Tuesday, August 9, 2011

பாயசம் -- தினைப் பாயசம் ...

செய்யத் தேவையான பொருள்கள்:
------------------------------------------

தினை - ஒரு கிண்ணம்

பாசிப் பருப்பு - 1/4 கிண்ணம்

கருப்பட்டி - ஒரு சின்ன ~ பெரிய கட்டி (அவரவர் தேவைக்குத் தகுந்தபடி)

தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்

குங்குமப் பூ - 3 இழை (அல்லது அவரவர் விருப்பம்)

பொடித்த ஏலக்காய் - விரும்பிய அளவு

உடைத்த முந்திரிப் பருப்பு, எண்ணையோ நெய்யோ இல்லாமல் வறுத்தது - விரும்பிய அளவு

++++++++++++++++++++++++++++++++++++++++

இதுவரை பார்க்காதவர்களுக்காகத் தினை, கருப்பட்டியின் படங்கள், இதோ ...

தினை
--------




கருப்பட்டி
-------------






தினை-கருப்பட்டிப் பாயசம் செய்முறை:
-----------------------------------------------

1. தினையை நன்றாகப் புடைத்துச் சுத்தப்படுத்தி இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளவும்.





2. வறுத்த தினையைத் திரிவையில் போட்டு உமி தனியாக வரும்வரை திரித்து, சலித்து எடுத்துக் கொள்ளவும்.



3. சலித்து எடுத்த தினையை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

3a. வெந்த தினையில் இன்னும் கப்பி / திப்பி / கோது இருந்தால் அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.



4. அரை மூடித் தேங்காயைத் துருவிப் பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.





5. பாசிப் பருப்பைக் குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

6. கருப்பட்டியை, ஒன்றுக்கு மூன்று பங்களவு தண்ணீரில் கொதிக்கவைக்கவும். கம்பிப் பாகுப் பதம் தேவையில்லை. கருப்பட்டி கரைந்து நல்ல கொதி வந்தால் போதும். கொதித்த கருப்பட்டியை மண்ணும் தூசியும் போக வடிகட்டித் தெளிந்த சாற்றை எடுத்துக்கொள்ளவும்.

7. வெந்த தினை, வெந்த பாசிப்பருப்பு, கொதித்த கருப்பட்டி எல்லாவற்றையும் கலந்து சிறிது நேரம் -- அந்த மூன்று சுவையும் கலந்தது தெரியும்வரை -- கொதிக்கவிடவும்.



8. அடுப்புத் தீயை அமர்த்திவிடவும்.

9. கொதித்த கலவையில் தேங்காய்ப் பாலை ஊற்றி, இருக்கும் அடுப்புச்சூட்டிலேயே சிறிது நேரம் வைத்திருக்கவும். வேண்டுமானால் இன்னும் சிறிது நேரம் கொதிக்கவிடலாம்.

10. விரும்பினால் ... பொடித்த ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை (கொடி முந்திரி, பெயர் நினைவிருக்கா?) ... எல்லாம் சேர்க்கலாம். இங்கே நான் சேர்த்தவை உலர்ந்த கருப்புத் திராட்சையும் பைன் பருப்பும் (pine nuts).




அவரவர் உடல் நலத்துக்கு ஒத்துக்கொள்ளும் அளவிற்கு எடுத்துக்கொண்டு, சுவைத்து உண்டு மகிழவும்! :-) வெள்ளைச்சீனியைவிடக் கருப்பட்டி பரவாயில்லை என்று கேள்வி.





4 comments:

  1. இரண்டாம் யுத்தக்காலத்தில், உசிலம்பட்டியில் அரிசிக்குப் பஞ்சம். தண்டவாளங்களை, தளவாடங்கள் செய்ய, பெயர்த்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். பெட்ரோல் பஞ்சம். ஆக மொத்தம் போக்குவரத்து குறைவு. ஆனால், கம்பு, கேழ்வரகு, சோளம், தினை கிடைக்கும். முதலில் கேழ்வரகு சேர்ந்தது. பிறகு மற்றைவை. அம்மா செய்த தினைப்பாயசம் கன ஜோர். நீங்கள் சொன்ன முறை என்று தான் நினைக்கிறேன். கருப்பட்டி தான் உசத்தி, முருகனுக்கு பிடித்தது.

    ReplyDelete
  2. சுவையான பாயசம், நாங்க சாப்பிட்டதில்லை. ஆனாலும் தினை மாவையும் கருப்பட்டியையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றபடி கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சோள தோசை எல்லாம் அம்மாவும் பண்ணுவாங்க. நானும் அவ்வப்போது செய்வேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  3. where can I get தினை எங்கு கிடைக்கும் ? really difficult to get in regular stores .. do you have any idea where I will get in chennai or Bangalore.

    ReplyDelete
  4. தென்மாவட்டங்களில் தினை கிடைக்கிறது. சென்னையில் நவதானியக் கடைகளில் கேட்டுப்பார்க்கலாம். அல்லது நாட்டு மருந்துக் கடைகள், கதர் கிராமோத்யோக் பவனம் போன்ற கடைகளில் கேட்டுப் பார்க்கலாம். பெங்களூரிலும் அவ்வாறே கேட்டுப் பார்க்கலாம்.

    ReplyDelete