Saturday, March 28, 2015

கீரை -- பீட்ரூட் கீரை

பீட்ரூட் கீரையை மிக எளிய முறையில் பயன்படுத்துவது ...
--------------------------------------------------------------------------


இலை, தழை, கீரை வகைகளில் மிக நல்ல உயிர்ச்சத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கீரை வகைகளை ரொம்ப நேரம் சூடுபடுத்தி வதக்குவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.

கூடிய மட்டில் கீரை வகைகளைப் பச்சையாக அல்லது இளஞ்சூட்டில் சிறிதே வேகவைத்து உண்பதே நல்லது என்பதே ... மூத்தவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது.

+++++++++++++++++++

நேற்று ஒரு சில அன்பு நண்பர்கள் எதிர்பாராத வகையில் என் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த பல காய், பழம் இன்ன பிற பொருள்களில் ஒன்று பீட்ரூட் கிழங்கு தழையுடன்.

[நன்றி: கலிஃபோர்னியா விரிகுடாத் தமிழ்ச்சங்கத் தலைவர் (Bay Area Tamil Manram) திரு ஆறுமுகம் பேச்சிமுத்து + அமெரிக்க ஹவாயித்தீவில் வாழ்ந்துகொண்டு சங்க இலக்கியச் செறிவை உலகமுழுதும் பரப்பும் தொண்டு செய்யும் திருமதி வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கும்.]

இந்த இனிய தமிழரைப்பற்றி மேலும் அறிய:

http://www.bayareatamilmanram.org/about-us/committee.html

http://learnsangamtamil.com

+++++++++++++++++++

பீட்ரூட் தழையை அது வாடுமுன் உண்ணவேண்டும். அந்தக் கட்டாயத்தில் ... நான் செய்ததைக் கீழே சொல்கிறேன்.

1. பீட்ரூட் தழையை நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.

2. நீண்ட காம்புகளை அரிந்து தனியாக எடுத்து வைக்கவும். வேறுவகைச் சமையலுக்கு உதவும்.

3. காம்பிலிருந்து இலைகளைப் பிரித்து எடுத்து, விரும்பியபடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்; ரொம்பத் தூளாக வேண்டாம்.

4. நறுக்கிய இலைகளை அடி தடிமனான ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தேங்காய்த்துருவல் (1 மேசைக்கரண்டியளவு; 1 table spoon) கலந்து, மிகச் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கீரை குழையாமல் வேகவிடவும்.

5. கீரை குழையாமல் வெந்தவுடன் இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கீழே படம் பார்க்க:




குறிப்பு:

1. பச்சையாகவோ சமைத்தோ கீரைகளைப் பயன்படுத்தும்போது உப்பு வேண்டியதில்லை. விரும்பினால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

2. கீரையை வேகவைக்கும்போது குழையவிடாமல் சமைப்பது நல்லது.

3. மேலே சொன்ன முறையில் சமைத்த கீரையைச் சப்பாத்தி/ரொட்டி, சாதம்/சோறு ... இன்ன பிறவற்றோடு சேர்த்துச் சாப்பிடலாம்; தனியாகவும் சுவைக்கலாம்.



Saturday, February 28, 2015

காரட் -- வெள்ளைக்காரட்டும் ஆரஞ்சுநிறக்காரட்டும் 


சாதாரணமாகக் கிடைக்கும் இளஞ்சிவப்பு ஆரஞ்சுநிறக் காரட் எல்லாருக்கும் தெரியும். இந்தப் பதிவில் 'வெள்ளைக் காரட்' என்று நான் குறிக்கும் ஒரு காயை அறிமுகப்படுத்துகிறேன்.

இது ஆங்கிலத்தில் 'பார்ஸ்னிப் (parsnip)' என்று குறிக்கப்படும்.

இதன் படம்:





ஓ, அதென்ன பொத்தகம்? அதுவா. அது நான் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கிழித்துக்கொண்டிருக்கும் சங்க இலக்கியப் பொத்தகங்கள்; வையாபுரிப்பிள்ளையவர்களின் அருமையான பதிப்பு. என் துயர்தீர்க்கும் மருந்து. என் மேசையில் எப்பவும் இருக்கும். 




சரி, இந்த வெள்ளைக் காரட்டையும் நமக்குப் பழக்கமான மற்ற காரட்டையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். பல வகைகள் உண்டு. ஆனால் இங்கே ஒரு வகைச் செய்முறை.


கீழே காண்பது-போல் பார்செனிப்பைச் சீவிக்கொள்ளவும். தனிக்கோல் போல உள்ளது சீவ முடியாமல் நான் விட்டது. தனியே கடித்துச் சுவைக்கலாம்.





நமக்குத் தெரிந்த சாதாரணக் காரட்டையும் சீவிக்கொள்ளவும்.





மேற்சொன்ன இரண்டு சீவல்களையும் கலந்து, தேவையான அளவுக்கு எலுமிச்சைச் சாறும் உப்பும் கலந்து ... கொத்தமல்லித்தழையை மேற்போக்காகத் தூவவும்.





[என்னிடம் இருந்தது இத்தாலியக் கொத்துமல்லித்தழை -- பார்செலி!]

இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்துக்குக் கண்ணுக்கு உவந்த சத்துள்ள சுவையான எளிதில் உருவாக்கக் கூடிய உணவு.

[அபாய அறிவிப்பு: ஏற்கனவே இனிமை மிகுந்தவர்கள் மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளவும்.  சாதாரணக் காரட்டை விட, பார்செனிப்பில் இனிப்பு மிகுதி.]



Thursday, July 3, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5


8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 5

(தொடர்ச்சி)

தனிக்கட்டுரை வழங்க எனக்கென ஒதுக்கியிருந்த நேரத்தில் யான் ஆங்கிலத்தில் வழங்கிய கட்டுரையின் தலைப்பு Hyperlinked Presentation of Tamil Poems

அதாவது, ஒரு தமிழ்ச் செய்யுளின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு ஆகிய பகுதிகளைக் கணினியின் தொடுப்பு முறையால் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று விளக்குவதே இதன் நோக்கம்.

இதற்குக் கைக்கணினி தேவை, வெள்ளித்திரையில் வெளிப்படுத்த உதவும் கருவி தேவை. எனக்கு என்னென்ன கருவிகள் (hardware) தேவை என்று மாநாட்டு அமைப்பாளருக்கு எழுதி அவை கிடைக்குமா என்று கேட்டேன், கிடைக்கும் என்ற பதிலே வந்தது.

இங்கேயிருந்து நண்பர் ஜார்ஜ்-இடமிருந்து ஒரு கைக்கணினியைக் கடன்வாங்கிக் கொண்டு போய், தஞ்சையில் கிடைத்த கருவியுடன் இணைத்து வெள்ளித்திரையில் என் படத்தைக் காட்டினால் உருப்பட்டு வரவில்லை! [திருமணம் ஆன பிறகு மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் உடல் அமைப்பு ஒத்துவரவில்லை என்றதுபோல் ஆகிவிட்டது! இந்த நகையைச் சுவைக்க முடியாதவர்கள் என்னைத் திட்டாமல் மேலே படிக்காமல் அமைதியாக ஒதுங்கிவிடவும்!] அவ்வளவு பாடுபட்டு அவ்வளவு தொலைவு சுமந்து கொண்டு சென்ற கணினிக்குப் பயனில்லை. ரொம்ப வருத்தம். 

சரி, என்ன மென்பொருள் (software) பயன்படுத்தினேன், தெரியவேண்டுமா? ஆப்பில் நிறுவனம் வெளியிட்ட ‘தொடுப்பு அட்டை’ HyperCard (http://en.wikipedia.org/wiki/HyperCard) என்ற மிக அருமையான ஒன்று. அதைப் பயன்படுத்தி, நம்ம சங்க இலக்கியப் பாடல் ஒன்றை எடுத்து அந்தப் பாடலின் மூலம், சொல், பொருள், மொழிபெயர்ப்பு இவற்றைக் கணினிமூலம் எப்படி இணைத்துக் காட்டலாம் என்று நிரலமைத்து ('program பண்ணி') ஓர் அருமையான கட்டுரையையும் விளக்கத்தையும் தயாரித்து வைத்திருந்தேன். 

கணினி நிரலின் சிறப்பே குறிப்பிட்ட சின்னங்களைச் சொடுக்கித் தேவையான பக்கத்துக்குப் போவதே. இந்த வித்தையெல்லாம் அங்கே தஞ்சையின் வெள்ளித்திரையில் வெளிறிப்போச்சுங்க. :-(  

கட்டுரை விளக்கத்தின் முதல் பக்கப் படம் இங்கே:



மேற்காணும் படத்தில் கீழ்வரிசையில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சிறு படத்தையும்/பொத்தானையும் அழுத்தினால் அந்தந்த இடத்துக்குப் போய்த் தேடிவந்த விளக்கத்தைப் பெறலாம். 


கட்டுரை வழங்கிய மதுரைக்காரி:




(தொடரும்)

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 4


(தொடர்ச்சி)

1. பேராளர்கள் (delegates) தங்கிய இடத்திலிருந்து மாநாட்டுக் கட்டுரை வழங்கும் இடத்துக்குப் போக உதவிய வண்டிகள்.





2. யான் தங்கக் கொடுக்கப்பட்ட அருமையான 'சிக்'கென்ற கச்சிதமான வீடு. (அப்போதே அதை விலைக்கு வாங்கியிருக்கணும்! புத்தியும் பணமும் இல்லாமப் போச்சு!)




3. யான் தங்கியிருந்த வீட்டைப் பாதுகாத்து, அவ்வப்போது வந்து எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று  அன்பாகப் பேணியவர்.




(தொடரும்)




Wednesday, July 2, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 3
----------------------------------------------

(தொடர்ச்சி)

இரண்டாம் நாள் காலை. உறக்கமில்லாத நிலையில் எழுந்திருந்து பொதுவாழ்வுக்காகத் தயாராகி, தங்கியிருந்த வீட்டிலிருந்து சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு பெரிய கூட்டம். பிறபுல அம்மையார் (மலேசியா? சிங்கப்பூர்?) ஒருவர் “We have to boycott this conference” என்று ஆங்கிலத்திலும் மலேசியத் தமிழிலுமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். என்னவென்று தெளிவாகப் புரியவில்லை. அப்போது புரிந்துகொள்ள நேரமும் இல்லை. பின்னாளில் தெரிந்தது உண்மையோ இல்லையோ என்று தெரியவில்லை. பிற நாட்டுத் தமிழர் சிலருக்கு ‘வீசா’ கிடைக்காத நிலையாம். 

********************

யான் தங்கியிருந்த இடத்திலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு எங்களைக் கொண்டு செல்ல மிக நல்ல வண்டிகள். 

நல்ல பாதுகாப்பான வரவேற்பு. உள்ளே போனதும் அவரவர் விருப்பப்படி அரங்கங்களில் நுழைந்து செவிக்குணவு பெற்றோம். இடையூறுகள் குறைவு.

மாநாட்டைத் தொடங்கிவைத்த நிகழ்ச்சிகள் வெட்ட வெளியில், நல்ல பாதுகாப்போடு, அமைந்தன.

சில படங்கள் இங்கே:



1. மாநாட்டு அரங்குக்குப் போகும் வழி.





2. மாநாட்டு முகப்புப் பந்தல். 





3. மாநாட்டுக் காப்பாளர்.







4. முதல்வரின் திறப்புக்காகக் காத்திருக்கும் மக்கள்.








5. முதல்வரின் திறந்துரை. 



(தொடரும்)


Monday, June 30, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 2

கலிபோர்னியாவிலிருந்து நம்மூரில் ஓரிடத்துக்கு வந்து சேரக் குறைந்தது 24 மணி நேரம் ஆகும். சரி, ஒரு வழியாகச் சென்னை வந்தாயிற்று. சென்னையிலிருந்து தஞ்சைக்குப் போகும் விமானத்துக்காகக் காத்திருக்கும் இடத்தில் அன்பான குரல் ஒன்று அழைத்தது திரும்பிப் பார்த்தால் சிப்மன் (Harold Schiffman). அவருடன் இருந்த Burton Stein அவர்களை அப்போதுதான் நேரில் பார்த்தேன்; அதற்குமுன் எங்கள் எழுத்து மூலம் ஒருவருக்கொருவரைத் தெரியும். பயணக் களைப்பு சற்றே குறையத் தொடங்கியது. 


எங்களுக்காக என்று அமைந்திருந்த தஞ்சைப் பேருந்தில் பயணம். நடுவழியில் வண்டி ஓட முடியவில்லை. முதல்வரின் பயணத்துக்காகப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதாக ஏதோ காரணம். பிற பயணிகளுக்குச் சலிப்பு. பலருக்கும் தமிழில் உரையாடத் தெரியாது. வண்டியோட்டியிடம் கேட்டு நிலவரத்தைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு அமைதி சொன்னேன்! ;-) ஒரு வழியாக வந்த எல்லாரையும் வரவேற்று மாநாட்டுப் பதிவாளராக மாற்றும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். 


எங்கே எந்த ஊரில் இருக்கிறோம் என்ன நேரம் என்றெல்லாம் தெளிவாகத் தெரியாத விமானக்களைப்பு. ஆனாலும், தள்ளுகிள்ளு இல்லாமல் (!!) வரிசையில் நின்று எமக்குத் தரப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோதுதான் மீனா வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரே உவகைக்கலுழ்ச்சி! யான் கொண்டுபோயிருந்த கணினி, கணினி சார்ந்த பொருட்களைப் பார்த்துவிட்டுப் பாதுகாப்புக்காக ஒரு பூட்டை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார்! நட்பென்றால் நட்பு! அதன்பின் பழைய புதிய நண்பர்கள் எல்லாருடனும் பேசி மகிழ்ந்த இடம் சாப்பாட்டுக் கூடமே

எனக்கு விமானப் பயணம் ஒத்துக்கவே ஒத்துக்காது. ஏற்கனவே தூங்காமை (insomnia, sleep apnea) என்ற நிலை. விழித்த நிலையிலும் மூச்சுவிட மறந்திடுவேன்; கண் மூடி உறங்க முயலும் நேரத்தில் மூச்சு விடவா நினைவிருக்கும்! இந்த நிலையில் எப்போது முடியுமோ அப்போது உறங்குவேன். ஆனால் மாநாடு நடந்த நாட்களில் காலை 3~4 மணிக்கேமார்கழித் திங்கள்” ஒலிபெருக்கிகளில் அலறியது. அதோடு, காலைக்கடன்களில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் வீட்டு வாயிற்கதவை யாராவது ஓங்கி ஓங்கித் தட்டி ஏதாவது அழைப்பிதழ் ஒன்றைக் கொடுப்பார்கள். 

முதல் நாளில், சரி சரியென்று சமாளித்து, காலைச் சாப்பாட்டுக்காகக் கூடத்துக்குச் சென்றபோது கணினி போன்ற பொருள்களை எடுத்துக்கொண்டு புடைவை தடுக்க யான் நடந்து போவதை ஓர் இளைஞர் பார்த்துவிட்டு உதவி செய்தார். மாநாடு முடியும்வரை அவர் செய்த அந்த வகை உதவியை என்னால் மறக்கவே முடியாது. 

தங்குவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வீடு மிகவும் அருமையானது. ஒவ்வொரு வீட்டையும் தங்கியிருப்பவரையும் பார்த்துக்கொள்ள ஒருவர். இவர் படமும் வரும்.

ஒரு பெரிய குறை கணினிப் பயன்பாடு பரவாத காலம் அது; அதனால் யான் எடுத்துச் சென்ற கருவிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த முடியவில்லை. கைத்தாளிலிருந்து கவிதை படித்த மாதிரி ஆகிவிட்டது என் கட்டுரை வழங்கல். இதன் விளக்கமும் படமும் வரும்.


ஒரு கொதிப்பு. வட்டமேசை போல ஒரு நிகழ்ச்சி. பங்குபெற்றவர் சில தமிழர் + பல தமிழரல்லார். என்னருகில் தமிழரல்லார் ஒருவர் (பெயர் குறிப்பிடத் தயக்கம்). ஒரு பேச்சாளர் தம் உரையில் இடையிடையே ‘சங்க இலக்கியம்’ என்ற குறிப்பை உதிர்த்தார். என் பக்கத்து நாற்காலிக்கார வெள்ளையர் ’Sangam, again!?’ என்று என் காதுபட முணுமுணுத்தார். என் கொதிநிலையை வெளிப்படுத்தப் பொதுமன்றம் ஏற்றதன்று! ஏன்தான் ஒரு தமிழச்சியாய்ப் பிறந்தேனோ, சிறுமை கண்டு பொங்கும் என் கொதிப்பே வாழ்க்கையாகிவிட்டது. கடவுளே. எனக்கும் அமைதி கொடு. 

**********************

சில படங்கள்


உல்ரிக்கெ (?) + ஆஸ்கோ




ஆஸ்கோவுடன் ...






அன்பாக விருந்து பரிமாறியவர்கள் 








சாப்பாட்டுக் கூடத்தில் என்னை ஒட்டிக்கொண்ட சில கல்லூரிப் பெண்கள். பிற பலரின் படமும் இருக்கு. 





பிற பின்னர். 

Sunday, June 29, 2014

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1

8-ஆம் உலகத் தமிழ் மாநாடு - பகுதி 1
----------------------------------------------

வணக்கம். 9-ஆம் உலகத் தமிழ் மாநாடு நடக்கப்போவது பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி. 

எந்தவொரு பகட்டும் இல்லாமல் அறிவுசார்ந்த மாநாடாக இதுவும் நடக்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.

1995-இல் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் சிறப்புப் பேராளராக அழைக்கப்பட்டிருந்தேன், சென்று இரண்டு அரங்கங்களில் என் பங்கினை வழங்கிப் பெருமிதம் அடைந்தேன்.  

பழைய நண்பர்களின் தொடர்பு மீட்சி, புதிய நண்பர்கள், எனப் பல நாட்கள் ஓடின. 

ஆனால் எல்லாத் தொடர்புமே நாங்கள் தங்கியவிடத்திலும் சாப்பிடும் இடத்திலும் மட்டுமே. மற்றபடி அவரவர் அவரவருக்கு என்று கொடுக்கப்பட்ட தனி வீடுகளில் (!உண்மை) தங்கி, குறிப்பிட்ட சிற்றஞ்சிறு பல்கலைக்கழக அறைகளில் போய் எங்கள் கட்டுரைகளை வழங்கினோம்.  

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பல; இருந்தாலும் ஒன்றிரண்டை மறக்க முடியாது. ஆஸ்கோ பார்ப்பொலாவும் அலெக்சான்டர் துபியான்ஸ்கியும் என்னைத் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு அப்போதுதான் சில ஆண்டுகளுக்குமுன் (1992) வெளியான என் நூலைப்பற்றி பல நல்ல சொற்கள் சொல்லி என்னைப் பாராட்டியது! இன்னும் சில வெள்ளையரும் வந்து பாராட்டினார்கள், ஆனால் அவர்களின் பெயரும் முகமும் மறந்து போச்சு! ஒரு பெண்மணி என்னிடம் வந்து ‘நீங்கள் எழுத்தாளர் சிவசங்கரியா?’ என்றார்கள்! சிரிப்பும் மகிழ்வுமாக நாட்கள் கடந்தன.


மாநாட்டில் எடுத்த படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இணையத்துக்கு ஏற்றபடி அமைத்துப் பகிர்ந்துகொள்கிறேன்.


1. நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்தின் முன்வாசலில். 





2. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயில். 







3. சாப்பாட்டுக் கூடத்தின் முன் வாயிலில் என் தோழி மீனாவும் யானும்.





4. சாப்பாட்டுக் கூடத்தில் ...









பிற பின்னர்.

(தொடரும்)