Sunday, March 13, 2011

என் மதுரை ...

எங்கள் குடும்ப நண்பர் ... நிழற்படக் கலை, வரைபடக் கலை இவைகளைத் தம் கண்ணிலும் கருத்திலும் கையிலும் வாங்கி, நம்முடன் பகிர்ந்துகொள்ளும் கொடையாளர் ... எல்லாவற்றிலும் மேலாக ... அன்பு உள்ளமும் இனிய பண்புமே வடிவானவர் ... இப்போது சென்னையில் வாழும் பழைய மதுரை மகன் ... திரு மனோகர் தேவதாஸ்.

மனோகரின் படைப்புகளுள் ஒன்று: Multiple Facets of My Madurai . முதல் பதிப்பு 2007. ISBN 13: 978-81-88661-62-6

அந்தப் படைப்பின் முகவுரைத் தொடக்கம்:

"This portfolio presents the city of Madurai in southern India through a collecion of intricately detailed pen and ink drawings with accompanying text. The book gives glimpses of the city's monuments and street houses, its temples and festivals, its surrounding countryside ... glimpses of the city's history, its traditions and its social ethos, often viewed nostalgically through the lens of my memory and art ... Above all this portfolio is an expression of one individual's love for his boyhood town."

பழைய கால (?!) மதுரையின் பல்வேறு சாயலைக் கண்ணையும் கருத்தையும் கவரும் 69 படங்கள் + விளக்கம் மூலம் வழங்கும் இந்தக் கருவூலத்திலிருந்து சில மணிகள் இங்கே...


1. நூலின் முதல் பக்கங்கள்









2. வடமேற்கு மதுரையில் ஒரு தெரு. நீர் மோர்ப் பந்தல்.



3. வடக்கு மாசி வீதியில் ...



4. மகாசதாசிவமூர்த்தி, 25 தலை 50 கைகளுடன் ...



5. அமெரிக்கன் கல்லூரி


இப்படிப் பல அழகு!


Monday, February 28, 2011

அது அந்தக் காலம் - 1

1981-இல். பெர்க்லி (Berkeley) பல்கலைக்கழக வளாகத்தில் ...   ஓர் இனிமையான சந்திப்பு!

திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி (Dravidian Etymological Dictionary) உருவாக்கிய திரு மரே எமனோ (Murray Emenau) அவர்களுடன்:


எமனோவின் கைப்பையில் ... அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ... திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியின் இரண்டாம் பதிப்புக்கான தாள்கள், கையெழுத்துத் திருத்தல்களுடன்.

Thursday, February 24, 2011

ஏவா வில்தனின் குறுந்தொகைச் செம்பதிப்பு!

சங்க இலக்கிய குறுந்தொகையைச் "செம்பதிப்பாக" (critical edition) மொழிபெயர்ப்போடு நமக்குத் தந்திருக்கிறார் முனைவர் ஏவா வில்தன்.

1. முதல் பகுதி



1. a: முதல் பகுதியின் அறிமுகம்



2. இரண்டாம் பகுதி



3. மூன்றாம் பகுதி



இந்தச் செம்பதிப்பைப் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழைக் கலையியல் ஆய்வு நிறுவனமும் (EFEO) தமிழ்மண் பதிப்பகமும்  இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.

ஏவா வில்தன் அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுக்கள்!

Sunday, February 20, 2011

பாராட்டு... பவளஸ்ரீக்கு ...

1. மங்கள நீராட்டி ச் செந்தூரப் பொட்டுவைத்து ...  





2. தலவாரிப் பூச்சூட்டி ...



3. தங்க ராக்குடியும் ...



4. திருவில்லைப் ("ஜடை வில்லை") பூவழகும் ...



5. செவிப்பூவின் பொலிவோடு ...



6. பவள வளை அழகு செய்ய ...





7. செங்கூறை உடுத்திவிட்டு ...



சீராட்டிப் பூரிப்போம்!!

Tuesday, February 15, 2011

வற்றல் குழம்பு ... - 2

இந்த வகை வத்தக் குழம்பு ("வற்றல் குழம்பு") மிகவும் எளிமையாகச் செய்யக்கூடியது.

தேவையானவை
---------------------
நல்ல புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
வத்தல் - 1 ~ 2 மேசைக் கரண்டி
துவரம் பருப்பு - 3/4 ~ 1 மேசைக் கரண்டி
சாம்பார்ப் பொடி - 3/4 ~ 1 மேசைக் கரண்டி
உப்பு - சிறிது
நல்லெண்ணெய் - 1 ~ 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
பச்சைக் கறிவேப்பிலைத் தழைக் குச்சி - 2
கடுகு - தாளிக்க
தண்ணீர் - 3 கோப்பைப் புளிக் கரைசல் உண்டாக்கத் தேவையான அளவு

செய்முறை
---------------
1. புளியைக் கழுவி, 3 கோப்பைக் கரைசல் வரும் அளவுக்குக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

நான் பயன்படுத்திய புளி:


தோடு நீக்கிய பிறகு ஊறும் புளி:


புளிக் கரைசல்:



2. வத்தலைக் கழுவி, ஈரப் பசை இல்லாமல் உலரவைத்து எடுத்து, சிறிது நல்லெண்ணெயில் வறுத்துத் தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.



3. ஒரு நல்ல பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவரம் பருப்பைப் பொன் நிறத்துக்குத் தாளித்துக்கொள்ளவும்.

4. அடுப்புச் சூட்டைத் தணித்துவிட்டு, தாளித்த பருப்பில் சாம்பார்ப் பொடியைச் சேர்த்துப் பருப்பின் இளம் சூட்டிலேயே அந்தப் பொடியை 1/2 மணித்துளி வைத்திருக்கவும்.

5. புளிக் கரைசலைப் பாத்திரத்தில் ஊற்றவும்.

6. உப்பு, ெருங்காயம் சேர்க்கவும்.

7. புளிக் கரைசலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். கரைசல் பொங்கி நுரைத்து வந்து பாதி அளவு வற்றும் வரை கொதிக்கவைக்கவும்.

8. வத்தலைச் சேர்த்துச் சிறிது நேரம் (5 மணித்துளிகள்) கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.



9. கடுகு தாளிக்கவும்.



குறிப்பு:
----------
+ இங்கே நான் பயன்படுத்திய வகைப் புளியின் அருமையான சுவையே தனி! வெல்லம் போன்ற பிற கலவைகள் இல்லாமல் வரும் புளி இது!

+ சாம்பார்ப் பொடி இல்லாவிட்டால் புளிக் குழம்புப் பொடி என்று கிடைக்கும் பொடியைப் பயன்படுத்தலாம்.

+ கைபடாமல் நல்ல முறையில் பாதுகாத்துவைத்தால் இந்தக் குழம்பு பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

வற்றல் குழம்பு... - 1

"வற்றல் குழம்பு" என்று எழுதுவதை "வத்தக் குழம்பு" என்றும் "வத்தக் கொழம்பு" என்றும் சொல்லலாம். அவரவர் விருப்பம்.

இது என்ன பெயர்? குழம்பை வற்றவைப்பதால் "வற்றல் குழம்பு" என்ற பெயரா? ஏதாவது ஒரு வத்தல் ("வற்றல்") போட்டுச் செய்வதால் "வற்றல் குழம்பு" என்ற பெயரா? -- இந்தக் கவலையெல்லாம் ... நேரம் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் பட்டுக்கொள்ளட்டும்!

வற்றல் குழம்பைப் பல வகையில் செய்யலாம். ஓரளவு எளிமையான முறையில் வற்றல் குழம்பு செய்யப் பார்க்கலாமா? அப்படி வற்றல் குழம்பு செய்யும் முறை ஒன்று இங்கே -- சுண்டைக்காய் வத்தல் போட்டுச் செய்தது.

 
தேவையானவை
---------------------
வத்தல் - 1 ~ 2 மேசைக்கரண்டி அளவு
நல்ல புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 ~ 3/4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி (அவரவர் சுவைக்குத் தக்கபடி)
சீரகம்  - 1/4 தேக்கரண்டி
விரளி மஞ்சள் - சிறிய ஒன்று
வத்தல் மிளகாய் - 2 (தேவையானால்)
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
பச்சைக் கறிவேப்பிலைத் தழைக் குச்சி - 2
கடுகு - தாளிக்க
நல்லெண்ணெய் - 1~2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 3 கோப்பை புளிக்கரைசல் எடுத்துக்கொள்ளத் தேவையான அளவு


செய்முறை (சுண்டைக்காய் வத்தல் போட்டது)
------------------------------------------------------------

1. சுண்டைக்காய் வத்தலை மண், தூசி போகக் கழுவி வடிகட்டி உலர்ந்த தாளிலோ அல்லது துணியிலோ பரத்தி உலர வைக்கவும். நான் பயன்படுத்தியது கடையில் வாங்கின வத்தல்.



2. கழுவியபின் உலர்ந்த வத்தலைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.




3. புளியைக் கழுவி நல்ல தண்ணீரில் கரைத்து 3 கோப்பை அளவுக்குக் கரைசலாக எடுத்துத் தனியே வைக்கவும்.  மண் ஏதாவது இருந்தாலும் சிறிது நேரத்தில் அது பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும்.

4. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு -- இவைகளைத் தனித் தனியாக, எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.



விரளி மஞ்சளை வறுக்கவேண்டாம்.



4. வறுத்த பருப்பு, வறுத்த மிளகு சீரகம், பச்சை (வறுக்காத) விரளி மஞ்சள் -- இவைகளைச் சேர்த்து மையாகத் திரித்துக்கொள்ளவும்.



5. ஒரு நல்ல பாத்திரத்தில் புளிக் கரைசலை ஊற்றி, மேற்சொன்ன பருப்பு-மிளகு-சீரகப் பொடியைக் கலக்கவும். சிறிது உப்பும் சேர்க்கவும்.

6. தேவையானால் ... 1~2 மிளகாய் வத்தலைக் கிள்ளி, புளிக்கரைசலில் சேர்க்கவும்.

7. புளிக் கரைசலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

8. புளிக் கரைசல் கொதிக்கத் தொடங்கி 5 மணித்துளிகளுக்குப் பின் வத்தலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.



9. சிறிது நேரத்தில் (அடுப்பின் சூட்டுக்குத் தக்கபடி) புளிக் கரைசல் கொதித்துப் பொங்கி நுரைத்து அளவில் குறைந்து ("வற்றி") வரும். பார்க்கவே அழகாக இருக்கும்! அவரவர் விருப்பத்திற்குத் தக்கபடி ... முதலில் கொதிக்கவைத்த புளிக் கரைசல் பாதிஅளவு குறைந்து வற்றி வரும்போது அடுப்பிலிருந்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.

10. கடுகு, பெருங்காயம், பச்சைக் கறிவேப்பிலை தாளிக்கவும்.



குறிப்பு:
---------

+ விரளி மஞ்சள் இல்லாவிட்டால் அதற்குப் பதிலாகச் சிறிது (1/4 தேக்கரண்டி அளவு) மஞ்சள் பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

+ மிளகின் காரமே போதும் என்று இருந்தால் மிளகாய் வத்தல் சேர்க்கத் தேவையில்லை.

+  இந்தக் குழம்பைக் கைபடாமல் நல்ல முறையில் வைத்திருந்தால் பலநாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்கும்.

+ (சோய்) தயிர்ப் பச்சடி, (சோய்) தயிர்ச் சோறு இவைகளோடு சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.

+ வத்தல்களில் பலவகை உண்டு.  Cranberry-யை வீட்டின் சிறு கொல்லைப்புறத்தில் காயவைத்து வத்தல் செய்தது:




+ இந்தப் பழம் தரும் புளிப்புச் சுவை வத்தல் குழம்புக்கு ஏற்றது. சிவப்பு நிறம் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனாலும் சுவை இருக்கும்.

பின்பனிக் காலமா? இளவேனிலின் அறிகுறியா?

இந்தப் பின்பனிக் காலத்தில் என் சிறிய கொல்லைப் புறத்தில் எனக்குக் கிடைத்த கொள்ளை...

1. குண்டு குண்டென ... கமீலியா (camellia) ...



2. முதல் மொட்டு ...



3. இரண்டாம் மொட்டு ...



4. மென் காற்றில் அசைந்துகொண்டே மாலை வெயிலுடன் உறவாடும் செர்ரி (decorative cherry) மரம் ... இலையும் பூவுமாய் ...