Thursday, August 25, 2011

கம்பு, தினை, கேழ்வரகு ... என்னவெல்லாம் செய்யலாம்?


மொதல்லெ ... இது எல்லாத்தெயும் சேத்து என்ன செய்யலாம் என்பது.
 
1. ஒரு கிண்ணம் கம்பு எடுத்துக்கோங்க.

2. அரைக் கிண்ணம் தினை எடுத்துக்கோங்க.

3. அரைக்கால் ~ கால் கிண்ணம் கேழ்வரகு எடுத்துக்கோங்க.

4. அரைக்கால் ~ கால் கிண்ணம் முழு உளுந்து எடுத்துக்கோங்க.

5. கம்பு, தினை, கேழ்வரகு, உளுந்து எல்லாத்தெயும் ... தனித் தனியாகப் புடைத்து எடுத்து ... கல், மண், தூசி, துரும்பு இல்லாமெ ... தட்டி எடுத்து, கழுவி, தனித்தனியா ஊறவைங்க.

வெப்பம் இருக்கும் இடத்தில் இதெல்லாம் சீக்கிரம் ஊறிடும். ஆனா, இங்கெ உளுந்தைத் தவிர மத்ததெயெல்லாம் 10 மணி நேரம்போல ஊறவைக்கவேண்டிவந்தது.

6. ஊறின பிறகு உளுந்தைத் தனியாகவும் மத்தது எல்லாத்தெயும் சேத்துப் போட்டும் நல்லா இட்டிலி மாவு பதத்துக்கு அரைச்சுக் கலக்கி, புளிக்கவைங்க.  இதுலெ ... கேழ்வரகு மட்டும் நல்லா அரைபடவே படாது! அதுனாலெ அதெத் தனியா அரெச்சு எடுத்துக்க முடிஞ்சா செய்ங்க.7. அவரவர் இருக்கும் ஊரின் வெப்பத்தைப் பொருத்து இந்த மாவு புளிக்கும். ஆனால் பொங்கிவரும்போல் தோன்றவில்லை.8. சிறிதளவு உப்புச் சேர்க்கவும்.

9. பிறகு இந்த மாவிலிருந்து என்ன என்ன செய்யலாம்?

9a. தோசை செய்யலாம் ...

9b. இட்டிலி செய்யலாம். அரைபடாத கேழ்வரகு முழி முழி என்று முறைத்துக்கொண்டிருக்கும்.9c. வேற மாவு ஏதாவது சேர்த்து, களி போலக் கிண்டிப் பிடி கொழுக்கட்டை செய்யலாம். இங்கே நான் சேர்த்தது teff என்ற மாவு.
9d. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய், சிறிது வெங்காயம் கலந்து ... குழிப் பணியாரம் செய்யலாம்.9e. குழிப்பணியாரத்தெத் தயிர் வடை போலத் தயிரில் போட்டும் சாப்பிடலாம்.
குறிப்பு: முழுக் கேழ்வரகு ரொம்ப அடம் பிடிக்கும். சரியாக ஊறாது, அரைபடாது. அதனால் ... கேழ்வரகைத் திரித்து அதன் பிறகு ஊறவைத்தோ, அரைத்தோ பார்க்கலாம். ஒருமுறை யாரோ கொடுத்த கேழ்வரகு மாவில் ஒரே மண். அதனால்தான் முழு தானியத்திலிருந்து எல்லாம் செய்யப் பார்த்தேன். இனி வேறு வகையில் முயற்சி செய்யவேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கம்பு அடை செய்யவேண்டுமானால் ...

1. ஒரு கிண்ணம் கம்பு எடுத்துக்கோங்க.

2. ஒரு கிண்ணத்தில் -- கால் பங்கு துவரம்பருப்பு, அரைக்கால் பங்கு கடலைப்பருப்பு, அரைக்கால் பங்கு பாசிப்பருப்பு, அரைக்கால் பங்கு முழு உளுந்து எடுத்துக்கோங்க.

3. கம்பைத் தனியாகவும் மத்த பருப்பு வகைகளைத் தனியாகவும் தூசி துரும்பு தட்டி, கழுவி ஊறவைக்கவும்.

4. ஊறிய கம்பு, பருப்புகள் எல்லாத்தெயும் சேத்து அடைக்கு அரைப்பதைப்போல், அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி ... கொரகொரப்பாகவோ, நன்றாக மசித்தோ ... அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.

5. தேவையானால், சிறிது உப்புச் சேர்த்து இரண்டு மணி நேரமாவது புளிக்கவைக்கவும்.

6. விரும்பினால் ... கொஞ்சம் தேங்காய்ப்பூ, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாத்தெயும் புளித்த மாவில் கலந்து ... அடையாக ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.

முறுமுறுப்பாக ...எண்ணெய் ரொம்ப ஊற்றாமல் ...
அரிசி சாப்பிடக்கூடாதவர்கள் இந்த வகை உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்குமேல் விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


4 comments:

 1. 'அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தை செய்யலாம்?...'
  ~ ஸர்.பி.ராஜகோபாலாச்சாரி: திருவிதாங்கூர் திவான்.
  'இட்லியும் செய்யலாம்; தோசையும் செய்யலாம்; குழிப்பணியாரமும் செய்யலாம்; அடையும் செய்யலாம்! இட்லி மாவு பதம் வராததற்கு என்னத்தை செய்யலாம்?'
  ~ இன்னம்பூரான

  ReplyDelete
 2. கேழ்வரகை ஊறவைக்காமலே மாவு அரைத்து அதிலே களி கிளறி பின்பு உருண்டையாக உருட்டி நீர் மோரிலோ அல்லது அரிசிக்கஞ்சியிலோ போட்டு ஒன்றிரண்டு நாட்கள் போய் சாப்பிட்டால் ஆகா.

  கேழ்வரகை ஊறவைக்க முடியாது. களி கிளறி அப்படியே சாப்பிட்டாலும் பலருக்கு ஒத்துக்காது. ஜீரணக்கோளாறுகள் வரும். அதனாலே தான் இந்த முறை.

  வயிறு திடமாக இருப்பவர்களுக்கு சுடு களியும் கீரைக்குழம்பும் அருமையான துணை. இல்லையேல் சின்னவெங்காயமும் மோரில் ஊறிய களியை தயிர் ஊற்றி கரைத்தது.

  ReplyDelete
 3. கம்பு அடை நீங்க சொல்றாப்போல் தான், கேழ்வரகை ஊற வைத்து முளைக்கட்டி அரைச்சு வைச்சுக்குவோம். இங்கே மாவு மெஷின் இருக்கிறதாலே அது முடியும், அங்கே கலியில் நீங்க ஊற வைச்சு முளைக்கட்டி நீர் ஊற்றி அரைச்சுப் பாருங்க. முளைக்கட்டியதைப் பதினைந்து நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், என இங்கே இரண்டு மூன்று ந்யூட்ரிஷியன்களைக் கேட்டப்போ சொன்னாங்க. தேவைப்படும்போது எடுத்துக்கலாம்.

  கேழ்வரகு வெல்லதோசை, உப்பு தோசை இப்படி ஊற வைச்சு அரிசிமாவு, கொஞ்சம் போல் தேங்காய், உப்பு,மிவத்தல், பெருங்காயம், வெல்லதோசைக்கு வெல்லம், தேங்காய் சேர்த்து அரைத்துச் செய்யலாம். இதுவும் அடிக்கடி உண்டு.

  ReplyDelete
 4. அம்மா முதலில் உங்களுக்கு ஒரு ஓஹோ.....போடனும்! எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறீர்கள்.

  எனக்குத் தெரிந்த ஒரு டயட் பாசிப்பயறு அடை. இதில் அரிசி சேர்க்காதலால் நான் அடிக்கடி செய்வேன். முழு கோதுமை பாசிப்பயறு (முளை கட்டிய பயறு அதிக விசேசம்) இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதில் ஊற வைத்த வெந்தயம் 2 ஸ்பூன் மற்றும் பூண்டு 7, 8 பல், சிகப்பு மிளகாய் இவையனைத்தும் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்பும், பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து அடையாக வார்க்கலாம். தொட்டுக் கொள்ள பச்சையாக வெங்காயம் போட்டு துவையல் அரைத்தால் அருமையாக இருக்கும்.

  வெங்காயத் துவையல் : சின்ன வெங்காயம் என்றால் சுவை கூடும். சிகப்பு மிளகாய், புளி பச்சை கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு வைத்து அரைக்க வேண்டியதுதான்.....சுவையுடன், ஆரோக்கியமும் கூடும்.

  ReplyDelete