :-) :-) :-)

செஞ்சோளம்!

ஆமாம், பல வகைச் சோளம் இங்கே கிடைக்கும். பல இடங்களில் அவை காய்த்து முதிர்ந்த நிலையிலேயே கிடைக்கும்.  

இந்த முறை செஞ்சோள வகை ஒன்று ... காயாமல் பச்சையாகக் கிடைத்தது ... உழவர் சந்தையில் இல்லை, ஆனால் ஒரு நல்ல கடையில் ...


பிரித்துப் பார்த்தேன் ...

உரித்துப் பார்த்தேன் ....

செம்முத்து எடுத்துச் சேர்த்தேன் பிற காய்க் கலவையில்  ...
கண்ணுக்கும் கருத்துக்கும் சுவைக்கும் உடல் நலத்துக்கும் இனியது! இயற்கை அழகுக்கும் சுவைக்கும் நலத்துக்கும் நன்றி!