Sunday, March 18, 2012

சப்பாத்திக் கள்ளி ... சமைக்கலாமா?


நம்மில் ஒரு சிலருக்காவது இந்தச் "சப்பாத்திக் கள்ளி' என்றால் என்ன என்று தெரியும். ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை ஒரு சிலராவது கவனித்திருப்பார்கள். இந்தப் பயிர் ஏதோ ஓர் உயிரினத்துக்காவது உதவுகிறது என்று நினைக்கிறேன் -- குறிப்பாக ஆடுகளுக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவரை, தமிழகத்தில் அதை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.  


சோத்துக்கத்தாழை/சோற்றுக்கற்றாழை (aloe vera) என்ற பயிரின் சாற்றை எடுத்துத் தலைமயிருக்குத் தடவுவதில் பயனுண்டு என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். புண்களை ஆற்றும் பயன் அதற்கு உண்டு என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும். சோற்றுக்கற்றாழைச் சாறும் மாத்திரைகளும் இங்கே கிடைக்கும்.  


சப்பாத்திக்கள்ளி என்பது வேறு. இதை இங்கே "நோபால்/நோபேல்" என்று சொல்கிறார்கள். இது மிகவும் சத்து நிறைந்த உணவாகத் தெரிகிறது. மேல் விவரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Nopal


வீட்டில் வளர்த்துப் பயன்படுத்தக்கூடிய ஒரு பயிர் இது.  


கலிபோர்னியாவில்தான் இந்தச் சப்பாத்திக் கள்ளியைக் கடைகளில் பார்த்து வாங்கிச் சமைக்கத்தொடங்கினேன்.


மெஹிக்கோ/மெக்சிகன் மக்கள் இதைப் பல வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஊறுகாய் போடுவதுபோல் இதை இவர்கள் சாலட் என்ற உணவு வகையாகவும், சுடுதல்/வாட்டுதல் (barbeque) என்ற வகையிலும், இன்னும் பிற வகையிலும் பயன்படுத்துகிறார்கள்.


புளிப்புச் சுவை பிடிக்கிறவர்களுக்கு இந்தச் சப்பாத்திக் கள்ளி பிடிக்கும். சும்மா ... நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, தக்காளி போட்டு, கடுகு தாளித்துச் செய்தால் இதன் அடிப்படைச் சுவை கிடைக்கும். ஆனால் சிலருக்கு இதன் வழுவழுப்பு பிடிக்காமல் போகலாம். 

இந்தச் சப்பாத்திக் கள்ளியில் ெவண்டைக்காய்போல வழுவழுப்பு இருப்பதால் வெண்டைக்காயைப் பயன்படுத்துவதைப் போலவே இதையும் சமைக்கலாம் -- கறி சமைக்கலாம், பச்சடி செய்யலாம், பஜ்ஜி போடலாம் (!) ... இப்படி. நான் பலமுறை இதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.


ஒரு வகைப் பயன்பாடு மட்டும் இங்கே.


++++++++++++++++++++++++++++++++++++++++++


1. சப்பாத்திக் கள்ளித் தாளை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும். மேலே இருக்கும் முள்ளைக் களைந்துதான் கடைகளில் விற்பார்கள். அதற்கும் மீறி முள் இருந்தாலும் இருக்கும். கைவிரல்களில் முள் குத்தாமல் பார்த்துக்கொள்ளவும்.



2. வேண்டிய வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.




3. வெண்டைக்காய் வதக்குவது போலவே வதக்கி எடுத்துக் கொள்ளவும் -- கடுகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி ... இன்ன பிற போட்டு.




குறிப்பு:  மேலே சொன்ன தயாரிப்பைத் தயிர் கலந்து பச்சடி செய்து சாப்பிடலாம். தக்காளியுடன் கலந்து சாப்பிடலாம்.


2 comments:

  1. ‘...ரயில்வண்டித் தடத்தின் இருபுறமும் இந்தச் சப்பாத்திக் கள்ளிகள் வளர்ந்து கிடப்பதை...’

    ~ இதன் பின்னால் ஒரு தாவரகீர்த்தியே இருக்கிறது. கலோனிய பிரிட்டீஷ்கார்ர்கள், ரயில்வே எம்பேங்மெண்டின் பக்கவாட்டில் சரிவுகள் ஏற்படுவதை தடுக்க இந்த சோத்துக்கத்தாழையை பயிரிட்டார்கள். திடமான அரவணைப்பு. நல்ல பிடிமானம். பழனி-கொடைக்கானல் மலைப்பாதை போடும்போது, தர்மமிகு தமிழ்நாட்டரசு கல்லும், மண்ணும், சிமெண்டும், எஃகும் கலந்து எம்பேங்மெண்ட் கட்ட தொடங்கியது. அது பணங்காய்ச்சி மரம்.

    ReplyDelete
    Replies
    1. சப்பாத்திக்கள்ளியைச் சாப்பிடலாம் என்பதை இன்று வரை கேட்டதில்லை. அதன் ஜெல்லியைத் தடவிக்கொள்வோம். ஓஹோ, அது வேறே, இது வேறே இல்லையா? குழம்பி விட்டேன். :)))))

      Delete