Thursday, January 13, 2011

போளியா?

போளி -- pOLi

ஆமாம், இது ஒருவகையில் போளியே! அவசரப் போளி, "போலிப் போளி" என்றுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எனக்குக் கவலையில்லை!

எப்பவும் கேள்விப்படும் போளிக்கும் இதுக்கும் என்ன வேறுபாடு? 

வேறுபாடு உண்டு!

1. இந்தப் போளியைச் செய்ய எண்ணெயோ நெய்யோ தேவையில்லை!

2. அடுப்பில் வைத்துப் போளியைச் சுடவேண்டிய தேவை இல்லை!

தேவையானது என்ன?

கடலைப்பருப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெல்லம், தேங்காய்ப்பூ, அரிசி அப்பளம் போல் கிடைக்கும் அரிசி மாவுத் தாள் (rice paper).

அரிசி மாவுத் தாள் (rice paper):


ஒரு தாள் தனியாக எடுத்தது:


போளியின் மேல் மாவுக்குப் பதிலாக இந்த அரிசித் தாள்!

************************************************************
செய்முறை
---------------
1. கடலைப் பருப்பைக் கழுவி உலர்த்தி வறுத்து ஊறவைத்துத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

2. ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.  

3. அரைத்த கடலைப் பருப்பில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கைக் கலந்துகொள்ளவும்.

4. ஒரு பங்குப் பருப்பு-கிழங்குக் கலவைக்கு 1 ~ 2 பங்கு வெல்லம் (அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி) பொடியாக எடுத்துக்கொள்ளவும்.

5. வெல்லத்தில் மண் தூசி துரும்பு இல்லாவிட்டால் நேரடியாகவே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கலாம். தூசி துரும்புடன் கூடிய வெல்லமாக இருந்தால், தேவையான அளவு தண்ணீரில் கரைத்து மெல்லிய பாகு காய்ச்சி ... மண், தூசி, துரும்பு இல்லாமல் தெளிய எடுத்துக்கொள்ளவும்.

6. மேற்சொன்ன வெல்லத்தையும் 1/2 கோப்பைத் தேங்காய்த் துருவலையும் பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்கவும்.  


7. ஒரு நல்ல பாத்திரத்தில் மாவு-கிழங்கு-வெல்லம்-தேங்காய்க் கலவையைப் போட்டு, மிதமான சூட்டில் போளியின் உள்ளே வைக்கும் பூரணத்தின் பதம் வரும்வரை கிளறவும்.
 
8. சிறிது ஏலக்காயைப் பொடித்து மேற்சொன்ன கலவையில் சேர்க்கவும். விரும்பினால் மிகச் சிறிய அளவு பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.



9. இரண்டு அரிசித் தாள்களை எடுத்து மிதமான சூடு உள்ள வெந்நீரில் 3 ~ 5 நொடிகள் (seconds) நனைத்து ஒரு தட்டின் மேல் பரத்தவும். இது நனைந்த அரிசி அப்பளத்தின் பதத்தில் இருக்கும்.

10. நனைந்த அரிசித் தாள் வட்டத்தின் நடுவில் ஒரு சிறு எலுமிச்சை அளவு பூரணத்தைவைத்து நான்கு புறமும் மூடவும். இதைக் கொழுக்கட்டை போலவும் செய்யலாம். போளி போலவும் செய்யலாம்.
 
11a.  கொழுக்கட்டை போலச் செய்தவை: 



11b. போளி போலச் செய்தவை, வட்டமான போளி, சுருள் போளியுடன்:

குறிப்பு:
---------
எண்ணெய், நெய் தேவையில்லை. ஆகவே தேவையில்லாத (பாம்பு, பன்றி போன்ற) விலங்குக் கொழுப்புக்கு இங்கே இடமில்லை.
 
மேல் மாவு மெல்லிது; அதனால் அரிசியின் மாவுச்சத்தும் குறைவு.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்ததால் வெல்லத்தின் அளவைக் குறைக்க முடிந்தது. கிழங்கின் நார்ச்சத்தும் கிடைத்தது!

இங்கே நல்ல வெல்லத் தூள் கிடைத்தது. அதை அப்படியே பருப்பு-கிழங்குக் கலவையில் சேர்க்க முடிந்தது; பாகு காய்ச்சவில்லை.

தேங்காய்த் தூளுக்குக் கூட ... உலர்ந்த துருவல்தான்.

அரிசித் தாளைக் குழாயிலிருந்து வரும் வெந்நீரில் நேரடியாகப் பிடித்துச் சிறிது நனைத்ததே போதுமானதாக இருந்தது!

இப்படித்தான் ... ஒப்புக்குச் சப்பாணியான "போலிப் போளி"யை அவசரமாகச் செய்தேன்! மனத்துக்குச் சுமையில்லாமல் ... குற்ற உணர்வு இல்லாமல் ... சாப்பிட்டுச் சுவைக்க முடிந்தது! :-)


4 comments:

  1. 1. "...ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து மசித்து எடுத்துக் கொள்ளவும். ...' இது ராஜம் புகுத்திய நுட்பம்.

    2. இது 'போலிப்போளி' அன்று. என்.எஸ்.கே. ஸ்டைலில் சொன்னால், இது 'நாகரீகப்போளி'.

    ReplyDelete
  2. இதில் இரண்டாம் வகை (வட்டமாகவும், நீளமாகவும் இருப்பது) -- பாசிப்பயறும் சேப்பங்கிழங்கும் கலந்து செய்தது. விளக்கி எழுத நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  3. என்ன ஆச்சரியம்?? போனவாரம் தான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு/தேங்காய், வெல்லம் போட்டு போளி செய்தேன். ஒரு நல்ல செய்தி கிட்டியதைக் கொண்டாட. ஆனால் மற்றச் செய்முறைகள் வழக்கமான போளி முறையிலேயே. இந்த முறை புதியது. இப்படி அரிசியில் ஒரு தாள் இருப்பதும் இப்போது தான் தெரியும்.

    பாசிப்பயறு, சேப்பங்கிழங்கு?? தெரியாது. அதுவும் புதுசு தான். நேரம் கிடைக்கும்போது கூறுங்கள்.

    ReplyDelete