Sunday, May 8, 2011

செட்டிநாடு -- ஆத்தங்குடி


ஆத்தங்குடியில் வியக்கத்தக்க ஒரு வீடு ...

வீட்டின் முகப்பே ... வீட்டை இவ்வாறு, இப்படியெல்லாம் அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயலாற்றிய முன்னோரின் அறிவையும் கலையழகைச் சுவைத்த நுண்ணுணர்வையும் கட்டியம் கூறிப் பறைசாற்றுகிறது!


தலை தாழ்த்தி, காலை முன்வைத்து உள்ளே நுழைந்தால்  வாயிற்படியின் இருபுறமும் நல்ல நீள அகலத்துடன் நடைகள் (= தாழ்வாரங்கள்). ஒரு நூறு பேர் படுத்துறங்கலாம் போல!

தொடர்ந்து ... தரைக்கோலத்தின் வரவேற்பு!



தலை நிமிர்ந்தால், விட்டங்களின் பூரிப்பு!



விட்டத்தைத் தாங்கி நிற்கும் வலிய தூண்களின் பெருமித நிரை...



தூண்களின் போதிகை அரிய கலை நுணுக்கத்தின் வெளிப்பாடு...



நிலைக் கதவில் மரச் சிற்பங்கள். 'இது வீடா? கோயிலா?' என்று ஒரு நொடியாவது நினைக்காமல் இருக்கமுடியாது.




கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தால் ... 'வளவு!'



'ஆகா! இதுதான் "ஆதிகாலத்து ஒரிஜினல்" வளவா?! ஒருவாறாக இதை நேரில் பார்க்கக் கிடைத்ததே!' என்ற குதூகலத்துடன் உள்ளே போனால் ஒரு பெரிய 'நிலா முற்றம்' ... . கீழேயிருந்தே மேல்தளத்தையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டோம்.



வளவு ... பெரிய திறந்த வெளி; மேலே கம்பி போட்டுப் பாதுகாப்பு; வெயில் நுழையத் தடையில்லை. வளவின் துப்புரவான தரையில் அழகான கோலங்கள். இங்கேதான் இந்த வீட்டாருக்குத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்குமாம்.



திறந்த வெளியைச் சுற்றிலும் அகன்று விரிந்த நடை (= தாழ்வாரம்). வீட்டு மக்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒன்று என்று தனித் தனியாக அமைந்த இருப்பிடங்கள். தூண்களைத் தொட்டுப் பார்க்காமல் நகர முடியாது!


ஓர் இளம்பெண் தங்கள் இருப்பிடத்தின் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தார். 'உள்ளே போய் அந்த இடத்தைப் பார்க்கலாமா?' என்று கேட்டோம். 'ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்; கதவைத் திறந்து உள்ளே காட்ட நேரமில்லை; சன்னல் வழியே எட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

'சரி, நன்றி' என்று சப்பென்ற குரலில் சொன்னோம். ஆனால் ஏமாற்றத்தால் தலை குனியாமல் நிமிர்ந்து பார்க்கவைத்தது அந்த நடையின் மேற்கூரை!



இரண்டாம் கட்டுக்குச் சிறிதே இறங்கிப் போகணும். ஓஓ ... கைப்பிடி ஏதும் இல்லாத படிக்கட்டு!


இந்த இரண்டாம் கட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்று தனித்தனியாக ... அம்மி, ஆட்டுரல், பாத்திரம் கழுவும் இடம், துணி துவைக்கும் இடம் என்று பல கருவிகளும் இடங்களும் மிக நேர்த்தியாக அமைந்து இருக்கின்றன. ஒரு வீட்டார் அம்மியை, ஆட்டுரலை, துவைக்கும் கல்லை, இடத்தை ... இன்னொரு வீட்டார் பயன்படுத்த மாட்டார்களாம்; அவ்வளவு துல்லியமான ஒழுங்குமுறை!

ஒரு குடும்பத்துக்கு என்று வகுக்கப்பட்ட ஓர் இடத்தில் சமையல் பாத்திரங்கள் கழுவித் துப்புரவாகக் கவிழ்த்துவைக்கப்பட்டு இருந்த காட்சி கண்ணுக்கும் நெஞ்சுக்கும் விருந்து!

இந்தக் கட்டில் இருக்கும் தூண்களும் தரையும் முதற்கட்டு வாயில் வளவுகளில் உள்ள தூண்களையும் தரைகளையும் விட வேறுபட்ட தன்மையும் அமைப்பும் தோற்றமும் கொண்டவை. 

இந்தக் கட்டிலிருந்து தோட்டப் பகுதிக்குப் போகலாம். என்னால் போகமுடியவில்லை. பிறரை அனுப்பிவைத்தேன். அதன் பிறகு 'இன்னும் பார்க்கணும்; ஆனாலும் ... பார்த்தது போதும்' என்ற நிறைவுடன் வீட்டின் முன்வாயிலுக்கு வந்தோம்.

முன்வாயிலில் வீட்டின் முதல் உரிமையாளரின் பேரர், இன்றைய உரிமையாளர் ஒருவர்... . அவர் பின்னால் உள்ள நடையைப் பாருங்கள்!


கண்ணுக்கும் மனதுக்கும் நல்ல விருந்து கிடைத்தது! வீட்டின் தலைமுறைகளுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டோம்.

(அடுத்து இயன்றால் ... அமராவதிபுதூர்)

4 comments:

  1. என் அண்ணியின் அம்மாவீட்டிற்கு பங்காளிவீடு!

    இதே போன்று காரைக்குடியில் ஆயிரம் ஜன்னல் வீடு பார்த்தீர்களா அக்கா?

    //முன்வாயிலில் வீட்டின் முதல் உரிமையாளரின் பேரர், இன்றைய உரிமையாளர் ஒருவர்... . அவர் பின்னால் உள்ள நடையைப் பாருங்கள்!//

    நாங்கள் பட்டாலை என்போம். அவர் அமர்ந்திருப்பது வீட்டின் முன் பக்கம். இதை முகப்பு பட்டாலை என்றும் சில வீடுகளில் (எங்கள் வீட்டில்)இதேபோன்று வெளிப்பக்கமும் உள் பக்கமும் இரண்டு பக்கமும் இருக்கும் முறையே உள் பட்டாலை வெளிப்பட்டாலை என்போம். இங்கே காண்பது ஆ..று ஜன்னல்கள்! எங்கள் வீட்டில் இரண்டுதான் :))

    ReplyDelete
  2. ஆயிரம் ஜன்னல் வீடு! அது பூட்டியிருந்தது மீனா, அதனால் உள்ளே போகமுடியவில்லை. வெளியிலிருந்து எடுத்த படங்களைக் கூடிய விரைவில் பகிர்ந்துகொள்கிறேன், சரியா.

    ReplyDelete
  3. அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள் அம்மா. எத்துனை அழகான வீடு. இந்த காலத்தில் இது போன்று வீடுகள் பார்ப்பது அபூர்வம்.

    ReplyDelete
  4. 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தைப் பொறுத்தவரை செட்டிநாட்டில்தான் கட்டடக் கலை பெரிய அளவில் உண்மையான கலைக் க்ண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்டது.

    படங்கள் அருமை.. மறுபடி பிறந்தால் இப்படி யாராவது செட்டிநாட்டு ஒரே வாரிசாகப் பிறந்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete