Friday, August 5, 2011

புடைவைகள் ... பலவிதம் ...

ஒவ்வொன்றும் ஒருவிதம்!


இது ... சுபா, கீதா, பவளஸ்ரீ, கமலம் அனியத்தி, இன்னும் இணையத்தில் உள்ள பெண் நண்பர்களுக்காக ஒரு special பதிவு!
மத்தவங்களும் பார்க்கலாம், பாக்கணும். வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிக் கொடுக்கத் தெரிஞ்சுக்கணுமே! :-)

கீழே உள்ள படங்களில் புடைவைகளின் நிறங்கள் நன்றாக அமையவில்லை. ஊரில் பெரும்பாலான வீடுகளில் (பக்கத்து வீட்டுச் சுவர்கள் மறைப்பதால்) இயற்கை ஒளி உள்ளே வராதது ஒரு பெரிய குறை. என் சின்னஞ் சிறிய மின்படக் கருவிக்கு இதற்குமேல் நல்லா வேலெ செய்யத் தெரியலெ. :-(
+++++++++++++++++++++++++++++++++++++

1. மதுரைச் சுங்குடி (சுங்கடி?). குஜரத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் குடியேறிய சௌராட்டிரர்களின் தொழில் திறமைக்கு இவை நல்ல எடுத்துக்காட்டு

முன்பு: இந்தச் சுங்குடிப் புடைவைகளைச் செய்த முறைபற்றிக் கேள்விப்பட்டது: கையால் சிறு சிறு நூல் இழைகளைத் துணியில் கட்டி, துணியைச் சாயத்தில் தோய்த்து உலர்த்தி எடுக்கும்போது, துணியை உதறினால் கட்டிய நூல் இழைகள் சிதறி விழ, அவை கட்டப்பட்ட இடங்களில் சாயம் தோயாத வட்டங்கள் அமையும். (என் பழைய காலச் சுங்குடிப் புடைவைகளைச் சேர்த்துவைக்காதது தவறு என்று தோன்றுகிறது. ஆவணமாகவாவது அமைந்திருக்கும்.) 
இங்கே இருப்பது இந்தக் காலத்து முறையில் அச்சில் இட்ட வட்டங்கள்!



இன்று: கைவேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை, அதனால் எந்திரத் தறியில்தான் அச்சுப் போடுகிறார்கள் என்று சொன்னார்கள்.







2. காரைக்குடிப் புடைவைகள். கைத்தறியில் நெய்த, மெது மெது என்ற பருத்திப் புடைவைகள். எத்தனை முறை தோய்த்துத் தோய்த்துக் கட்டிக்கொண்டாலும் உறுதி குறையாதவை. செட்டிநாட்டாரின் தொழில் திறமைக்கு நல்ல எடுத்துக்காட்டு.



3. பட்டுப் புடைவைகள். எல்லாருக்கும் தெரிந்தது. எடுத்துச் சொல்லவேண்டிய தேவையில்லை. இங்கே கோயிலுக்குக் கொடுப்பதற்காக ஒருவர் கேட்டிருந்தார். அவருக்காகப் புடைவைகள் வாங்கிய கடையும் வாங்கிய சில புடைவைகளும். 


இந்த எல்லாத்தெயும் அப்றம் இன்னும் சிலதும் வாங்கிட்டு ... எல்லாப் பட்டுகளையும் (கோயிலுக்கு என்று கேட்டவருக்குக் கொடுக்க) பருத்தியில் இரண்டும் (சும்மா ஆசைக்காக) எடுத்துக்கொண்டு வந்தேன். மீதியை ஊரிலேயே ஒரு மாணவி வீட்டில் வைத்துவிட்டு, எல்லாரும் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். நான் சொன்னபடி அவர்கள் கேட்கவேண்டும்! :-) இல்லாவிட்டால் அடுத்த முறை போகும்போது அவர்களுக்குத் திட்டு விழும்! :-)

7 comments:

  1. அப்பாடா! மூச்சு வந்தது! மத்தவங்களும் பார்க்கலாம் என்ற உரிமத்தைக் கண்ட பிறகு. அழகை ஆராதனை செய்பவர்களும், எழிலுக்கு தொழுகை நடத்துபவர்களும் நிச்சயமாக இந்த புடவை சித்திரங்களை வரவேற்பார்கள். இந்த செளராட்டிரர்களை மதுரையிலும் பார்த்திருக்கிறேன்.கும்பகோணத்திலும். பவநகர், ஜாம்நகரிலும். மென்மையான கவின் சுவையும், கலையும், திறனும்.
    புடவை என்றாலே முந்தானை, பல்லு, கரை, ஜரிகை: கலைக்களஞ்சியம். எனக்கு ஒரு அச்சமுண்டு.

    ReplyDelete
  2. என் அச்சம்: ப்ளோஸ் மேட்ச்சிங்க் அலைச்சல்!

    ReplyDelete
  3. ஆமாம், இ சார். நீங்க சொல்ற அந்தக் காலத்துலெ ... நானும் என் தோழிகளும் சட்டைத் துணிகளுக்காக அலையோ அலை என்று அலைஞ்சிருக்கோம்.

    இப்பல்லாம் ... புடைவையோடெ அதுக்கேத்த சட்டைத் துணியும் சேத்து வச்சு விற்கிறார்கள். ஆனா ... அந்தத் துணி அளவு எல்லா உடலுக்கும் சட்டை தைக்கப் பொருந்தாது. :-(

    வேடிக்கை என்னன்னா ... நாமா, தனியா, எவ்வளவு நெறய அளவு துணி வாங்கிக் குடுத்து ... கையை இவ்வளவு நீளமா வை, கழுத்துப் புறத்தை இப்படி ஆழமாக (மார்பகம் தெரியும்படி) தைக்காதே, இடுப்புத் தெரியவேண்டாம், ... இன்ன பிற வேண்டுதல்கள் விடுத்தாலும்
    ... அரையும் குறையுமாத்தான் சட்டை தைத்து வந்து சேருகிறது.

    இதுக்குப் பதிலா ... எனக்கு வேண்டியபடி ... உடல் உறுப்புக்களை மறைக்கும் என்னோடெ
    மேலைநாட்டு உடுப்புக்களே மேல். கழுத்துக்குக் கீழே யாரும் என் உடல் தசையை / சதையைப் பார்க்க முடியாது! ...க்கும் (ஹரியின் மொழியில்!)

    ReplyDelete
  4. அன்பின் ராஜம் அம்மா,

    அப்பப்பா.......அம்மா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கலக்குறீங்களே..அதுதான் ராஜம் அம்மா........

    புடவையெல்லாம் சூப்பர். இந்த காட்டன் புடவை கட்டுகிற சுகமே அலாதி.....ஒரு கம்பீரம் வரும் பாருங்க.....கஞ்சி போட்டு விரைப்பா அப்படி கட்டினா, அந்த அழகுக்கு ஈடு இணையான வேறு ஆடை ஏது.. நீங்க காட்டியிருக்கும் புடவைகள் ரகங்கள் என்னிடம் பல இருக்கிறது அம்மா. சில புடவை அதே நிறத்தில் உள்ளது. அந்த வெண்மை நிறம் கப்பிக் கொட்டை கலர் பார்டரில் உள்ளது. வெண்மை நிறம் என் மனம் கவர்ந்த நிறம். அந்த வண்ணத்தில் நல்ல புடவை கண்டால் வாங்காமல் வர மனம் துடிக்கும். நன்றி அம்மா. நீங்கள் திரும்ப வந்துவிட்டீர்கள்.நம் சபை கலக்கும்.

    ReplyDelete
  5. பல நாட்கள் கழிச்சு இணையம் வந்தால் புடைவை, ரவிக்கையுடன் வரவேற்பு. :))) நன்றி அம்மா. அருமையான புடைவைகள். அநேகமா எல்லாக் கலரும் கட்டியாச்சு. அதான் ஒரு பெரிய வருத்தம். :))) என் கணவருக்கு உனக்குப் புடைவை எடுக்கக் கலர் தேடறதே பெரிய வேலைனு கிண்டல் பண்ணுவார். :))))

    மஸ்டர்ட் அரக்கு பார்டருக்குப் பதிலாப் பச்சை பார்டர் போட்டது தான் இப்போக் கட்டி இருக்கேன். நீங்க சொல்றாப்போல் கையால் எல்லாம் இப்போப் போடறதில்லை. குஜராத் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் அஜ்மேர் மதார் கேட்டிலும் மட்டும் இப்படிக் கையால் போட்ட முடிச்சுக் கட்டிப் போட்ட புடைவைகள் கிடைக்கின்றன. பாந்தனி என்ற பெயரில். அதுவும் நாம் கலர், பார்டர், முந்தி செலக்ட் பண்ணிச் சொன்னதும் போட்டு, இஸ்திரி பண்ணிக் கொடுப்பாங்க. சுடச் சுட வாங்கிக் கட்டின அநுபவம் உண்டு. கணவரிடமும் தான். :)))))))

    ReplyDelete
  6. அருமை!கருததும் படங்களும்!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
  7. Enjoied the written article very much.Hopes to see more of this type of informative blogs.
    SK.

    ReplyDelete