Tuesday, September 6, 2016

தமிழின் தொடர்ச்சிக்காக ...

தமிழின் தொடர்ச்சிக்காக ...  (1)

--------------------------------------------------------------


புலம்பெயர்ந்து குடிகொண்ட நாட்டில் தாய்மண்ணின் மொழியின் தொடர்ச்சிக்காக நான் மேற்கொண்டுவரும் முயற்சிகளுள் ஒன்று தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிப்பது. 

தனிப்பட்ட முறையில் செயல்பட்டுவந்தேன். சென்ற ஆண்டில் (அக்டோபர், 2015) முதன்முதலாகப் பொதுமன்ற அளவில் செயல்பட்டேன். திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் நடத்தினேன். நண்பர்கள் பலரும் மிக்க ஆர்வத்துடன் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தார்கள். 

இந்த ஆண்டு (செப்டெம்பர்-3, 2016) புதியவகை முயற்சியை மேற்கொண்டேன் -- இசை, இலக்கியம், இலக்கணம் இவற்றோடு கணினியையும் இணைத்துச் செயல்படும் ஆர்வலர்களை அறிமுகப்படுத்த விரும்பினேன். முயற்சி வென்றது!


எல்லாருக்கும் ...

நிறைந்தது வயிறு 
நிறைந்தது செவி 
மகிழ்ந்தது மனம் 
மலர்ந்தது முகம் 
குளிர்ந்தது உள்ளம் 
பருத்தது உடல் 

... ... ... 

"முன்காணாச்சோறு" (pot luck) என்று பெயர் படைத்தோம். யார் என்ன கொண்டுவருகிறார் என்று மற்றவருக்குத் தெரியாது. சமைக்கப்பட்ட உணவுகளில் 99% ஆடவர் பொங்கிக்கொண்டுவந்தவையே! (இது அன்னை சிவகாமியின் திட்டம்!) ஆகவே "முன்காணாச்சோறு" என்ற பெயர் நன்றாகப் பொருந்தியது. 

முதலில் வயிற்றைக் கவனித்துக்கொண்டோம். 

சோறு, புளியோதரை, சப்பாத்தி, உருளைக்கிழங்குப்பொரியல், வெண்டைக்கறி, பூசணிச்சாம்பார், காளான் மசாலா, பச்சைப்பயறு குழம்பு, மொச்சை மசாலா, எலுமிச்சை ரசம், காய்க்கலவை, பழக்கலவை, உப்புக்கொழுக்கட்டை, சிறுதானியக் குழிப்பணியாரம், மண்டி, அவல் இனிப்புப்பொங்கல், தயிர், அப்பளம், காப்பி, தேநீர், நொறுக்குத்தீனி ... என்று சங்கக்காலப் பண்ணன் சிறுகுடி-போல ஆரவாரத்துடன் ஆர அமர உண்டோம். 

பிறகு ஆரவாரமில்லாமல் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து.

தஞ்சைத்தமிழர் தில்லைக்குமரன் - நிர்மலா (ஊர் தெரியவில்லை) இணையரின் செல்வி யாழினியின் நல்லதொரு தமிழ்ப்பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. 





அடுத்து வேல்முருகன் என்ற இளைஞரின் தமிழ்ச்செங்கோவைத் தேடுபொறியின் அறிமுகம். 

தொடர்ந்து திருமிகு சற்குணா பாக்கியராஜ் அவர்கள் அன்றில் பறவையின் உண்மையான (இலக்கியத்தில் காணும் கற்பனையற்ற) நிலையை மிக அழகான படங்களுடன் விளக்கினார். அன்றில் பறவையின் இருவகைக் குரலையும் கேட்டோம்! 

பிறகு இளைஞர் ராஜா மணியவர்கள் தமிழ் யாப்பிலக்கணத்தை எளிமையாகக் கற்றுக்கொடுக்கும் மென்பொறியை இயக்கிக்காட்டினார்.

பத்துமணித்துளிகள் இடைவேளை.

சிவகாமி-சொக்கலிங்கம் இணையர் சில ஆண்டுகளுக்குமுன் தங்களுக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பில் (ஒரு மாதமே ஆன வெற்றிவேல் என்று பெயரிடப்பட்ட மகனை இழந்த) தங்களை இழக்காமல் தமிழ்நாட்டில் தாய்த்தமிழ்க்கல்வி பயிலும் சிறுவர்களுக்கு உதவும் வகையில் கான் அகடமிப் (KHAN Academy) பாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிவரும் தங்கள் வெற்றிவேல் அறக்கட்டளை பற்றிச் செவ்வையாக எடுத்துச் சொன்னார் முனைவர் சொக்கலிங்கம். இந்த இணையர் நமக்கு நல்ல வழிகாட்டி.

தொடர்ந்து ... காரைக்காலம்மையாரை நினைவூட்டும் வகையில் உடலாலும் உள்ளத்தாலும் சிவனில் தோய்ந்து உருகிவரும் செல்வி பொற்செல்வியவர்களின் இனிய திருவாசக இசை! பார்க்கவும் ஒரு யோகினி-போல இருக்கிறார். பழகுதற்குக் கனிவானவர். இசையில் உருகுகிறார். பிறரையும் உருக்குகிறார்.

ஆக, இவ்வளவு இனிய விருந்துக்குப்பின் ... என் பங்குக்கு இறையனார் களவியல் செய்தியொன்றைச் சொல்லித் தொல்காப்பிய நூற்பா ஒன்றை விளக்கினேன். 

ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் முகத்தில் அடித்தாற்போல் பிறர் யாரும் எழுந்துபோகவில்லை என்பது மகிழ்ச்சியான நாகரிகமான செய்தி! 

நிறைவுநிகழ்வாக ... காப்பி/தேநீர்/நொறுக்குத்தீனி.

சில படங்கள் இங்கே:

1. தீவிர ஆலோசனைக்குழு! திருமிகு செல்வியர் சற்குணா-சிவகாமி. இவர்களுடைய உதவியில்லாமல் என்னால் இந்த நிகழ்ச்சியைக் கற்பனை செய்திருக்கமுடியாது.



2. வேல்முருகனவர்களின் வெள்ளோட்டம்.



3. என் அருமை மாணவன் (இப்போது Ph.D, M.D!) விக்ரமின் தாய் திருமிகு மாலினி ஜானகிராமன். கணவர் செய்துகொண்டுவந்த புளியோதரையை எனக்கு ஒரு தட்டில் வைக்கிறார்.



4. பிறரைச் சுட்டிக் கையைக் காட்டிவிடும் கவிஞர் இவர், திரு தில்லி துரை!



5. தில்லிக்கவிஞருக்கு 'உபதேசம்' போதிக்கும் திரு குமார் குமரப்பன் + நண்பர்கள்.



பிற படங்களை எடுத்த செல்வி சாந்தி புகழ் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம்:

https://photos.google.com/share/AF1QipMxnNbXOeFcmHAi0sVWG38X7nByPvNSShXkr5dOwUBus4DWr2lG2QF0vKBQ8IEB6Q?key=R005UmNkSWlMeFBtS29BNmxkUWVuZmFiQ0FtbDdB 

முனைவர் சொக்கலிங்கம், அவர்மகள் செல்வி சுருதி ஆகியோர் எடுத்த காணொலிகளைக் கூடிய விரைவில் இணையத்தில் ஏற்றுவார்கள் என்று நம்புகிறேன்.


++++++++++

என் உடல்தெம்பு ஒத்துழைக்காவிட்டாலும் உள்ளத்து ஊக்கம் என்னை முற்செலுத்தியது. 

பலவகையில் மனநிறைவு. பலரும் முதல்முறையாக ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். வயிற்றுக்கும் செவிக்கும் கண்ணுக்கும் நல்ல விருந்து. இளையதலைமுறையையும் புதிய படைப்பாளர்களையும் ஊக்குவிக்க எனக்கு நல்லதொரு வாய்ப்பு. 

எல்லாவற்றுக்கும் மேலாக ... எல்லாரும் என் கடுமையான 'சட்டதிட்டங்களுக்கு' உடன்பட்டு ;-) ... தரையில் உட்கார்ந்து, ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது தங்களுக்குள் சளசளக்காமல், குறுக்கே பேசாமல், இடையில் எழுந்துபோகாமல், கைப்பேசி-போன்ற கருவிகளுடன் உறவாடாமல், ஒளிப்பதிவுக் கருவிக்குமுன் நடந்துபோகாமல், சிலை-போல் அமர்ந்து எல்லாப்படைப்பாளரையும் ஊக்குவித்தது ... எனக்கு மாபெரும் வெற்றி!!!

இளைஞர் வேல்முருகன் அண்மையில்தான் நெடுந்தொலைவில் புதுமனை புகுந்திருக்கிறார். ஒருமணி நேரத்துக்கும் மேலாக வண்டியோட்டி வந்து எல்லா நிகழ்ச்சிகளையும் திரையிட உதவி செய்தார். அதோடு நில்லாமல் ... 'அம்மா, நீங்க இணையக்குழுமங்களில் எழுதுவதைப்பார்த்துப் பயந்துபோயிருந்தேன். நேரில் பார்க்கும்போது அவ்வளவு கடுமையானவராத் தெரியவில்லை' என்று எதையோ சொல்லி என்னை உச்சிகுளிரவைத்துவிட்டார்!!! அதுக்காகவே அவருக்குக் கறிவேப்பிலைக் கன்று ஒன்று புதுவீட்டுத் தோட்டத்தில் வைக்கக் கொடுத்தனுப்பினேன். வாழ்க வேல்!  

நண்பர்களே, நீங்களும் உங்கள் இருப்பிடங்களில் இப்படியாகப்பட்ட கூட்டங்களை நடத்துவது தமிழுக்கு நல்லது, இளையதலைமுறைக்கு நல்லது.





4 comments:

  1. 'என் உடல்தெம்பு ஒத்துழைக்காவிட்டாலும் உள்ளத்து ஊக்கம் என்னை முற்செலுத்தியது.' எங்எளைப் போன்றோரை ஊக்குவிக்கும் வரிகள், செயல்பாடுகள். அருமை.

    ReplyDelete
  2. Very happy to know all these things. I pray God to keep you actively all over the year. Vaazhga Rajam Amma.

    ReplyDelete
  3. 'முன்காணாச்சோறு' பொருத்தமான பெயர். இதுபோன்று தமிழ் வழியான கருத்துரையாடல்களைப் பற்றிக் கேட்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. மிகச் சிறப்பான நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி நடத்தி அதை வெற்றி பெறவும் வைத்தமைக்கு வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    ReplyDelete