Thursday, August 4, 2011

திருப்பூவணம் -- 1 -- வரவேற்பு

வைகைக் கரைக்கு அருகில் இருக்கும் திருப்பூவணக் கோயில் மிகவும் அழகான, துப்புரவான கோயில்.

கோயிலில் நுழைந்தவுடன் வரவேற்புத் தருகிறவர்கள் இதோ; பெயர்ப்பலகை தென்படவில்லை. அதனால் ... சும்மா ... படம் மட்டும் பிடிச்சேன்.  



1. "ஒழுங்கா அமைதியா இரு" என்று சொல்வது போல் ...




2. நாயக்கரும் அவர் பட்டத்தரசியும்


3. "எங்களையும் பிடியுங்க" என்று ஒருவகை நாணத்தோடு கேட்ட பிஞ்சுகள். படத்துக்காக இதுகளைச் சிரிக்கவைக்கப் பெரும்பாடு! இந்தக் கோயில் துப்புரவாக இருப்பதற்கு இந்தக் குழந்தைகளின் தொண்டுதான் காரணம் என்று முனைவர் திரு. காளைராசன் சொன்னார். வாழ்க இவர்கள் தொண்டு! இவர்கள் நலமாக இருக்கவேண்டும்; இவர்கள் வாழ்வு எல்லாவகையிலும் நலம் பெற்றுச் சிறக்கவேண்டும்!


4. பொன்னனையாள். நடனப் பெண். இவளைப் பற்றிய செய்தியைப் படத்தின் கீழே படிக்கலாம்.


கொரியாவில் இருக்கும் தமிழ் ஆர்வலர், அறிவியல் வல்லுநர், முனைவர் நா. கண்ணன் திருப்பூவணக்காரர். அவரிடமிருந்து கேட்ட செய்தி:

"சிவன் ஊரில் சித்தர் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். என்பை மலராக்கிய ஊர். வாதவூராரை ஆற்றைக் கடக்கமுடியாவண்ணம் சிவலிங்கக் கடலாக ஆற்றுக்கு அடியில் பரப்பிவைத்த ஊர். திருவிளையாடல் புராணத்தில் பாண்டியனுக்கு மதுரை எல்லையைக் காட்டிய ஊர். அங்கே பொன்னனையாளுக்குச் சித்துக் காட்டியது என்ன பெரிய அதிசயம்?
இவளோ பூவணத்தெம் புனிதனாரின் மீது காதல் கொண்டு அலைகிறாள். ஒரு பொன் விக்ரகம் செய்து பார்க்க ஆசை? எங்கே போவாள் அவ்வளவு பொன்னிற்கு? இவளென்ன பட்டமகஷியா? ஏங்கித்தவித்திருக்கும் வேளையில் ஒரு சித்தர் வாயிலில் வந்து நிற்கிறார். இவள் அன்னதானம் செய்கிறாள். மகிழ்ந்து போன சித்தர் "உன் வீட்டிலிருக்கும் பித்தளை, வெங்கலப்பாத்திரத்தையெல்லாம் காட்டு!" என்கிறார். இவள் மரியாதையுடன் எல்லாவற்றையும் கொண்டு வந்து காட்டுகிறாள்.
ஓம்! நமச்சிவாய! ஓம்! நமச்சிவாய! ஓம்! நமச்சிவாய!
திருநீரை அள்ளி வீசுகிறார். பாத்திரமெல்லாம் பொன்னாய் மாறி ஜொலிக்கிறது.
ஐயா! என்ன வித்தையிது? எதற்காக என்கிறாள்?
நீதானே ஆசைப்பட்டாய்! பொன் விக்ரகம் செய்ய வேண்டுமென்று? என்று சிரித்துக்கொண்டே வெளியேறிவிடுகிறார்.
இவள் மலைத்துப் போய் நிற்கிறாள். பித்தளையைப் பொன்னாய் மாற்றியவனுக்கு இவள் உள்ளக்கிடக்கை எப்படித்தெரிந்தது என்று இவளா கேட்பாள்? அடுத்த நாளே உற்சவ விக்ரகம் தயாராகிவிடுகிறது.
விக்ரகம் சித்தன் போலில்லை. மன்மதன் போலிருக்கிறது. அப்படியே இவள் உச்சிமுகர, இவள் கொஞ்சிய நகக்கண் வடு மட்டும் பெருமான் வதனத்தில் தங்கிவிடுகிறது."

4a. கோயிலுக்குள்ளே இவள் சிவனுடைய கன்னத்தைக் கிள்ளிய சிலை ...





4b. இவள் சிவனுடைய "கன்னத்தைக் கிள்ளிவிட்டாள்" என்ற செய்தியை இக்காலத்துச் செய்தித்தாளில் அச்சடித்துச் சட்டம் போட்டு மேலே காணும் சிலையின் அருகே மாட்டியிருக்கிறார்கள். கண் பார்வை மங்கியவர்களால் இந்தச் செய்தித்தாளைப் படிக்கமுடியாது. அருகே விளக்கு ஏதாவது ஒன்றை வைக்கச்சொல்லி விண்ணப்பம் செய்தேன் அங்கே வந்த அர்ச்சகரிடம்.


பிற பின்னர்.



No comments:

Post a Comment